
தமிழ் எம்.பி.க்களின் சந்திப்பில் கடுமையாகச் சாடிய ஜனாதிபதி; தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ராஜினாமா !
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளான நீங்கள் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ளாமல் செயற்படுகின்றீர்கள் நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்று கற்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? ‘ என்று அதிகாரிடம் கடுந்தொனியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பிய நிலையில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தனது இராஜிநாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் காணப்படும் 229 ஏக்கர் காணியை விடுப்பதற்கான கடிதத்தை வழங்குவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்திருந்தார்.
எனினும் இதுவரையில் அதற்கான பதில் வழங்கப்படவில்லை என வடக்கு பிரதிநிதிகளால் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த பணிப்பாளர் நாயகம் , ‘எனக்கு அந்த விடுவிப்பதில் பாரிய சிக்கல் காணப்படுகிறது.’ எனக் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட ஜனாதிபதி அது அமைச்சரவையின் கொள்கை. அதனை தொல்பொருள் திணைக்களம் பின்பற்ற வேண்டும் என்று ஜனாதிபதி கடுந்தொனியில் கூறியதோடு , அடுத்த முறை இவ்வாறு தேசிய கொள்கையை பின்பற்றாமைக்கு காரணங்களை முன்வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றும் எச்சரித்தார்.
அத்துடன் விகாரையொன்றை அமைப்பதற்கு 275 ஏக்கர் நிலப்பரப்பை எடுத்தால் அது மகா விகாரையை விடவும் பெரியதாகிவிடும். மகா விகாரை, தியதவனாராமய மற்றும் அபய கிரி உள்ளிட்ட அனைத்து விகாரைகளை இணைத்தால் 100 ஏக்கர் காணப்படும்.அவ்வாறெனில் இவற்றை விட பாரிய விகாரையை அமைப்பதற்காகவா நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்று கற்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? என்று ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்.
அவ்வாறெனில் இவற்றை விட பாரிய விகாரையை அமைப்பதற்காகவா நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்று கற்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? என்று ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதற்காக பொது மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பதற்கு இடமளிக்க முடியாது. தேசிய கொள்கைகளை தொல்பொருள் திணைக்களம் பின்பற்ற வேண்டும்.ஒரு விகாரைக்கு 220 ஏக்கர் நிலப்பரப்பு உரித்துடையதாகக் காணப்படும் என்று நான் நினைக்கவில்லை என்றார்.
இதன்போது பொது மக்களின் 3000 ஏக்கர் காணியை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது. பனாமுரே திலகவன்ச என்ற தேரரே தற்போது அந்த காணியை ஆக்கிரமித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. இரா.சாணக்கியன் இதன் போது சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டிருந்த கிழக்கு தொல்பொருள் பாதுகாப்பு செயலணியின் உறுப்பினராக அந்த தேரர் செயற்பட்டதாக அதிகாரிகள் இதன் போது தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி , ‘அந்த செயலணி தற்போது செயற்பாட்டில் இல்லையல்லவா? அத்தோடு அந்த செயலணிக்கு அரசாங்கத்தின் காணியையோ அல்லது தனியாரின் காணியையோ ஆக்கிரமிக்க முடியாது. இதில் என்ன சட்ட முறைமை காணப்படுகிறது? வனப்பகுதிகள் உங்களுக்கு உரித்தானதில்லையல்லவா?
திரியாயவுக்கு எதற்காக 3000 ஏக்கர் காணி தேவைப்படுகிறது? திரியாய் என்பது விகாரையல்ல. முன்னயை காலங்களில் அது துறைமுக மையமாகும். அந்தப் பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க இந்து கோவிலொன்றும் காணப்பட்டது. எனவே அங்கு தேரர்களால் வைக்கப்பட்டுள்ள கற்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன் போது பணிப்புரை விடுத்தார்.
இவ்வாறான நிலையிலேயே தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.
“தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தனது இராஜிநாமா கடிதத்தை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், கடிதத்தின் பிரதியும் தனக்குக் கிடைத்துள்ளதாகவும் அவர் இராஜிநாமா செய்வதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை” என்று புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

