
போதகர் ஜெரோம் ஊடாக மீண்டும் ஆட்சிக்கு வர ராஜபக்ஷக்கள் சூழ்ச்சி
சர்வ கட்சிகளின் போராட்டக்காரர்கள் அமைப்பு கூறுகிறது
மதப் போதகரான ஜெரோம் பெர்னாண்டோ ஊடாக நாட்டில் மதங்களுக்கு இடையே மோதல்களை ஏற்படுத்தி இன்னுமொரு ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதாக சர்வ கட்சிகளின் போராட்டக்காரர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குறித்த அமைப்பின் பிரதிநிதியான நிரோஷன் விதானகவே இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நாங்கள் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளோம். போலியான மதப் போதகராக இருக்கும் ஜெரோம் பெர்னாண்டோ என்ற நபரால் அண்மையில் இன, மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெறுப்புணர்வு கருத்தை வெளியிட்டுள்ளார். இதனை மத மற்றும் இனவாத மோதல்களை ஏற்படுத்துவதற்காக முயற்சியாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
இதன்பின்னால் அரசியல் சக்தியொன்று செயற்படுவதாக சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாலேயே நாங்கள் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளோம். கடந்த காலங்களில் குறித்த நபரின் செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் அவதானித்து வந்தோம். அதன்படி இந்த நாட்டில் அனைத்து மதங்களுக்கு இடையேயும் 500 வருடங்களாக காணப்படும் அமைதியை பிளப்படுத்தும் வகையிலான கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் கோத்தாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சியே நினைவுக்கு வருகின்றது. அப்போது ஆண்மையை கட்டுப்படுத்தும் கொத்து, கருத்தடை ஷாபி போன்ற கருத்துகளை கூறி சிங்கள மக்களுக்கு முஸ்லிம் மக்கள் மீது அச்சத்தை ஏற்படுத்தி, முஸ்லிம் மக்களுக்கும் அதேபோன்று சிங்களவர்கள் மீது அச்சத்தை ஏற்படுத்தி இனவாத மோதலை ஏற்படுத்தி சிங்கள தேசத்தை மீட்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷக்களின் அடுத்த சூழ்ச்சியா இது என்று எங்களுக்கு இப்போது சந்தேகம் ஏற்படுகின்றது.
இவ்வாறான வெறுப்புணர்வு பேச்சுக்களை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி இன்னுமொரு ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கான முயற்சியா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இந்த சந்தேகத்திற்கு இந்தப் படத்தை (ராஜபக்ஷ குடும்பத்தினருடன் ஜெரோம் பெர்ணான்டோ இருக்கும் புகைப்படம்) எடுத்துக்கொள்கின்றோம். இந்தப் படத்தில் சிம்பாவேவின் கறுப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றும் சர்வதேச ஊடகங்களினால் குற்றவாளியாக கூறப்படும் ஊபட் ஏங்கல் என்ற நபரும் இருக்கின்றார். இதன்படி சிம்பாவே அரசாங்கத்தினால் ராஜபக்ஷக்களை மேலே கொண்டுவர முயற்சிக்கும் அரசியல் சூழ்ச்சி செயற்படுத்தப்படுகின்றனவா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இதனால் இது தொடர்பில் நாங்கள் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம் என்றார்.

