ஐ.எம்.எப்.நிபந்தனைகளை நிறைவேற்ற ஜனகவால் தடை;  பதவி நீக்க அதுவே காரணம்

ஐ.எம்.எப்.நிபந்தனைகளை நிறைவேற்ற ஜனகவால் தடை; பதவி நீக்க அதுவே காரணம்

சர்வதேச நாணய நிதியத்தின்(ஐ.எம்.எப்.) நிபந்தனைகள் சிலவற்றை நிறைவேற்றுவதற்கு தடையாக இருந்த காரணத்தினலேயே ஜனக ரட்நாயக்கவை பதவி நீக்கம் செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரட்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது மின்சாரம், எரிபொருள் மற்றும் நீர்வழங்கல் உள்ளிட்ட பொதுப் பயன்களை நிறைவேற்றுவதற்காகவே அமைக்கப்பட்டது. தற்போது ஜனக ரட்நாயக்கவுக்கு முன்னர் கோத்தாபய ராஜபக்‌ஷ காலத்தில் இந்த ஆணைக்குழுவை முழுமையாக இல்லாது செய்ய முயற்சிக்கப்பட்டது. அதன்போது ஆணைக்குழுவினர் பதவி விலகியதை தொடர்ந்தே ஜனக ரட்நாயக்கவை நியமித்தனர். அவரை அரசாங்கமே நியமித்தது. ஏன் இப்போது அவரை வேண்டாம் என்று கூறுகின்றீர்கள்.

சர்வதேச நாணய நிதியம் மின் கட்டணத்தை அதிகரிக்க கோரிய போது, அதற்கு முடியாது என்று கூறியமையினாலேயே இன்று இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பதவி விலகினர். பலவந்தமாக அதிகாரிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது தங்களுக்கு தேவையானவர்களை நியமித்துள்ளீர்கள். ஜனக ரட்நாயக்க இருக்கும் போதே புதிய உறுப்பினர்களை நியமித்தமையினாலேயே அந்த ஆணைக்குழுவுக்குள் குழப்பம் ஏற்பட்டது. அரசியல் தேவைகளை நிறைவேற்ற முடியாது போனமையினாலேயே இப்போது பழிவாங்கல்களை முன்னெடுக்கின்றனர். ஜனக ரட்நாயக்க தொடர்பில் சான்றிதழ்களை நாங்கள் வழங்க வேண்டிய அவசியம் கிடையாது. அவரை அரசாங்கமே நியமித்தது.

அலி சப்ரியை புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் தலைவராக நியமித்ததை போன்றே இவரையும் நியமித்தீர்கள். ஜனாதிபதியே அலி சப்ரியை குறித்த பதவிக்கு நியமித்தார். அவர் அரசாங்கத்தின் உறுப்பினர். இவர் தங்கம் கொண்டுவந்து பாரிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். ஆனால் அவர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, தண்டப்பணத்தையும் செலுத்தி இந்த பாராளுமன்றத்திற்கும் வந்துள்ளார். இப்படி இருந்தால் மக்களுக்கு எவ்வாறு நம்பிக்கை உண்டாகும். அலி சப்ரி விடயத்தில் அரசாங்கம் நடந்துகொண்டதை போன்றே மற்றைய பக்கத்தில் தனக்கு எதிரான ஜனக ரட்நாயக்கவை நீக்க முயற்சிக்கின்றனர் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )