புலிகளுக்கு தேவையானதை சுமந்திரனும் சாணக்கியனும் செய்கிறார்கள்; இவர்களைபோல் ரணில் முட்டாள் அல்ல

புலிகளுக்கு தேவையானதை சுமந்திரனும் சாணக்கியனும் செய்கிறார்கள்; இவர்களைபோல் ரணில் முட்டாள் அல்ல

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கலந்துகொண்டிருந்தது.

இதன்போது, தொல்பொருள்கள் எனக்கூறி வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை, தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்து வருவதைக் கண்டித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுந்தொனியில் அதிகாரிகளுக்கு எச்சரித்திருந்தார்.

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க பதவி விலகியிருப்பது இலங்கையில் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

இந்த பதவி விலகலைத் தொடர்ந்து சிங்கள கடும்போக்குவாதிகள் பலரும் ஜனாதிபதி மற்றும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்த சிங்கள கடும்போக்குவாதியான டான் பிரசாத்,

“சுமந்திரனும், சாணக்கியனும் புலிகளுக்கு தேவையான சதி வேலைகளையே இலங்கையில் செய்கிறார்கள். இன, மதவாதப் பிரச்சினையை உருவாக்கி மீண்டும் நாட்டில் பிரிவினைவாதத்தை தோற்றிவிக்கப் பார்க்கிறார்கள்.

தொப்பிகல காட்டில் பௌத்த சிங்கள தொல்பொருள்கள் காணப்படுகின்றன. தற்போது இக்காட்டை நாசம் செய்து அத்துமீறி பலர் அங்கு குடியேறியுள்ளனர்.

இந்நாட்டின் இடங்களை ஆயுதங்களைப் பயன்படுத்தி பிரபாகரன் பறிக்கப் பார்த்தார். இதனை இராணுவ வீரர்கள் தடுத்தனர். பிரபாகரன் செய்ததைப் பாராளுமன்ற வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி சுமந்திரனும், இராசமாணிக்கமும் செய்யப் பார்க்கிறார்கள்.

வடக்குக், கிழக்கு மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை அவர்கள் கேட்கிறார்கள். அதனை வழங்க முடியாது.

சுமந்திரன், சாணக்கியன் போல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒன்றும் முட்டாள் அல்ல. அவருக்கு இந்நாட்டின் புராதான சின்னங்கள் தொடர்பில் நன்கு தெரியும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து விலக்கி, தங்களுக்கு தேவையான ஒருவரை நியமிக்கும் அளவுக்குப் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் இருக்கிறது.” எனவும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )