
குற்றுயிராய் தவிக்குது எங்கள் பூமி
பசுமை போர்த்த பூமி…
ஆனாலும்,
கந்தக மணமும்
கருகிய உடல்களின்
தீய்ந்த வாடையும்
நிணமும் சதையும்
மனதை விட்டு அகல மறுக்கிறதே!!
குயில்களின் கூவல்
குண்டுகளின் ரீங்காரமாகவும்
விமானங்களின் அச்சுறுத்தல்களாகவும்
காதில் விழுவதை
தவிர்க்க முடியவில்லை.
பாலைவனத்தின் நடுவில்
ஒட்டகத்தைத் தொலைத்த
நாடோடியின் மனதுபோல
உயிர் கிடந்து அடித்துக்கொள்கிறது.
ஆரவாரமாக வீசும் காற்றுக்கூட
‘அய்யோ! அய்யோ!’வென
அலறுவதுபோல் ஒரு பிரமை.
பிணங்களால் போர்த்தப்பட்டது
எங்கள் பூமி!!
எடுத்து வைக்கும் ஒவ்வொரு
காலடி மண்ணின் கீழும்
யாரோ ஒருவரின் அல்லது பலரின்
கல்லறை கிடக்கிறது!!
எத்தனை பேர்க்கு பதுங்ககழியே
பிணக்குழி..!!
மூடாத குழிகளை மூடி விடுங்களேன்..
இனியாவது அவர்கள் உறங்கட்டும்!
கஞ்சிக்காக வரிசையில் நின்று
குண்டடிபட்ட பிஞ்சுகள்…
உண்ண முதலே
உயிர்விட்ட காட்சிகள்…
கண்ணெதிரே தோன்றி
கலங்கடிக்கும்!
ஆண்டுகள் கடந்தும்
இன்றுதான் நிகழ்வதுபோல்
உயிர்கிடந்து அடிக்கும்!!
எதுவுமே இங்கு மாறவில்லை!!
பட்டுப் பாதைகளும்
சொகுசு வீடுகளும்
விரைவு வண்டிகளும்
விருந்துகளும் களியாட்டங்களும்
எல்லாமே போலிதான்.
அவற்றின் அடியில்
குற்றுயிராய் தவிக்குது
எங்கள் பூமி.
நிலமெங்கும்
மனிதப் புதைகுழிகள்…
காணாமல்ஆக்கப்பட்டோர்
பல்லாயிரம் பேர்.
அங்கங்கள் சிதைந்து
குடும்பங்கள் அழிந்து
எஞ்சிய உயிர்கள்
நடைப்பிணங்களாக!
இன்னமும் அடங்கவில்லை
கயவர்
கொலைவெறித் தாண்டவம்.
காற்றிலே கரைந்த வீரர் கனவுகள்
சிதைக்கத் துடிக்கிறார் இந்த
இனவெறிக் கிறுக்கர்.
காக்கை வன்னியர் குடைபிடிக்க
குந்து நிலத்தையும்
தட்டிப் பறிக்கிறார்…!
ஏதிலிகளானோம் நாம்!
ஏமாளிகளாகவே என்றும் இருப்போமா…?
அன்று…
எங்களுக்கென்று ஒரு
தாயகம் இருந்தது!
பகட்டுப் போர்த்தாத
வாழ்விருந்தது!
அங்கு
கலப்படமில்லா
மனிதர்கள் இருந்தார்கள்!
எங்களுக்காகவும் உரிமைக்காகவும்
உயிர் தரத்
துணிந்தனர் இருந்தனர்!!
இழப்பைக் சொல்லி
சும்மா இருக்கலாமா?
கூழைக் கும்பிடு
போட்டுக் கிடக்கலாமா?
சிதறிக் கிடந்தால் சிங்களம் மிதிக்கும்
உணர்வுடன் எழுந்தால்தான்
உரிமைகள் கிடைக்கும்.
இனப்படுகொலை மாதமிது
ஒன்றுகூடவும் இதுவே நேரம்.
துணிவுடன் நிமிர்ந்து
தடைகளைத் தகர்ப்போம்!!
-பொழில்