யாழில் இரவோடு இரவாக 200 பனை மரங்கள் அழிப்பு; பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவிப்பு

யாழில் இரவோடு இரவாக 200 பனை மரங்கள் அழிப்பு; பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் தனியார் ஒருவரால் இரவோடு இரவாக 200 பனை மரங்கள் தறிக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அபிவிருத்தி குழுத் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

யாழ் மாவட்டத்தில் தீவகப் பகுதிகளில் பனைவளம் அழிக்கப்படுவது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அல்லைப்பிட்டியில் தனியார் ஒருவரால் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றை கட்டுவதற்காக இரவோடு இரவாக 200 பனைகள் தறித்து எரிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது எழுவைதீவு பகுதியில் தனியார் காணிகளில் உள்ள பனைகள் தறிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதன்போது அபிவிருத்தி குழு தலைவர் அமைச்சர் தேவானந்தா, பனை அபிவிருத்தி சபை அதிகாரியை பதிலளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதன் போது பதில் அளித்த பனை அபிவிருத்தி சபை அதிகாரி கடந்த வருடம் 10 ஆயிரம் பனைகளை தறிப்பதற்கான கோரிக்கைகள் தமக்கு கிடைக்கப் பெற்றதாகவும் அதில் 3ஆயிரம் கோரிக்கைகளை நிராகரித்ததாகவும் 7 ஆயிரம் பனைகளை தறிப்பதற்கான அனுமதியை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இதன்போது கேள்வி எழுப்பிய அமைச்சர் டக்ளஸ்,7ஆயிரம் பனைகளை தறிக்க ஏன் அனுமதி வழங்கினீர்கள் எனக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த அந்த அதிகாரி, சிலர் வீட்டு திட்டங்களுக்காக தமது சொந்தக்காணியில் உள்ள பனைகளைத் தறிப்பதற்கு அனுமதி கேட்டார்கள் சிலர் தமது தனியார் காணிகளில் உள்ள பனை மரங்களை தறிப்பதற்கான அனுமதி கேட்டார்கள் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், யாழ் மாவட்டத்திலுள்ள அழிக்கப்படும் முக்கியமான வளங்களில் ஒன்றான பனை வளத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )