செண்பகம் – எமது தேசியப் பறவை

செண்பகம் – எமது தேசியப் பறவை

                           

கறுப்பு உடலையும் காவிநிற ( செம்பட்டை ) செட்டைகளையும் கொண்ட செண்பகம் காகத்தை விட சற்றுப் பெரியது . சிவப்பு நிறமான கண்களைக் கொண்ட செண்பகம் குயிலின் குடும்பத்தைச்சேர்ந்தது ஆனால் கூடு கட்டும் வல்லமை உடையது . பகல் வேளைகளில் பனைவேலி ஓரங்களிலும் ,பூவரசம் மர நிழல் மற்றும் சிறு புதர்களின் அடியிலும் தனித்தும் சோடியாகவும் தரையில் தத்தி தத்தி மெதுவாக நகர்ந்து போகும் செண்பகம் புழுபூச்சிகளைத் தேடி உண்ணும். சிறு தூரங்களையே பறந்து கடக்கும் ஆற்றல் உடைய செண்பகம் ‘குகுக்…. குகுக்’ எனக் கத்தும் ஒலியைக் கொண்டு எளிதில் அதனை இனம் காணமுடியும்.

இதன் உயிரியல் பெயர் Centropus Sinensis ஆகும் . காலை வேளைகளில் தம் இறக்கைகளை மேல் நோக்கி விரித்து, தனியாகவோ சோடியாகவோ சூரியக் குளியல் மேற்கொள்ளும். செண்பகங்கள் பொதுவாக இளஞ் சூட்டு நேரங்களில் மிகச் சுறுசுறுப்பாகக் காணப்படும். இனப்பெருக்கக் காலமாகிய பெப்ரவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் ஒரு பெண் செண்பகம் தொடர்ந்து 3 முதல் 4 வரையிலான வெண்ணிற முட்டைகளை இட்டு அடைகாக்கும்.

செண்பகம் ஆனது செம்போத்து , குக்கில் ,செம்புகம், செங்காகம், என்று பல பெயர்களில் பழந் தமிழ் இலக்கியங்களில் விளிக்கப்படுகிறது. அவற்றுள் சிலவற்றை கீழே……

“கோழியுங் கூவின குக்கில் குரல்காட்டுந்
தாழியு ணீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக்
கூழை நனையக் குடைந்து குரைபுனல்
ஊழியு மன்னுவா மென்றேலோ ரெம்பாவாய்”.
(யாப்பருங்கலக்காரிகை, 23ஆம் காரிகை உரை மேற்கோள் )

குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல்
கடுவ தாமெனு மைக்கண் மடந்தையர்
குமுத வாயமு தத்தை நுகர்ந்திசை
பொருகாடை
குயில்பு றாமயில் குக்கில் சுரும்பினம்
வனப தாயுத மொக்கு மெனும்படி
குரல்வி டாஇரு பொற்குட மும்புளகிதமாக
(திருப்புகழ் )

தெரிகணை யெஃகந் திறந்தவர் யெல்லாம்
குருதி படிந்துண்ட காகம் – உருவிழந்து
குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால்
தப்பியா ரட்ட களத்து. (களவழி நாற்பது-05)

செண்பகம் மயிர்கொட்டிகளை பிடித்து உண்ணும். அருகி வரும் செண்பக இனம் மீண்டும் பெருகுவதால் மயிர்க் கொட்டிகளின் தாக்கத்தில் இருந்து நாம் தப்பிக்க முடியும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )