இந்து -பெளத்த மோதலுக்கு முஸ்தீபா? திருமலை சம்பவத்தின் பின்னணியில் யார்?

இந்து -பெளத்த மோதலுக்கு முஸ்தீபா? திருமலை சம்பவத்தின் பின்னணியில் யார்?

அரச – வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் செயற்பட்டுள்ளனவா என்று சந்தேகம் எழுப்புகிறது முன்னிலை சோஷலிசக் கட்சி

திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அமைதியின்மையின் பின்னால் அரச மற்றும் வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் செயற்பட்டுள்ளனவா என்ற சந்தேகங்கள் நிலவுவதாக முன்னிலை சோஷலிச கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

திருகோணமலையில் நடந்த அமைதியின்மை மதங்களுக்கு இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இது தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் வேறு மாதிரியானதாக உள்ளன. திருகோணமலையில் நடந்த சம்பவம் ஒன்றாகவும், ஊடகங்களில் அது தொடர்பில் வெளியான செய்திகள் வேறுவிதமாகவும் உள்ளன.

இந்தச் சம்பவமானது பௌத்த மத நிகழ்வொன்றுடன் தொடர்புடையது. சியம்நிக்காய அமைக்கப்பட்டு 270 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. அப்போது திருகோணமலை ஊடாகவே சியம் நிக்காய பிக்குகள் வந்திருந்தனர். இது தொடர்பான நிகழ்வை முதலில் சாதாரண மத நிகழ்வாக நடத்துவதற்கே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் எமக்கு கிடைத்த தகவல்களின்படி திருகோணமலை மாவட்ட செயலாளர் ஊடாக தாய்லாந்து பிக்குகள் கலந்துகொள்வதால் பெரிய நிகழ்வாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கு முன்னர் அங்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் அந்தப் பகுதியில் சத்தியாக்கிரக போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டே அங்கு குழப்பமான நிலைமை ஏற்பட்டது. ஆனால் இதனை மதங்களுக்கு இடையிலானன பிரச்சினையாக காட்ட முயற்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறான மோதல் எங்கும் நடக்கவில்லை. அவ்வாறு மோதலை உருவாக்க யாராவது முயற்சிக்கின்றனரா? என்று தெரியவில்லை.

இந்தியாவினால் பொருளாதார வலயத்தை அமைப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது. இதன்படி கொழும்பு மாவட்டத்தை போன்ற ஒரு பகுதியை இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்படுகின்றது. இதற்காக இனவாதம் பயன்படுத்தப்படுகின்றது. ராஜபக்‌ஷ காலத்தில் இருந்து இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த பின்னணியிலேயே பௌத்த – இந்து எதிர்ப்பு தொடர்பான செய்திகள் வெளியாகின்றன. அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரச்சினையில்லை. அதனை சிறிய நிகழ்வாக நடத்தவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கமே அதனை பெரிய நிகழ்வாக நடத்த காரணமாக இருந்தது.

இங்கு நான்கு நாட்களுக்கு முன்பிருந்து தமிழ் மாணவர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தும் போது திருகோணமலை பொலிஸார் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கே கொழும்பில் பல்கலைக்கழ மாணவர்களுக்கு இவ்வாறான போராட்டங்களுக்கு இடமளிக்காத பொலிஸார் அங்கே வேண்டுமென்றே சத்தியாக்கிரக போராட்டம் நடத்த இடமளித்துள்ளனர். இதனூடாக மத வன்முறைக்கான வழியை ஏற்படுத்தினரா என்ற சந்தேகங்கள் உள்ளன.

அங்கு முறுகல் நிலைமையின் போது விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட்டமை ஊடாக மோதலை ஏற்படுத்தும் நோக்கம் இருந்ததை போன்றே உள்ளது. இதனுள் அரச மற்றும் வெளிநாட்டு உளவுப் பிரிவு செயற்பட்டுள்ளது. கொழும்பில் தாம் தோல்வியடைந்ததை திருகோணமலையில் மறைப்பதற்கு முயற்சித்தனரா? என்ற சந்தேகம் உள்ளது.

அங்கே தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் மனதில் சந்தேகங்கள் ஏற்பட காரணங்கள் உள்ளன. வடக்கில் பௌத்தர்களே இல்லாத இடங்களில் விகாரைகளை அமைப்பதுடன், புத்தர் சிலைகளை வைக்கின்றனர். இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அவற்றை செய்கின்றனர். இவ்வாறான நிலைமையினாலேயே தமது இடங்களை சிங்களவர்கள் மதத்தை பயன்படுத்தி அபகரிப்பதாக தமிழர்கள் மத்தியில் சந்தேகங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான நிலைமையில் இதுபோன்ற சம்பவங்களை பயன்படுத்தி இந்தியா மற்றும் அமெரிக்காவின் நோக்கங்களை திருகோணமலை மாவட்டத்திற்குள் ஏற்படுத்த முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகங்கள் உள்ளன.

இதனுடன் ஜனாதிபதி தொடர்புபட்டிருக்காலம், ராஜபக்‌ஷக்களும் தொடர்புபட்டிருக்கலாம். இந்து எதிர்ப்பு போன்ற பிரசாரங்களின் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கலாம். கோத்தாபயவை, சிங்கள இனத்தை காப்போம் என்று கொண்டு வந்ததை போன்று பௌத்தத்தை பாதுகாப்போம் என்று நாமல் ராஜபக்‌ஷவை கொண்டுவரவும் இதனை பயன்படுத்த முயற்சித்திருக்கலாம். 1983 போன்று ஒவ்வொரு தரப்பினரும் தங்களின் நோக்கங்களை நிறைவேற்ற முயற்சித்ததை போன்று பிரிவினையை ஏற்படுத்த இப்போது இதனை பயன்படுத்த முயற்சிக்கலாம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )