
ஜெபக் கூட்டத்தினால் இரத்தக் களரி ஏற்படும்; உதய கம்மன்பில கடும் எச்சரிக்கை
மற்றைய மதங்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட கிறிஸ்தவ மதப் போதகர் ஜெரோம் பெர்ணான்டோவினால் எதிர்வரும் 21ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜெபக் கூட்டத்தை தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் நாடு இரத்த மற்றும் நெருப்புக் காடாகும் அபாயம் உள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே உதய கம்மன்பில இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
ஜெரோம் பெர்ணான்டோ மற்றைய மதங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு கிறிஸ்தவ மதத்தையே அகௌரவத்திற்கு உட்படுத்தியுள்ளார். அவர் ஆங்கில மொழியிலேயே போதனைகளை மேற்கொள்கின்றார். அவர் கூறும் வசனங்களின் அர்த்தங்கள் தொடர்பில் பார்க்கும் போது அவருக்கு ஆங்கில அறிவு இல்லை என்றே தெரிகின்றது. இதனால் அவருக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதற்கு அனைத்து மதத்தவர்களையும், நாட்டில் சமாதானத்தை விரும்பும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
மத மோதல்களை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கக் கூடியவகையில் சட்டங்கள் உள்ளன. அவ்வாறான குற்றங்களை செய்பவர்களுக்கு நீதவானால் பிணை வழங்க முடியாது. குறைந்தது 10 வருடங்களாவது சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும். இதன்படி பெரிய குற்றத்தையே ஜெரோம் பெர்ணான்டோ இழைத்துள்ளார். அவர் குறித்த கருத்தை வெளியிடும் போது அங்கிருந்தவர்கள் அதனை உட்சாகப்படுத்தி அவரை மேலும் மேலும் மற்றைய மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் ஊக்கப்படுத்தியுள்ளனர். இதனால் இவர்களும் குற்றமிழைத்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி தேவகிருபை கூட்டத்தை நடத்தவுள்ளதாகவும், இதில் குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் இந்தக் கூட்டத்திற்கு இடமளித்தால், நாடு இரத்தக்கடாகவும், நெருப்புக் காடாகவும் மாறும் அபாயம் உள்ளது. இதனால் நீதிமன்றத்தின் ஊடாக இந்த கூட்டத்திற்கு தடைவிதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டில் சமாதானத்தை விரும்புபவர்களை கொண்டு அந்தக் கூட்டத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தை நடத்த நேரிடும் என்றார்.

