
இனப்படுகொலையும் சர்வதேச சட்டங்களும்; மானுட வரலாற்றின் துயரமான அத்தியாயங்கள்:
இனப்படுகொலை’ (Genocide) என்பது முறைப்படுத்தப்பட்ட மற்றும் விரிவான முறையில் இனவரையறை, நிற பேதமை, மதம் மற்றும் தேசியம் என்ற ஏதாவதொரு வகையில் ஒரு இனத்தை பாகுபடுத்தி, அந்த இனத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பது ஆகும்.
இனப்படுகொலைக்கு எதிராக ஐக்கிய நாட்டு அமைப்பின் புதிய சட்டம் 1951 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தபின், அதன் அப்போதைய 80 உறுப்பு நாடுகளும் அந்த சட்டத்தின் சரத்துக்களை தங்கள் நாட்டு சொந்த சட்டத்தில் இணைத்தன. இந்த செயலானது, குற்றவாளிகளை பரந்த அளவில் அடையாளம் காண்பதற்கு உதவி புரிந்தது எனலாம்.
உலகம் முழுவதும் பல நாடுகளிலும் கடந்த 250 ஆண்டுகளில் இனப்படுகொலைகள் என்ற பெயரில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை லட்சமோ, கோடியோ அல்ல; பல மில்லியன்களைத் தாண்டுகிறது என்பதுதான் உண்மை.
ஓர் இனத்தை அது இருந்த சுவடே தெரியாமல் அழிப்பதாகவும், ஓர் இனத்தின் அல்லது அந்தக் குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, குழு உறுப்பினர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியாக மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதே இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது. ஓர் இனத்தைச் சேர்ந்த மக்களை கொத்துக் கொத்தாகக் கொன்று குவிப்பதுடன், அடுத்த தலைமுறை உருவாக விடாமல் தடுப்பதும் இனப்படுகொலையாகப் பார்க்கப்படுகிறது.
இனப்படுகொலையானது ஆங்கிலத்தில் (Genocide) ஜெனோசைட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜெனோசைட் என்ற வார்த்தையை ரஃபேல் லெம்கின் என்ற போலந்து நாட்டைச் சேர்ந்த யூத வழக்கறிஞர், நாஸி தாக்குதலிலிருந்து தப்பி, அமெரிக்காவில் தஞ்சமடைந்தபோது லத்தீன் – கிரேக்க – பிரெஞ்ச் மூலங்களிலிருந்து உருவாக்கினார் என அறியப்படுகிறது.
1933 ஆம் ஆண்டு ஈராக்கில் நடந்த அசீரிய(Assyrian) இனப் படுகொலையானது, ரஃபேல் லெம்கின் நினைவை முதலாம் உலகப் போரின்போது நடந்த ஆர்மீனியப் படுகொலையை நோக்கி நினைவு படுத்துச் சென்றது. எனவே இனப்படுகொலை என்ற காட்டுமிராண்டி செயலுக்கெதிரான சர்வதேச சட்ட வடிவுக்கான ஒரு முன்வரவை அவர் ஸ்பெய்ன் தலைநகர் மாட்ரிட்டில் இருந்த சர்வதேச நாடுகள் கூட்டமைப்பின் (லீன் ஆஃப் நேஷன்ஸ்) சட்ட கவுன்சிலுக்கு அப்போது வழங்கினார்.
உலகில் இனப்படுகொலை என்பதற்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு விளக்கத்தை இன்று வரை பெறமுடியாததற்கு இந்த அரசியல் பிரச்சனைகளே காரணம் என்றும், விமர்சிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நாடும் தனது அரசியல் நலனுக்கேற்ப இந்த விஷயத்தில் நடந்து கொள்கின்றன.
ஒரு இனப்படுகொலை நடந்த முடிந்தபிறகு குற்றவாளிகளை தண்டிப்பதற்கு சர்வதேச அளவில் சில நாடுகள் நடவடிக்கை எடுக்கின்றன. ஆனால் அந்தப் படுகொலை நடவடிக்கையில் அந்த நாடுகள் ஏன் எதுவுமே செய்வதில்லை என்ற பாரதூரமான விமர்சனம் எப்போதும் உண்டு.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்கள்:
இனப்படுகொலை ஒரு சர்வதேச சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் ஒரு குற்றமாகும். இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு, இனப்படுகொலை என்பது கட்டாயத் தேவையின்படி, ஒரு மாபெரும் சர்வதேச குற்றமாக கருதப்பட்டாலும், அதை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்கள் இருந்தாலும், சம்பந்தப்பட்ட நாடுகளோ அல்லது வலிமை வாய்ந்த நாடுகளோ ஒத்துழைக்காமல் சட்டத்தாலும், நீதிமன்றத்தாலும் எதுவும் செய்துவிட முடியாது என்பது மட்டும் உண்மை.
ஈரானில் 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய பஹாய் (Bahai) என்ற சமயத்தின் நம்பிக்கையாளர்கள் சுமார் 25 ஆயிரம் பேரை அந்நாட்டு ஹியா இஸ்லாமிய அரசாங்கம் கொன்று குவித்தது. அவர்களின் சொத்துக்களையும், உரிமைகளையும் பறித்தது. பலரை நாட்டை விட்டு விரட்டியது. இன்று வரை அந்நாட்டில் பஹாய்களுக்கு கொடுமைகள் நடந்தவண்ணம் உள்ளன.
தொடரும் துயரமாக முதலாம் உலகப்போர் சமயத்தில் ஆர்மீனியா நிலத்தில் துருக்கியர்களால் லட்சக்கணக்கில் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர். ஈராக் மற்றும் துருக்கி பிராந்தியத்தின் ஆயிரக்கணக்கான குர்துக்கள் கொல்லப்பட்டனர்.
பின்னர் இரண்டாம் உலகப் போரின் போது, பல லட்சம் யூதர்களை ஹிட்லரின் நாஸிச அரசு படுகொலை செய்தது.
உலகப் போர்களில் இனப்படுகொலை:
முதல் உலகப்போரில் ஜெர்மனியோடு சேர்ந்த துருக்கி தோல்வியடைந்தது. தோல்விக்கு பழிவாங்கும் முகமாக ஆர்மீனியர்கள் மீது மிகவும் கோபமடைந்தது ஓட்டோமன் அரசு.
துருக்கு பேரரசைச் சேர்ந்த ராணுவத்தின் மூலம் ஆர்மேனியர்கள் துரோகிகள் என அவர்கள் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்து பலர் கொல்லப்பட்டனர். 1915இல் துருக்கி ஓட்டோமன் பேரரசு, முதல் உலகப்போர் தொடங்கும் சமயத்தில் தங்களது இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ள அந்தப் போரில் ஈடுபட முடிவு செய்தது.
ஏற்கெனவே இழந்த செல்வாக்கினை மீட்க இது உதவும் என்று நம்பி அவர்கள் அதில் இறங்கினர். முதல் உலகப்போரில் ஜெர்மனியோடு இணைந்து களம் கண்டது ஓட்டோமன் அரசு.
துருக்கியின் உள்நாட்டில் அதிகாரச்சண்டை அந்நாட்டிற்கு மற்றொரு தலைவலியாக அமைந்தது. இந்த நிலையில் நிறைய புரட்சி இயக்கங்கள், நாடு முழுவதும் பலவாறாகத் தோன்றின. இதற்கெல்லாம் காரணம் யார் என்று ஆராய்ந்தபோது, ஆர்மீனியர்கள்தான் என்று குற்றஞ்சாட்டி அவர்களை படுகொலை செய்தது.
இவ்வாறாக 1915 முதல் 1918-ம் ஆண்டுவரை ஓட்டோமன் அரசால் 5 முதல் 12 லட்சம் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர்.
ஹிட்லரின் யூத படுகொலை :
யூதர்களை கொடுமைப்படுத்துவது, துன்புறுத்துவது, கொலைசெய்வது என இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த சூழலில்,
தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. உண்மையில் ஹிட்லரால் ஜெர்மனியில் யூதர்கள் கொடூரமாக திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
யூதர்கள் நெருக்கடியான பகுதிகளில் அடைத்துவைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து சரக்குத் தொடர் வண்டிகள் மூலம் நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்த வதை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பலர் வழியிலேயே இறந்து போயினர். எஞ்சியோர் நச்சுவாயு அறைகளுள் அடைத்துக் கொல்லப்பட்டனர்.
இரண்டு வகையான முகாம்களை நாஜிக்கள் அமைத்தனர். ஒன்று, சாதாரண கைதி முகாம். இதில் கைதிகளை அடிமைபோல் நடத்தி, அவர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்குவார்கள். தேவையில்லாமல் கொல்லமாட்டார்கள். இன்னொன்று வதை முகாம்கள், இவை யூதர்களை கொல்வதற்காகவே உருவாக்கப்பட்டதாகும்.
கம்போடியாவில் பொல் பொட் அரசின்கோரம் :
கம்போடியாவில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும் என்று எண்ணினார் ஆட்சியேறிய பொல் பொட் (Pol Pot ) அரசு. அனைவரும் விவசாயம் செய்ய வேண்டும் எனக் கட்டாயப் படுத்தப்பட்டனர். குறிப்பாக 1975-1979 காலகட்டத்தில், பொது மக்களின் சொத்துக்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்பட்டு, பொல் பொட் அரசால் கைப்பற்றப்பட்டது.
1953-ம் ஆண்டு கம்போடியா பிரான்ஸிடமிருந்து விடுதலை அடைந்த பின், சிஹானக் கம்போடியா அரசனாகப் பொறுப்பேற்றார். கம்போடியன் கம்யூனிஸ்ட் கட்சியின் (கிமேர் ரூஜ் ) தலைவர் ஆன பொல் பொட் சிஹானக்கை பதவியிறக்கி, பின்னர் 1976-ல் பொல் பொட் பிரதமராகப் பதவியேற்றார். வணிகம், மருத்துவம், தொழில்துறை எனப் பல துறைகள் எல்லாம் நிறுத்தப்பட்டன.
ஆட்சியாளர்களை எதிர்த்து போராடிய மக்களைச் சிறையிலடைத்து சித்ரவதை செய்தும் பசி, பட்டினி மற்றும் சட்டவிரோதமான முறையிலும் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. குருட்டுத்தனமான கொள்கையும், செயல்முறைப்படுத்தாத திறனும் மக்களை வாட்டின. சுமார் 20 லட்சம் மக்கள் இம்முறையில் கொல்லப்பட்டனர்.
தொடரும் படுகொலைகள்:
1975-ல் கிழக்குத் திமோர் மீது இந்தோனேஷியா எடுத்த படையெடுப்பு இனப்படுகொலைகளாக முன்வைக்கின்றனர். அமெரிக்க செவ்வியந்தியர்கள், பாலஸ்தீனியர்கள், காங்கோ, சோமாலியா, கொசாவா என உலக நாடுகளின் வரலாற்றில் ‘இனப்படுகொலைகள்’ தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது நிதர்சனம்.
பரவலாக பல நூற்றாண்டுகளில் நடந்த மத மோதல்கள் ஏராளமான மக்கள் தேவையின்றி அழிவதற்கு காரணமாயின. ஒரு மதம், தான் பரவ வேண்டும் என்பதற்காக இன்னொரு மதத்தை அழித்தது.
ஆயினும் உலகில் தோன்றிய எத்தனையோ மறைநெறிகள் இந்தக் கொடுமையை தடுப்பதற்கான போதனைகளை கூறியபோதிலும், மனிதர்கள் தொடர்ந்து அதை மறந்துவிடுகிறார்கள் என்பதே நிஜமாகும்.
ருவாண்டா இனப்படுகொலை (1994)
ஜெர்மனியின் காலனியாதிக்கத்தின்கீழ் இருந்த நாடு ருவாண்டா, புருண்டி. இங்கு டூட்சி, ஹூட்டு என்ற இரண்டு இன குழுக்கள் வாழ்ந்து வந்தனர். பல நூற்றாண்டுகளாக டூட்சி இன மக்கள் ஆண்டுவர, பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு,1972-ல் புருண்டியில் ஹூட்டுகளின் புரட்சி தொடங்கியது.
