மாகாண சபைத் தேர்தலை நடத்தாவிட்டால் 13ஐ ரத்துச் செய்யுங்கள்

மாகாண சபைத் தேர்தலை நடத்தாவிட்டால் 13ஐ ரத்துச் செய்யுங்கள்

காலவரையறையின்றி நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் அல்லது 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக இரத்துச் செய்து மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சிவில் விமான சேவை சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

தேர்தல் ஒன்றை நடத்தாமல் மக்கள் ஆணையை தீர்மானிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகின்றார்..அரசியல்வாதிகளுக்கு சாதகமான நேரத்தில் தேர்தலை நடத்தினால் முறையற்ற மக்களாணையே வெளிப்படுத்தப்படும்.

நிதி நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.உள்ளுராட்சிசபைத் தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்பட வேண்டும்.இந்த தேர்தலை பிற்போட்டால் எமது கட்சி உட்பட சகல அரசியல் கட்சிகளும் ஏதாவதொரு வழிமுறையில் பாதிக்கப்பட நேரிடும்.

தற்போது மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் ஆளுநர்களினால் நிர்வகிக்கப்படுகின்றன .அரசியலமைப்பு ரீதியில் ஆளுநர்களின் நிர்வாகம் இடம்பெற்றாலும் அது முறையற்றது.மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் ஊடாகவே நிர்வகிக்கப்பட வேண்டும்.மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தற்போது தான் மாகாண சபைகள் வெள்ளை யானை போல் செயற்படுகின்றன.

எனவே காலவரையறையின்றி நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் அல்லது 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும்.

இதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்த ஜனாதிபதி விரும்பினால் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.ஆகவே பொதுத்தேர்தலை நடத்த ஜனாதிபதி விரும்பினால் பாராளுமன்றத்தை கலைத்து புதிய அரசாங்கத்தை உருவாக்கலாம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )