தீர்வா…? ஏமாற்றமா…?

தீர்வா…? ஏமாற்றமா…?

                              

ஐ நாவில் மனித உரிமைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெறப் போகிறது என்றாலே எம் மக்கள் பலத்த எதிர்பார்ப்புடன் ஒன்றாகத் திரண்டு விடுவார்கள். இந்த வருடமும் அப்படித்தான். எமக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் எம் மக்கள். ஜெனிவாவில் நடைபெறும் ஐ நாவின் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடரில், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும், போர்க்காலப்பகுதியில் காணாமற் போனவர்களுக்குமான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் விதமாக பிரிட்டனின் தலைமையில் தீர்மானத்தின் வரைபு கொண்டுவரப்பட்டது. இந்த வரைபிற்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், பாக்கிஸ்தான், பங்களாதேஷ், கியூபா உள்ளிட்ட 11 நாடுகளும், நடுநிலையாக 14 நாடுகளும் வாக்களித்து இருக்கிருக்கின்றன.

ஏற்கனவே, இனப் படுகொலை நடைபெற்றதற்கான காணொளிகள், புகைப்படங்கள், இராணுவத்திடம் சரணடைந்ததை உறுதிப் படுத்தும் ஆவணங்கள் போன்ற தகவல் திரட்டுகள் ஐ நா வசம் இருக்கின்றன. இருந்தும், அவற்றை உபயோகிக்க முடியாது, இலங்கையின் குற்றச் செயலை உறுதிப்படுத்தும் விதமாக தகவல் திரட்டப்பட வேண்டும் என்று அதற்காக பெருந்தொகை நிதியையும் ஒதுக்கியுள்ளது ஐ நா. இந்த ஆவணங்களைத் தேடித் திரட்டுவதில் மும்முரமாய் இருக்கிறார்கள் எம்மவர்கள்.

இப்போதைய கூட்டத் தொடரில், ஐ நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் ‘மிச்சேல் பச்லெற்’ தன்னுடைய அறிக்கையை வாசித்தார். இதில் இரண்டு முக்கியமான விடயங்களை அவர் குறிப்பிட்டு இருந்தார். இலங்கையின் நீதி நிர்வாகம் மற்றும் ஜனநாயக உண்மைத் தன்மை பற்றிக் குறிப்பிட்ட அவர் அவ்விரெண்டும் கேள்விக் குறியாகவுள்ளது என்ற கண்டனத்தைத் தெரிவித்து இருந்தார். இந்த அறிக்கையில் தமிழர்கள் என்ற பதமோ, சிறுபான்மையினர் என்ற சொற்றொடரோ இல்லை இனப்படுகொலை என்ற கடும் பிரயோகமோ இடம் பெறவில்லை. இது தமிழர்களுக்கு ஏமாற்றம்தான். ஒரு சிலர் ‘தமிழர்கள்’ என்று ஐ நா குறிப்பிட வேண்டும் என எதிர்பார்ப்பதே கேலிக் கூத்தானது என விமர்சிக்கின்றனர். அப்போ இனப்படுகொலை?

சரி, அறிக்கை அப்படி என்னதான் சொல்கிறது?

உள்நாட்டுப் போர் முடிவுற்று 12 ஆண்டுகளாகியும் அங்கு பல இடங்களில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன என்ற பகிரங்க குற்றச்சாட்டு.

கடந்த காலங்களில் நிலவிவந்த அடக்குமுறை, துன்புறுத்தல்கள் தொடர்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதிப் படுத்தப் படவில்லை என்ற கண்டனம்.
2015 இல், இனி மனித உரிமை மீறல்கள் நடைபெறாது என வாக்குறுதி அளித்த இலங்கை அரசு அதனைக் காப்பாற்றவில்லை.

சிவில், நிர்வாகப் பணிகளிலான இராணுவத் தலையீடு ஜனநாயக ஆளுமை மீதான ஆக்கிரமிப்பாக உள்ளது.

இவை போன்ற காரணங்களால், புதிய வகையிலான, பொறுப்புணர்வை உள்ளடக்கிய தீர்வை ஆராயவும், எதிர் காலத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறா வண்ணம் உறுதிப்படுத்தி, பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவழி செய்யவும் வேண்டும் என்ற பரிந்துரை.

இதில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி பேசப்படவில்லை. ஒன்றிணைந்த இலங்கைக்குள் இனி எதுவும் இவ்வாறு நடைபெறாது பார்த்துக் கொள்ளவேண்டும் என்றொரு அழுத்தம் கொடுக்கப் பட்டிருக்கிறது. இது இலங்கைக்கு அச்சுறுத்தல் அல்ல. இருந்தும், மிச்சேல் பச்செற்றின் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக இலங்கை அறிவித்திருக்கிறது. இவ்வறிக்கை ஆதாரமற்றது என்றும், இலங்கையின் சுயமரியாதையைப் பாதிக்கும் வகையில் இது இருப்பதாகவும் இலங்கை வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

மீளவும், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழாமல் பார்த்துக் கொள்வதாக அங்கு உறுதியளித்த கோத்தபாய, உள்ளகப் பொறிமுறையுடன் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப் படும் எனவும் தெரிவித்திருக்கிறார். வெளியார் தலையீடு தேவையில்லை என்பதை மீண்டும் அங்கு சூசகமாக வலியுறுத்தியிருக்கிறார். அதன் பின்னர் நியூயார்க்கில் ஐ நா செயலாளரைச் சந்தித்தபின், காணாமல் போனோரிற்கான மரணச் சான்றிதழ்களும் நட்டஈடும் வழங்கப்படும் என்று துணிச்சலாகப் பேட்டியளித்தார் கோத்தபாய.

காணாமற் போனோருக்கான மரணச் சான்றிதழ் கொடுப்பதும் மீளவும் எந்த வன்முறையும் நடக்காது என்பதும் நாங்கள் கொலை செய்தோம் என்பதை பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறார் என்றுதானே அர்த்தமாகிறது? 2010 இல் இலங்கை சென்ற போர்க் குற்றங்களுக்கான ஐ நாவின் அப்போதைய ஆணையர், அந்த நேரம் தான் மகிந்தவைச் சந்தித்தபோது ‘நான் அவர்களைக் கொன்றேன்’ என்று தன்னிடமே சொன்னதாக இப்போதுதான் வெளிவிட்டிருக்கிறார். இப்போது, கோத்தபாயவின் இந்த பகிரங்க அறிவிப்பு எந்த நாடுகளையும் அதிர்ச்சியடையச் செய்யவில்லை. மாறாக, பெரும்பாலான நாடுகள் அதை அங்கீகரித்து வரவேற்றிருக்கின்றன.

மனித உரிமை மீறல்கள் எதுவும் நடைபெறாது என்று கோத்தா வாக்குறுதியளித்த அதே வேளை, திரை மறைவில் வழமைபோல தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது சிங்கள அரசு. சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சுக்கு பொறுப்பாகவிருந்த லொகான் ரத்வத்த அநுராதபுரம் மற்றும் வெலிகட சிறைச்சாலைகளில் தமிழ் அரசியற் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி அராஜகம் செய்த பிரச்சனையின் பின்னர், அப்பதவியை ராஜினாமா செய்து விட்டார். ஆனால் தொடர்ந்தும் ராஜாங்க அமைச்சர் பதவியில் இருக்கிறார். அவர்மீது அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு போடப்பட்டுள்ளது. அதில்
அவர் ராஜாங்க அமைச்சர் பதவியில் நீடிக்கக் கூடாது.

அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் பாதுகாப்பிற்காகக் கொடுக்கப்பட்ட அந்தக் கைத்துப்பாக்கியைப் பறிமுதல் செய்ய வேண்டும்.

தமிழ் அரசியற் கைதிகளின் பாதுகாப்பிற்காக வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும்.
என்பனவும் உள்ளடக்கப் பட்டுள்ளன. இதுவரை சிங்கள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் எடுக்கப் போவதாகவும் தெரியவில்லை. கூட்டத் தொடர் முடியுமுன்னரே இத்தனை துணிவுடன் செயற்படுகிறார்கள் என்றால் பின்னாளில் தமிழர்களின் நிலைக்கு உத்தரவாதம் இருக்குமா?

புலம் பெயர் தமிழர்களுடன் தான் பேசத் தயார் என்ற கோத்தபாயவின் அறிவிப்பை அடுத்து, பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் 8 அமைப்புகள் சேர்ந்த ஒரு பிரிவும், அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் 4 அமைப்புகள் சேர்ந்த ஒரு பிரிவும், இந்தியாவை நம்பி அரசியல் செய்யும் இன்னுமொரு பிரிவும் பேசுவதற்குத் தயாராகி விட்டன.

இவை அனைத்தும், தமிழர்களை பகடைக் காய்களாக வைத்து திரைமறைவு ஒப்பந்தங்கள் நிகழ்ந்திருப்பதையும் இனியும் நிகழவிருப்பதையும் உறுதி செய்கின்றன.

