
சாதனைப் பெண்
-அத்தி-
கண்களைக் கூசச்செய்யும் ஆவணி மாத வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. தூரத்தில் வெட்டவெளியில், வெறுந்தரையில் மரக்கட்டை போல அசைவற்று மல்லாந்து கிடந்த அந்த உருவத்தை, யாழ் கோட்டையிலிருந்தபடியே, பார்த்த சிங்கள இராணுவ சிப்பாய் தனக்குள் நினைத்துச் சிரித்துக் கொள்கிறான்.
“அவளைச் சுட்டுத் தீர்த்து விட்டோம்!!”
“அண்ணை! சூடேறிக் கொண்டிருக்கிற இந்த நிலமும், என்ரை உடம்பிலை
பட்டு எரிச்சுக் கொண்டிருக்கிற இந்த வெயிலும் என்னை ஒண்டும் செய்ய முடியாது. இது நீங்கள் கற்றுத் தந்த நெஞ்சுரம்! எனக்கு மட்டுமில்லை… எங்கட மகளிர் அணி முழுவதுக்குமே நீங்கள் சொல்லித் தந்த பாடம்.”
“…..ஆடாமல்,அசையாமல் அப்பிடியே கிட…..!! உனக்கு உயிர் இருக்குதென்று அவனுக்கு தெரிஞ்சா சும்மா விட மாட்டான்… சுட்டுக் கொண்டேயிருப்பான். நீ செத்துப் போனதாகவே அவன் நினைக்க வேணும்….நாங்கள் எப்பிடியும் வந்து உன்னைக் காப்பாத்துவம்”…. ‘தூரத்திலை இருந்து கேட்ட இந்த அண்ணாக்களின்ரை குரல் கூட உங்கட குரலாகத்தான் எனக்கு கேட்டதண்ணை!.’
எந்த வித அசைவும் இல்லாமல் உயிரற்ற உடல் போல கிடந்த ரூபிணியின் உள்ளத்தில் ஓடிய எண்ணங்கள் இப்படித்தான் இருந்திருக்கும்..
கட்டாந்தரை…!! சூடேறிய நிலம். மேலே சுட்டெரிக்கும் வெயில். அங்கே மல்லாந்து கிடக்க வேண்டும்….. உடலில் இம்மியளவும் அசைவில்லாமல்….
அதுவும் மணிக்கணக்காக!
கற்பனை செய்து பாருங்கள். முடியுமா எங்களால்? குறைந்த பட்சம் ஓரிரு நிமிடங்கள் மட்டுமாவது?… கற்பனையிலேயே, சூடு தாங்க முடியாமல் நமது உடம்பு நெளிகிறதே!
ஆனால்,.. கற்பனைக்கு எட்டாத இந்த அற்புதம் எம் தாய் நிலத்தில் அன்று நிகழ்ந்தது. ஒரு பகற் பொழுது முழுவதற்குமாய் இதை நிகழ்த்திக் காட்டினாள் ஒரு வீரப் பெண்.
மார்ச் 08 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப் படுவதும், அதன் மூலகர்த்தாக்கள், மூல காரணங்கள் பற்றி மீண்டும் மீண்டும் பேசுவதும், எழுத்தில் பதிவிடுதலுமே தொடர் நடைமுறைகளாகி வருகின்றன.
இதனின்று சற்று வித்தியாசமாய் –
வரலாற்றில் ஈழப்பெண்களுக்கு ஒரு மகத்தான பெருமையையும், உலகளாவிய ஒரு தனித்துவத்தையும் ஏற்படுத்திக் கொடுத்த பெருந்தலைவர் மேதகு பிரபாகரனுடைய பேராற்றலையும், ஆளுமையையும் நிரூபிக்கும் வகையில் மகளிர் அணிப் போராளிகள் தரையிலும், கடலிலும் பல்வேறு பரிணாமங்களில் வியக்க வைக்கும் சாதனைகள் பல புரிந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.
இந்த பதிவின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் முன்னோட்டம் எதிரியுடனான சமரின் போது ,மகளிர் அணியைச் சேர்ந்த ரூபிணி என்ற வீராங்கனை தனது அபார மனவலிமையினால் எப்படி உயிர் மீண்டு வந்தாள் என்பதை விபரிக்கும் ஒரு சாதனைக் கதையாக விரிகிறது. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த மார்ச் மாதத்தில் அந்த வீராங்கனையின் சாதனையைப் பகிர்ந்து கொள்ளுதல் பொருத்தமல்லவா?
தரையிலும் கடலிலும் எமது பெண்கள் நிகழ்த்திய அளவிறந்த போராட்ட சாதனை வரிசையில் இது சற்று வித்தியாசமானது. பலரும் இது வரை அறிந்து கொள்ளாத ஒரு சம்பவமாகக் கூட இது இருக்கலாம்.
யாழ் கோட்டையில் நிலை கொண்டிருந்த சிங்கள இராணுவம் மீதான இறுதித் தாக்குதலுக்குப் புலிப் போராளிகள் தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது. இவர்கள் நிலையெடுத்து நின்றிருந்த இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் கரும்புலி மேஜர் சஞ்சிகா தலைமையில் 75 கரும்புலி வீராங்கனைகள்
தாக்குதலில் இணைந்து கொள்ளும் தயார் நிலையில், இரவும் பகலும் பதுங்கு குழிகளில் தங்கியிருந்தார்கள். மிக அரிதான பொழுதுகளில் மட்டும் ஏதாவது சமையல் செய்யும் வாய்ப்பு ஏற்படும். ராணுவத்தால் சுடப்பட்டு இறந்த மாடுகளின் இறைச்சியைச் சமைத்து சாப்பிடுவார்கள். இவை தவிர மூன்று வேளை உணவும் வெளியே இருந்து வேறு வேறு போராளிகள் கொண்டு வருவார்கள். வான் வழித்தாக்குதல்கள் நடைபெறும் நாள்களில் உணவு கொண்டு வருவது சாத்தியப்படாமல் போகும். பதுங்கு குழி போராளிகள் எல்லாரும் பட்டினி!
கோட்டையில் ராணுவம் நிலைகொண்டிருந்த இடத்துக்கும், போராளிகள் நிலை கொண்டிருந்த பகுதிக்குமிடையில் இருந்த தூரத்தின் பெரும்பகுதி வெளியாகவும், கோட்டையைச் சுற்றி அமைந்திருந்த அகழி ஒரு பகுதியாகவும் இருந்தது. ராணுவம் கோட்டையிலிருந்தபடி தாக்குதல் மேற்கொள்ள, புலிப் போராளிகள் தங்கள் காவலரண்களிலிருந்து
எதிர்த்தாக்குதல் நடத்துவார்கள்.
சில சந்தர்ப்பங்களில், இரவோடிரவாக… போராளிகள் அந்த வெளிப்பகுதி வரைக்கும் நகர்ந்து போய் நிலையெடுப்பதும் உண்டு. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில்தான்,… 1990 ஆகஸ்ட் மாதத்தின் ஒரு இரவு, ரூபிணி என்ற பெண் போராளிக்கு ராணுவத்தின் துப்பாக்கிச்சூடு பட்டுவிட, அவள் மயங்கிச் சாய்கிறாள். உடலில் எதுவித அசைவும் காணப்படாததில், அவள் வீரச்சாவு அடைந்து விட்டதாக ராணுவம் நினைத்தது.
இரவோடிரவாகப் போராளிகள் அந்தப் வெளிப் பகுதியிலிருந்து பின்வாங்கித் தங்கள் பகுதிக்குத் திரும்பினார்கள்…
மறுநாள் காலை.
மயக்க நிலையில் கிடந்த ரூபிணிக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்ப,- உடலில் சிறிதாய் அசைவு தெரிகிறது..போராளிகள் இதை அவதானித்த அதே சமயம், ராணுவமும் கவனித்து விட்டது. பிறகென்ன? ரூபிணி கிடந்த இடத்தை நோக்கி துப்பாக்கிச் சுடுகள் பறக்கின்றன!
“அப்படியே ஆடாமல்?அசையாமல்…செத்து போனது போலைக் கிட. நாங்கள் எப்பிடியும் அங்கே வந்து உன்னைக் கூட்டி வாறம்…” என்று உரத்த குரலில் அவளுக்கு கேட்கும் படி, தங்கள் காவலரண்களில் நின்றபடியே போராளிகள் சத்தமிட்டுச் சொன்னார்கள்.
ஆவணி மாதத்தின் கொளுத்தும் வெயில்! சூரிய வெப்பத்தை உள் வாங்கிய நிலம் சூடாகிக் கொண்டே போக,….. ரூபிணியின் தலை, முதுகுப் பகுதியிலிருந்து குதிக்கால் வரைக்கும் கொதிக்கும் நிலத்தின்
சூடு பரவி இம்சை செய்கிறது. மேலே வானத்துச் சூரியன் உச்சி முதல் பாதம் வரை வெயிலை நெருப்பாய் அள்ளி வீசிக் கொண்டிருந்தான்.
எதற்கும் கிறுங்கவில்லை அவள்!!
கடும்தவம் இயற்றுகின்ற ஒரு தவமுனி போல அசைவற்றுக் கிடக்கிறாள்.
தேச விடுதலைக்கான தவம்.
தாயாகி நின்ற பெரும்தலைவன் வளர்த்து விட்ட ஈடிணையில்லா மனோ வலிமையின் உச்ச நிலை!
பகல் மயங்கி இருள் சூழத் தொடங்கிறது. சில போராளிகள் மெது மெதுவாக நகர்ந்து அவ்விடம் போய் ரூபிணியை பத்திரமாகக்
கூட்டி வருகிறார்கள்.
எரிக்கும் வெயிலில், ஆடாமல் அசையாமல் பகல் முழுவதும், கிடந்து வந்த களைப்பும், சோர்வும் இரண்டு, மூன்று நாள்களில் நீங்கி விட,
மீண்டும் களமாடத் தயாராகி விட்டாள் அந்த சாதனைப்பெண்.