
அரசின் தீர்மானத்தால் நீதிமன்றம் செல்வோம்
உள்ளூராட்சி சபைகளின் பதவி காலம் நிறைவடைந்துள்ள நிலையில் உள்ளுராட்சி சபைகளுக்கு அரசியல் நியமனங்களை வழங்கும் அரசின் தீர்மானத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றை முன்வைத்த போதே இவ்வாறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி சபைகளின் பதவி காலம் நிறைவடைந்துள்ள நிலையில் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்துக்காக பிரதேச செயலாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் மாகாண ஆளுநர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் வகையில் நியமனங்கள் வழங்கும் அதிகாரம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இதற்கான விசேட சுற்றறிக்கையை அரச சேவைகள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
பிரதேச செயலாளர்கள்,மாநகர ஆணையாளர்கள் மற்றும் மாகாண ஆளுநர்கள் ஆகியோரை ஒன்றிணைக்க புதிய நியமனம் ஒன்று வழங்கப்பட வேண்டிய தேவை ஏதும் கிடையாது. நிதி இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.இவ்வாறான பின்னணியில் உள்ளூராட்சி சபைகளுக்கு அரசியல் நியமனம் வழங்க சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.பிரதேச சபை செயலாளர் உள்ளார்,மாநகர ஆணையாளர் உள்ளார் இவ்வாறான நிலையில் எதற்கு மேலதிகமாக புதிய நியமனங்கள்?
எனவே உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் அரசி ன் சகாக்களுக்கு பதவி வழங்குவது முறையற்றது.இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடி அரசின் தீர்மானத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் என்றார்.
இதற்கு பதிலளித்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்தன, .அரசியலமைப்புக்கு அமையவே செயற்படுகிறோம்.உள்ளுராட்சி சபைகள் மற்றும் பிரதேச சபை கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி சபைகளின் பதவி காலம் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது.உள்ளூராட்சி சபைகளின் பதவி காலத்தையும் நீடிக்க முடியாது.தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு.காலவரையறை இல்லாமல் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.மாகாண சபை தேர்தல் சட்டத்தின் சிக்கல் காரணமாக மாகாண சபைத் தேர்தலும் பிற்போடப்பட்டுள்ளது.
மாகாணங்களின் நிர்வாகம் மாகாண ஆளுநர்கள் வசமுள்ளது..மாகாண நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை மேற்பார்வை செய்ய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