உலக ஒழுங்கைத் தீர்மானிக்கும் உலக அரசியற் போக்குதான் எந்தவொரு நாட்டினதும் உள்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கின்றது என்பதை நாம் மறந்து விட முடியாது. இதன் ஒரு வெளிப்பாடாக நியூயார்க்கில் வைத்து ஜி எல் பீரிஸ் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசியிருக்கிறார்.

‘இனப் பிரச்சனைக்கான தீர்வு எட்டப்பட்ட பின், எஞ்சியுள்ள பிரச்சனைகள் தீர்க்கப் பட வேண்டும்’ என்று ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர், 13ம் திருத்தச் சட்டத்தை மீளுருவாக்கி அதை நிறைவேற்ற வேண்டும் தெளிவாகத் தெரிவித்த இந்தியா இப்போது அந்தர் பல்டியடித்து எஞ்சிய பிரச்சனைகள் என்று இழுப்பதன் நோக்கம் என்ன?

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குப் பகுதியை இந்திய வர்த்தகத்திற்காகக் கொடுப்பதாக முந்தைய சிங்கள அரசினால் செய்யப்படவிருந்த ஒப்பந்தம் புதிய அரசிடம் பிசுபிசுத்துப் போயிருந்தது. அம்பாந்தோட்ட துறைமுகம், port city என்று சிறிலங்காவின் இறைமையை சீனாவிடம் அடகுவைத்த இலங்கை அப்போது இந்தியாவிடம் சிங்கள மக்கள் தமது இறைமை பறிபோவதை விரும்பவில்லை என்று சப்பைக்கட்டு கட்டியிருந்தது. அதே அரசு இப்போது கொழும்புத் துறைமுகத்தின் மேற்குப் பகுதியை இந்தியாவிற்கு தாரை வார்த்திருக்கிறது. இந்தியாவால் அப்பகுதியை அபிவிருத்தி செய்ய முடியும், இந்தியாவிற்கான வர்த்தகத்திற்குரிய பாரிய கப்பல்களை நிறுத்தும் முக்கிய துறைமுகமாக பயன்படுத்த முடியும், சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி இலங்கையை அதனது பிடியில் வைத்துக் கொள்ளவும் முடியும். இதற்கான ஒப்பந்தம் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியான முறையில் எட்டப்பட்டிருக்கிறது. அதேபோல, GSP plus வரி ரத்து என்ற ஐரோப்பிய யூனியன் இப்போது சிறிலங்காவுடன் பேசி அதை மீளாய்வு செய்யும் நோக்கில் அதன் பிரதிநிதிகளை சிறிலங்காவுக்கு அனுப்பியுள்ளது.

ஆக, ஒன்றுபட்ட இலங்கையின் இறைமைக்குள் , அங்கு நடக்கும் அடிப்படை மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மிச்சேல் பச்லெற் அம்மையாரின் அறிக்கை, மரண சான்றிதழ் கொடுப்பதாக ஒத்துக்கொண்ட கோத்தபாயவின் துணிச்சலான பேச்சு, பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது போன்று எஞ்சிய பிரச்சனைகள் பற்றிய இந்திய வெளியுறவு அமைச்சரின் பேட்டி…… இவைகள் தமிழரின் எதிர்பார்ப்பிற்கு சாதகமானதாகவும் தெரியவில்லை, பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் போலவும் தெரியவில்லை.

35 வருடகால விடுதலைப் போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வருவதற்காக இந்தியாவும் மேற்குலகமும் சிறிலங்காவுடன் சேர்ந்து செய்த சதிகள் கொஞ்சமல்ல. ‘நீ மட்டும் ஆதாயத்தை அனுபவிக்கிறாய்…. நாங்கள் செய்த உதவிக்கான ஆதாயம் எங்கே?’ என்பதுதான் எஞ்சிய பிரச்சனைகள் என்ற பதத்தின் பின்னே தொக்கி நிற்கின்றதா?….. தமிழ்த் தரப்பு மூத்த அரசியல்வாதிகள் அரசியற் சூது அறியாதவர்களல்ல… இந்த அரசியற் சதுரங்கத்தில் அவர்களின் பங்கு என்ன…? ஆயிரம் கேள்விகள்.

மொத்தத்தில், கொன்றொழிக்கப்பட்ட, இன்னமும் விடுதலை வேண்டி நிற்கும் தமிழர்கள் பற்றி உலக அரசியல் அக்கறைப் படுவதாகத் தெரியவில்லை. மீண்டும் பகடைக் காய்கள் ஆக்கப்பட்டார்களா தமிழர்கள்?

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )