
போதைப்பொருள் வியாபாரிகள் பாதாள குழுக்கள் விரைவில் ஒழிப்பு
போதைப்பொருள் வியாபாரிகள் ,பாதாள குழுக்களை இல்லாதொழிக்க எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
பத்தரமுல்லவில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் கூறுகையில்,
போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள குழுக்களின் செயற்பாடு ஆகியவற்றை முழுமையாக இல்லாதொழிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். .இதற்கமைய மேல்மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 86 முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மாகாணங்களை அடிப்படையாக கொண்டு விசேட சுற்றிவளைப்புக்கள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும்.போதைப் பொருள் வியாபாரம் மற்றும் பாதாள குழு செயற்பாடு ஆகியவற்றை இல்லாதொழிக்கும் வகையில் எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஒரு பிரதேசத்தில் இடம்பெறும் போதைப்பொருள் வியாபாரம் குறித்து அந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் நன்கு அறிவார்கள்.பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் போதைப்பொருள் வியாபாரத்தை முழுமையாக இல்லாதொழிக்க முடியாது.எனவே போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்க வேண்டும்.பொலிஸாருக்கு வழங்கப்படும் தகவலின் இரகசியத்தன்மையை பேணுவதற்கு தற்போது விசேட வழிமுறை பின்பற்றப்படுகிறது.ஆகவே மக்கள் தைரியமாக பொலிஸாருக்கு தகவல்களை வழங்க முடியும்.
போதைப்பொருள் வர்த்தகத்தில் பலம் வாய்ந்த தரப்பினர் ஈடுபடுகிறார்கள்.அவர்கள் எனக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்கள். போதைப்பொருள்,பாதாள குழு செயற்பாடு ஆகியவற்றை இல்லாதொழிக்க ஜனாதிபதி முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் தற்போது பிரான்ஸ் உட்பட ஒரு சில நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றார்.

