காலிமுகத்திடல் போராட்ட கர்ம வினை துரத்துகிறது

காலிமுகத்திடல் போராட்ட கர்ம வினை துரத்துகிறது

காலிமுகத்திடல் போராட்டத்துடன் தொடர்புபட்டிருந்தவர்களை கர்ம வினை துரத்திக்கொண்டிருக்கின்றது என்றும், இதனால் போராட்டக்காரர்கள் பலர் இறந்துகொண்டு இருக்கின்றனர் என்றும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை களுத்துறையில் சில நாட்களுக்கு முன்னர் 16 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் காலிமுகத்திடல் போராட்டத்தின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவராக இருந்தவர் என்றும் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

காலிமுகத்திடல் போராட்டத்தில் பல்வேறுபட்ட நபர்கள் இருந்தனர். அங்கு கூடாரங்களை அமைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு பெயரிட்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் எமது எதிரியாக இருந்தாலும் அவருக்கு ஏதேனும் அனர்த்தம் நடந்தால் அது தொடர்பாக மகிழ்ச்சியடையக் கூடாது. இந்த பௌத்த தேசத்தில் இயற்கையாக சில சம்பவங்கள் நடப்பது தொடர்பில் கேட்க முடிகின்றது. அங்கு பந்தமேந்தி மந்திரம் ஓதி செயற்பட்ட பூசாரி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்துள்ளார். அதேபோன்று அங்கிருந்த நூலகத்திற்கு பொறுப்பாக இருந்தவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வெசாக்கின் போது கறுப்பு நிறத்தில் வெசாக் கூடு செய்தவர் இப்போது பைத்தியக்காரர்களின் மருத்துவமனையில் உள்ளார். இந்தப் போராட்டத்தில் முக்கியமாக இருந்த ஒருவர் தெஹிவளை பகுதியில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். இன்னுமொருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளார். அத்துடன் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு மரண போஸ்டர் அச்சிட்டவர் லங்கா வைத்தியசாலையில் மரணித்துள்ளார். இதுதான் கர்ம வினையால் கிடைப்பவை.

இதேவேளை ஜனாதிபதியின் கொடியை திருடிச் சென்ற தொழிற்சங்க பிரதானி ஆட்டோ விபத்தில் காலொன்றை இழந்துள்ளார். அத்துகோரல எம்.பியின் கொலையுடன் தொடர்புடைய ஒருவர் சிறையில் உயிரிழந்துள்ளார். இவை இந்த ஒரு வருடத்திற்குள் நடந்தவை. கர்ம வினையின் பலன்களை இப்போது காணக்கூடியதாக உள்ளது.

இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. களுத்துறை நகரில் 16 வயது சிறுமியை ஒருவர் ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன்போது சிறுமி உயிரிழந்துள்ளார். இதனுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் போராட்டத்தின் களுத்துறை மாவட்ட ஏற்பாட்டாளர். இவர் இரண்டு திருமணங்களை முடித்தவர். இவர் போராட்டத்தின் பிரதான நபராவார் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )