
சாணக்கியனுக்காக சஜித் அணியினர் போர்க்கொடி; அரச தரப்பினர் கூச்சல் ,கடும் தர்க்கம்
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா. சாணக்கியனை அமைச்சர்களான அலிசப்ரி ,மனுஷ நாணயக்கார ஆகியோர் புலி,இனவாத முட்டாள் , மதவாதி என விமர்சித்தமைக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி போர்க்கொடி தூக்கியது.
பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா. சாணக்கியன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ‘இனவாதி,புலி’ என்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி ‘இனவாதமுட்டாள்,மதவாதி ‘ என்றும் பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வார்த்தைகளை பிரயோகித்து தன்னை விமர் சித்ததாக சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன் வைத்தார்.
இதனையடுத்து எழுந்த வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி சாணக்கியன் எம்.பி. யுடனான வாதத்தின் போது அந்த சூழ்நிலையில் நான் பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வார்த்தைகளை பிரயோகித்து உரையாற்றியிருந்தால் அதற்கு கவலை தெரிவித்துக் கொள்கிறேன்,அந்த வார்த்தைகளை வாபஸ் பெற்றுக் கொள்வதுடன் சாணக்கியன் எம்.பி.யிடம் மன்னிப்புக் கோருகிறேன் என்றார்.
இதன்போது எழுந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 225 உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகளே .மக்கள் தெரிவு,தேசிய பட்டியல் என்ற வேறுபாடு கிடையாது.மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உரையாற்றுவதற்கு அனைவருக்கும் பொறுப்பு உண்டு.பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதால் விரும்பிய அனைத்தையும் குறிப்பிட முடியாது.ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும்.
அமைச்சர் அலி சப்ரி செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரையை ஹன்சாட் பதிவில் இருந்து பெற்றுக்கொண்டுள்ளேன்..அமைச்சரே நீங்கள் ‘உரிய உறுப்பினரை நோக்கி நீங்கள் இனவாதி, முட்டாள்’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.இதனை நீக்கிக் கொள்ளுங்கள் நீங்கள் ஒரு கௌரவமான மதிக்கத்தக்கவர் என்பதால் நான் உங்களிடம் இதனை வலியுறுத்துகிறேன் .
பாராளுமன்றத்தில் கௌரவமான வார்த்தைப்பிரயோகங்களை மேற்கொள்ள வேண்டும்.ஆனால் நீங்கள் சாணக்கியன் எம்.பி. யை விமர்சித்த வார்த்தைகள் தவறு. உங்களை நான் மதிக்கின்றேன்.எனவே நீங்கள் மன்னிப்புக்கேட்பது மட்டுமன்றி அந்த வார்த்தைகளை ஹன்சாட்டிலிருந்தும் நீக்க வேண்டும் என்றார்.
சஜித் பிரேமதாச இவ்வாறு கூறும்போது அரச தரப்பினர் சிலர் கூச்சலிட்டனர். அப்போது அவர்களுடன் தர்க்கப்பட்ட சஜித் பிரேமதாச நான் ”கழுதைக்கதை ”கூறவில்லை என்றார்.
இதனையடுத்து எழுந்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான எரான் விக்கிரமரத்ன வும் சாணக்கியன் எம்.பி.யை அமைச்சர்கள் விமர் சித்த முறை ஏற்றுக்கொள்ள முடியாதது.பாராளுமன்ற உரைகளின் போதும்,அரசியல் கருத்து வெளியிடலின் போதும் ‘புலி’என்ற வார்த்தையை பிரயோகிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் அமைச்சர் அலி சப்ரி யின் கவலை, மன்னிப்பை வரவேற்கின்றோம். .இது சகல எம்.பி.க்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் எனக் கூறினார்.
இதன்போது எழுந்த அரச தரப்பு எம்.பி.யான பிரேம்நாத் சி தொல வத்த , எதிர்க்கட்சித்தலைவர் ”புலி”என்ற வார்த்தைக்கு எதிர்ப்புத்தெரிவித்துக்கொண்டு ”கழுத்தை” என்ற வார்த்தையை இங்கு பயன்படுத்தினார். அதனை நாங்கள் எதிர்க்கின்றோம் என்றார்.
இதற்கு விளக்கமளித்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ,நான் ”கழுதைக்கதை” என்றுதான் கூறினேன்.”கழுதை” என்று கூறவில்லை. சிலர் தாக்கு பொருத்தமானதைக் கூறுகின்றனர் என்றார்.

