தொலைக்காட்சி தொடர் நாடகங்களும் பெண்களும்

தொலைக்காட்சி தொடர் நாடகங்களும் பெண்களும்

(கலை )

சமூக வலைத்தளங்களில் அதனது பெரும்பான்மையான நேரத்தைச் செலவு செய்பவர்களில் பலர் அதன் தாக்கத்துக்கு உள்ளாகி, மிகவும் பாதிப்பான மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இதில் குடும்ப பெண்கள் தம் மனச்சுமையை மறக்கடிக்கும் ஒரு வடிகாலாக தொலைக்காட்சி பார்க்கத் தொடங்கி, வரும் நெடும் தொடர்களில் மூழ்கித் திளைத்துப் போகிறார்கள். இது பெரும்பாலான சமூகநலன் விரும்பிகளின்,கருத்தாக உள்ளது. ஆம்! தொலைக்காட்சி மக்களைத் தொடர்பு படுத்துவதில் முன்னணி வகிக்கிறத்து. இதன் வெளிப்பாடு, பல்வேறு வகையான தொலைக்காட்சி அலைவரிசைகள் வணிக ரீதியில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இவ் அலைவரிசைகள் ஒலிபரப்பாகும் தொடர் நாடகங்கள் பெண்களின் விரும்பி பார்க்கப் படும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளன. இதிலேயே மூழ்கிப் பழகிப் போனவர்களுக்கு இந் நாடகங்களில் வரும் கதாபாத்திரங்களை தம் குடும்ப அங்கத்தவர் போல எண்ணும் மனநிலை உருவாகிவிட்டது.

வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு தொலைக்காட்சிகளின் அலை வரிசையில் தொடர்ச்சியாக நெடும் தொடர் நாடகங்கள் ஒளிபரப்பப் படுவதால், அதற்குத் தம்மைப் பழக்கம் படுத்திக் கொண்டவர்களால் அதிலிருந்து மீள முடிவதில்லை. அதற்கு அடிமையாகிப் போனவர்கள் தனது சிந்தனைத் திறனை சாதாரண வாழ்க்கைக்கு பயன்படுத்தாமல் ஏதோவொரு கற்பனையான உலகில் வாழ்வதாக பிரமை கொள்கின்றனர்.
இதனால் தம் அன்றாட பணிகளைக் கூட சரியாகப் பார்க்க முடியாமல் எதையும் அவதிப்பட்டுச் செய்துவிட்டு அவசரம் அவசரமாக தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்து விடுகிறார்கள். இது குடும்ப உறவில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பிள்ளைகளே. இவர்களது எதிர்காலமும் கேள்விக்குறியாகின்றது.

பெண் விடுதலை, சம உரிமை என்று எதைப்பேசினாலும், விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்தாலும், எம் கலாச்சார விழுமியங்கள் மாறப் போவதில்லை. எவ்வளவு முற்போக்கான சிந்தனையுடைய பெண்ணாயினும் கல்யாணம் ஆகி விட்டால் அவளின் பொறுப்புக்கள் அதிகரித்து விடுகின்றது. சிக்கல்கள் எழும்போது வாழ்க்கையில் ஒரு பிடிப்பினை ஏற்படுத்துவதற்காக ஒரு பொழுது போக்காக ஆரம்பிப்பது பின்னர் அதற்கு அடிமையாகவே மாறி விடுகின்றனர்.
நாடகங்களில் காட்டப்படும் பெண்கள் ஒன்றில் எந்தக் கொலைபாதகத்திற்கும் அஞ்சாத வில்லியாகவும், அடுத்தவரின் குடும்பத்தில் புகுந்து குழப்பம் விளைவிப்பவராகவும் பேராசைக்காரியாகவும் குடும்பத்தைக் கவனிக்காத ஒருத்தியாகவும் காட்டப்படுவார். அல்லது எவ்வளவு சித்திரவதை செய்தாலும் திருப்பிக் கேட்காதவளாக, மிகவும் நல்லவளாகக் காட்டப்படுவாள். இப்படிப்பட்ட பெண்தான் குடும்பத்திற்கு உகந்த பத்தினி என்ற நாடகங்களை ஆர்வத்துடன் பார்ப்பதால் என்ன நன்மை விளையப் போகிறது? பிள்ளைகள் கூட இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற தப்பான அபிப்பிராயம் கொள்ளவே வழிவகுக்கும்.

முன்பு பெண்கள் சந்திக்கும் போது, தமக்கான பொருளாதார வாழ்வை
மேம்படுத்தும் திட்டங்கள் பற்றி, பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி பற்றி பலமுற்போக்கான கருத்துக்களை பேசினார்கள். ஆனால் இன்று பெண்கள் சந்திக்கும் போது, ஏன் தொலைபேசி உரையாடலில்கூட இத் தொலைக்காட்சி தொடர்களைப்பற்றியே பேசி, அதை அக்குவேறு ஆணி வேராக ஆராய்ந்து தம் மனக் குமுறல்களை மணிக்கணக்காகப் பேசுவதைப் பார்க்க முடிகிறது.

வீட்டிலிருக்கும் வயது வந்தவர்களுக்கான தேவைகளைக்கூட அரைகுறையாகச் செய்துவிட்டு நாடகங்களில் மூழ்கிக் கிடப்பதாலும், நாடகங்களில் வரும் பாத்திரமாக தம்மைக் கற்பனை செய்து நிஜ வாழ்க்கை வேறாக இருக்கும்போது அழுது புலம்பி தம் நிம்மதியை இழப்பதாலும் எதுவும் விளையப் போவதில்லை. நாம் கடந்து வந்த பாதை நீண்டது , கரடுமுரடானது. வாழ்க்கையை மேலும் மேலும் சிக்கலுக்குள் தள்ளாமல் பெண்கள் தம்மையும் தம் உறவுகளையும் காத்துக் கொள்வார்களா?

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )