யாழில் வைரவரை அகற்றி மிகப் பெரிய பெளத்த விகாரை; நேற்று கலசம் வைக்கும் நிகழ்வு

யாழில் வைரவரை அகற்றி மிகப் பெரிய பெளத்த விகாரை; நேற்று கலசம் வைக்கும் நிகழ்வு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் தனியார் காணி ஒன்றில், பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் கட்டப்பட்ட பெளத்த விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

தையிட்டிப் பகுதியில் தனியார் காணி ஒன்றில்மிக நீண்ட காலமாக இருந்த நரசிம்ம வைரவர் கோயிலைப் பௌத்த விகாரையாக மாற்றி, பாரியளவிலான கட்டடம் அமைத்து அதற்கு நேற்று கலசம் வைக்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பெருமளவான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தையிட்டில் இவ்வாறு அமைக்கப்பட்ட இந்த விகாரை யாழிலேயே அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விகாரையிலேயே நேற்று கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

தனியார் ஒருவரது காணியில் இந்த விகாரை கட்ட சில வருடங்களுக்கு முன் படையினரின் ஆதரவுடன் தெற்கிலிருந்து வந்த பிக்கு ஒருவர் முயற்சித்த போது அதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதும் அதற்கு மத்தியில் இந்த விகாரை கட்டப்பட்டு நேற்று கலசம் வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

தமிழர் தாயகம் எங்கும் அரசாங்கம் புத்தர் கோயில்களை அமைத்து தமிழரின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்தி, தமிழரின் இருப்பை முற்றுமுழுதாக இல்லாது செய்யும் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றபோதும் அரசோ படையினரோ அதனைப் பொருட்படுத்தாது தொடர்ந்தும் அதனை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், வடதாயகமான யாழின் நாவற்குழியில் அரச குடியிருப்பு பகுதியில் சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு அங்கு ஒரு புத்தர் கோயில் அமைக்கப்பட்டு அதற்கு கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

தமிழ் மக்களின் காணிகள் வலி வடக்கில் குறிப்பிட்ட அளவு விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் இன்று வரை முற்று முழுதாக விடுவிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில், படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் தமிழர் அடையாளங்களை அழித்து அங்கு பௌத்த சின்னங்களை உருவாக்கி புத்தர் கோயில்களை கட்டும் செயற்பாடுகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் இடம் பெறுகின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )