
ஜுலை 9 ஆம் திகதி முதல் தேர்தலுக்கான போராட்டம்; இறுதியில் கொழும்பு சுற்றிவளைக்கப்படும்
ஜுலை 9 ஆம் திகதி முதல் தேர்தலுக்கான போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாகவும், இந்த போராட்டத்தின் இறுதியில் கொழும்பு சுற்றிவளைக்கப்படும் என்றும் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பலப்பிட்டியவில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அதன்போது அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறுகையில்,
நமது நாட்டை இதுவரை கடந்து வந்த அழிவுப் பாதையில் இருந்து மீட்டெடுப்பதற்காக கடந்த மார்ச் 9 ஆம் திகதி வாக்களிப்பதற்காக மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஆட்சியாளர்கள் அதற்கு இடமளிக்காது தங்களுக்குள்ளேயே ரணில், ராஜபக்ஷ, சஜித் என்று அத்காரங்களை மாற்றிக்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். திசைக்காட்டியின் கைகளுக்கு அதிகாரம் சென்றுவிடாதவாறு தடுக்க இவர்கள் ஒன்றிணைகின்றனர். ஆனால் மக்கள் இதற்கு எதிராக ஒன்றுபடுவர்.
ஜூன் 9 திகதியுடன் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகவுள்ளன. இதன்போது நாங்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்போம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று போராடுவார்கள். பின்னர் ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், கம்பஹா போன்ற இடங்களில் போராட்டங்களை தொடர்வதுடன், இறுதியாக கொழும்பை சுற்றிவளைக்கும் போராட்டத்திற்கு தயாராவோம் என்று தெரிவித்துள்ளார்.