
மே தினக் கூட்டங்களை நடத்தியதன் மூலம் பலத்தை காட்ட கட்சிகள் பெரும் முயற்சி
தொழிலாளர் தினமான நேற்று முதலாம் திகதி அரசியல் கட்சிகள் தமது பலத்தை காட்டுவதற்காக மே தின கூட்டங்களை நடத்தியிருந்தன.
பிரதான கட்சிகள் சில இம்முறை பேரணிகளை நடத்தாது கூட்டத்தை மாத்திரம் நடத்தியிருந்தன. எனினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகள் பேரணிகளை நடத்தியிருந்தன.
2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெருமளவு ஆதரவாளர்களை திரட்டி இம்முறையே அரசியல் கட்சிகள் மேதி கூட்டத்தை நடத்தியுள்ளன. 2019 ஆம் ஆண்டில் ஈஸ்டர் தாக்குதல் காரணமாகவும், 2020, 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகவும், 2022 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி நிலைமையால் நாடு பாதிக்கப்பட்டிருந்தமையினாலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடனேயே மேதின கூட்டங்கள் நடத்தப்பட்டடன.
எனினும் இம்முறை அரசியல் கட்சிகள் தமது பலத்தை காட்டும் நோக்கில் பல்வேறு பிரதேசங்களில் இருந்து பஸ்களில் ஆதரவாளர்களை அழைத்து வந்து பிரமாண்ட மேடைகளில் மேதின கூட்டங்களை நடத்தியுள்ளன.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் ‘2048 வெற்றிகொள்வோம்’ எனும் தொனிப்பொருளில் கட்சியின் முன்னிலை தலைவர்களின் முன்னிலையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, செயலாளர் பாலித ரங்கே பண்டார உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டம் பொரளை கெம்பல் மைதானத்தில் ”சவால்களை முறியடித்து எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்வோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது. கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ஷவின் வருகையுடன் பிற்பகல் 3 மணியளவில் கூட்டம் ஆரம்பமானதுடன், அதனை தொடர்ந்து பிரதமர் தினேஸ் குணவர்தன அங்கு வருகை தந்தார். அத்துடன் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, கூட்டம் ஆரம்பமாகி சிறிது நேரத்தின் பின்னர் அங்கு வருகை தந்தார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பெருமளவான ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். எனினும் அந்தக் கட்சியினால் பேரணி நடத்தப்படவில்லை. நேரடியாக மக்கள் கூட்டத்திலேயே கலந்துகொண்டிருந்தனர். பெருமளவான மக்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதும் அவர்களிடையே உட்சாக கோசங்கள் பெருமளவில் எழவில்லை.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் மே தினக் கூட்டம் ”வேலைத்தளத்தில் ஆரம்பிக்கும் நாட்டுக்கான போராட்டம்” எனும் தொனிப்பொருளில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு ஏ.ஈ.குணசிங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.இதற்கான பேரணி மாளிகாவத்தை சிறிசேன மைதானத்தில் இருந்து ஆரம்பமானது. இதில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பெருமளவானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் மே தின பேரணி வழமைப் போன்று செம் மேதின பேரணியாக நடத்தப்பட்டது. “நாட்டை விற்கும் ஊழல் ஆட்சியாளர்களை விரட்டி அடிப்போம் – மக்களுக்கான ஆட்சியை அமைப்போம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பில் விஹாரமாதேவி பூங்கா பகுதியில் கூட்டம் நடைபெற்றது. இதற்கான பேரணி கொழும்பு பி.ஆர்.சி. மைதானத்திலிருந்து கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இதில் அரசாங்கத்திற்கு எதிரான பாதாதைகள், கலை அம்சங்கள் என்பன இடம்பெற்றன. இதில் கட்சியின் தொழிற்சங்கங்கள், அமைப்புகள், இளைஞர் மற்றும் மகளிர் அணிகள் என்பன கலந்துகொண்டிருந்தன.
அத்துடன் அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் சுயாதீனமாக இயங்கும் வீரவன்ச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் உத்தரலங்கா கட்சியின் மேதின கூட்டம் ”நாட்டை விற்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக” என்ற தொணிப்பொருளில் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் மே தின கூட்டம் கண்டியில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா உள்ளிட்ட அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் கண்டிமத்திய சந்தைக்கு அருகில் நடைபெற்றது. இதில் சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன் முன்னிலை சோஷலிச கட்சி நுகேகொடை நகரில் மேதின கூட்டத்தை நடத்தியது. அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகள் மற்றும் கலை அம்சங்களுடன் இதற்கான பேரணிகள் நடத்தப்பட்டது.
இதேவேளை தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பல்வேறு இடங்களில் மேதின கூட்டங்களை நடத்தியிருந்தன.
மேதின கூட்டம் மற்றும் பேரணிகள் காரணமாக கொழும்பு மற்றும் கண்டி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