1994 ஏப்ரல் 7 அன்று ஹூட்டு இன மக்கள், டூட்சி இனத்தவரை கொல்லத் திட்டமிட்டனர். பெரியவர், சிறியவர் எனப் பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் கொன்று குவித்தனர் ஹூட்டு இனத்தினர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்தனர். அத்துடன் ஆயிரக்கணக்கானோர் முடமாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போஸ்னியா இனப்படுகொலை
பால்க்கன் பிராந்தியத்தில் யூகோஸ்லாவியாவிடமிருந்து பிரிந்த நாடு போஸ்னியா ஆகும். 1990களில் புதிதாக உருவாக்கப்பட்ட தேசம் என்பதால் நாடு முழுவதும் குழப்பம் ஏற்பட்டது. அங்கே போஸ்னியர்கள், செர்பியர்கள், குரேஷியர்கள் என மூன்று வகையான இன மக்கள் வாழ்ந்து வந்தனர். குரேஷிய அதிபருக்கும், போஸ்னிய அதிபருக்கும் ஓர் ஒப்பந்தத்தில் முரண்பாடு ஏற்பட, அங்கிருந்து தொடங்கியது இப்பிரச்னை.
போஸ்னியாவில் 1993-ம் ஆண்டில் 2000 பேர் கொலை செய்யபட்டனர். 64 இஸ்லாமியர்களைக் கைது செய்து பேருந்தில் அடைத்து, தீவைத்துக் கொளுத்தினர். இதில் 56 பேர் இறந்தனர்.
செர்பிய ராணுவ ஆட்சியில் 1992-1995 காலகட்டத்தில் இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். நான்கு லட்சம் பேர் காணாமல் போனார்கள்.
டார்ஃபுர் – சூடான் இனப்படுகொலை
ஆப்பிரிக்காவின் சூடானில் உள்ள டார்ஃபுர் மாநிலத்தில் நடைபெற்ற இப்படுகொலை பொருளாதார ரீதியாக முக்கியமானதாகும். சூடானின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் சண்டையிட்டுக் கொள்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தன. இந்நிலையில் மேற்கு சூடானில் உள்ள டார்ஃபுரில் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் வடக்கு மற்றும் தெற்கு பிரச்னை மேலும் கொளுந்துவிட்டு எரிந்தது. இவ்வாறாக 1972-ல் உள்நாட்டு யுத்தம் முடிந்து, 1983-ல் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது.
கிட்டத்தட்ட 20 வருடங்களில் 20 லட்சம் பேர் உயிரிழந்தனர். 40 லட்சம் பேர் வீடுகளை இழந்து அகதிகளாகினர். தென் சூடான் தனி நாடாக ஜூலை 2011-ல் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது சூடான் அரசு.
ஈழத்தில் தமிழர் படுகொலை :
ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை பெரும் வலியையும், ஆற்றாமையையும் இப்போதும் எங்கள் ஈழமண் துயரங்களுடன் தேக்கி வைத்திருக்கிறது. விடியலுக்கான நீண்ட பயணம் தொடர்கிறது.
1983-ம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’ சம்பவம் இன்றளவும் நீங்காவடுவாக தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. கண்ணில்பட்ட எல்லாரையும் கொன்று, பெண்கள் பலரும் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், படுகொலையும் செய்யப்பட்டனர்.
1958, 1977, 1983-ம் ஆண்டுகளில் நடந்த இனக்கலவரங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. ஈழப் போராட்டம் ஆரம்பித்த பின்பு வானூர்திகளிலிருந்து கண்மூடித்தனமாக குண்டுவீசுதல், ஏவுகணை வீச்சு, நேரடித் தாக்குதல் போன்றவற்றின் மூலம் இதுவரை சுமார் லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாயினர்.
இன்னமும் தொடரும் துயரமாக, அரசியல் மற்றும் பொருளாதார தேவைகள் மட்டுமே மனிதர்கள் அழிய காரணமாவதில்லை. பல சமயங்களில் அதைவிட சித்தாந்தம், கொள்கை, இனப்பெருமை போன்ற விஷயங்கள் பெரும்பாலான மனித அழிவிற்கு காரணமாகின்றன.
வரலாற்றில் மனித இனம் தோன்றியதிலிருந்து ஒரு இனம் மற்றொரு இனத்தை அழித்து, தனது தேவைகளுக்காக அவர்களின் சொத்துக்களை கவர்ந்து, அவர்களின் இடத்தை ஆக்கிரமித்து வாழ்ந்து வருவதானது இன்று வரையில் ஏதாவது ஒரு வடிவத்தில் தொடர்ந்து வருகிறது. மானுட தர்மம் நீதியற்று போயுள்ளதையே வரலாற்றின் துயரமாக பார்க்கலாம்.
-ஐங்கரன் விக்கினேஸ்வரா.