பொற்காலத்தில் ஒரு விடியல்

பொற்காலத்தில் ஒரு விடியல்

ஈழ விடுதலைப் போராட்டமானது தமிழர்களின் வாழ்வில் மாத்திரமன்றி தமிழ்ப் பெண்கள் வாழ்வியலிலும் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. நூற்றாண்டு காலமாக, சாதிய முறைமைகளினாலும் எழுதப்படாத கடுமையான சமூகச் சட்டங்களினாலும் முடக்கி வைக்கப் பட்டிருந்த பெண்களின் தனித்துவம், ஆயுதப் போராட்டம் நிகழ்ந்த உன்னதமான காலகட்டத்தில்தான் உணரப்பட்டிருக்கிறது, வெளித் தெரிந்திருக்கிறது.

விடுதலைப் போராட்ட காலத்தில், தரைப்படை, கடற்படை, விமானப் படைகளில் மட்டுமல்லாது விடுதலைக்காக கட்டியெழுப்பப் பட்டிருந்த அத்தனை துறைகளிலும் சமபங்கு வகித்து தமது விடுதலைக்கானதும் நாட்டு விடுதலைக்கானதுமான பங்கைச் செலுத்தியிருந்தனர் பெண்கள். ஈட்டிய வெற்றிகளில் பெண்களுக்கும் சம பங்கிருந்தது. இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? தாய் நாட்டின்மீதும் தம் மக்கள் மீதும் அடங்காப் பற்றுக் கொண்ட தலைவன் எங்களுக்குக் கிடைத்தான். அந்த ஒப்பற்ற வீரனின் பின்னால் தமிழினமே அணிதிரண்டது. போர்க்குணமும் ஒழுக்கம் தவறாத பண்பும் கொண்ட தலைவரின் பெண்களை மதிக்கும் ஒப்பற்ற குணம் ஆண்களின் மனதில் ஒரு பாரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியது வெளிப்படை. பெண்களின் எழுச்சிக்கு இதுவும் ஒரு பெரிய உந்துசக்தியாக அமைந்திருந்தது.

ஆயுதப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட பெண்களைத் தாண்டி, சமூகத்திலிருந்த பெண்கள் தாமாகவே பொது வெளிக்கு வந்து, தமது பங்களிப்பைச் செய்யக் கூடிய நிலையிருந்தது அன்று. சட்டம், ஒழுங்கு போன்ற வேலைகளிலும், தமிழீழக் காவற்துறையிலும் கல்வி கலாசார வேலைகளிலும் விருப்புடன் இணைந்து பணியாற்றிய பெருந்தொகைப் பெண்கள் இதற்கொரு எடுத்துக்காட்டு. ஏராளமான பெண் எழுத்தாளர்கள் உருவாகியிருந்தனர். நியாயத்தைத் தட்டிக் கேட்கும் துணிச்சலுடன் இருந்தனர். பெண்கள் மீதான குற்றங்கள் இல்லையெனும் அளவிற்கு கணிசமாகக் குறைந்திருந்தன. பாரதி கண்ட புதுமைப் பெண்ணை பாரதத்தில் இன்னும் தேடிப் பார்க்கவேண்டிய நிலையில், ஈழத்துப் பெண்கள் துணிச்சலுடன் நள்ளிரவிலும் நடமாட முடிந்தது. திரும்பிப் பாருங்கள்…….சாதியத்தின் பிடியிலும் சமூகக் கட்டுப்பாடு என்ற பெயரிலும் ஆண்களை விடவும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த பெண்களுக்கு, இந்தப் பொற்காலத்தில் ஒரு விடியல் கிடைத்தது.

இடைப்பட்ட இந்தக் காலகட்டத்தில், இந்திய ஆக்கிரமிப்பு இராணுவ படையெடுப்பும் வயது வேறுபாடின்றி பெண்கள் போராளிகளாகவும், நாட்டுப்பற்று மிகுந்த வீராங்கனைகளாகவும் உருவெடுக்க இன்னுமொரு காரணியாக அமைந்தது. எங்களுடைய வரலாற்றில் மிக முக்கியமான நாள் அக்டோபர் 10, 1987. அன்றுதான் அமைதிப்படை நரிகளின் சாயம் வெளுத்தது. பெரும் படையெடுப்பில் யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளினூடாக உள்நுழைய முயன்று விடுதலைப் புலிகளின் கடும் எதிர்ப்பைச் சந்தித்தார்கள் அவர்கள். இந்த நாளில்தான் விடுதலைப் புலிகளின் பெண்போராளி மாலதி சண்டையில் காயமடைந்து, சயனைட் உட்கொண்டு வீரச் சாவடைந்தாள். களத்தில் பலியான முதல் விடுதலைப் புலி பெண்போராளி இவள். 2ம் லெப் மாலதியைத் தொடர்ந்து, அன்றைய தினமே வீரவேங்கைகள் கஸ்தூரி, ரஞ்சி, தயா ஆகியோர் களப்பலியாகினர்.

1995ம் ஆண்டு, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 இல் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினர் ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுத்தனர். மாலதியின் நினைவுதினம் வருங்காலத்தில் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்பதே அது. அன்றிலிருந்து பெண்களின் சிறப்புக்களையும், அவர்களின் பிரச்சனைகளையும் வெளிக்கொணரும் நாளாக அக்டோபர் 10 கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின் பெண்களின் நிலை எப்படியிருக்கிறது? இனப்படுகொலையும் காணாமல் ஆக்கப்படுதல்களும் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்க, பெரும்பான்மையாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் கொண்ட சமூக அமைப்பாக மாறியிருக்கிறது எமது தமிழ்ச்சமூகம். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் இன்னமும் வறுமைக் கோட்டிற்குக் கீழேயே வாழ்கிறார்கள். வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தமிழ்க் கலாசாரம் சிதைக்கப்படுகிறது. இதன் ஒரு வெளிப்பாடாக, எமது அடுத்தடுத்த தலைமுறையினர் தலைநிமிர்ந்து வாழ முடியாத வண்ணம் கசிப்பு, போதைவஸ்து, பாக்கு விபசாரம் போன்றன திட்டமிட்டு புகுத்தப்பட்டு இளைய தலைமுறை சீரழிக்கப்படுகின்றது. கட்டுக்கோப்பாக இருந்த எமது சமூகம் இன்று ‘வாள்’ கலாசாரத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றது. வயது வரம்பின்றி, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் உச்சத்தை எட்டியுள்ளன.

எதிர்மாறாக, புலம் பெயர் தேசங்களில் பெண்கள் எந்த வேலையாக இருந்தாலும் எவரையும் நம்பியிராமல் தாமே செய்யத் துணிந்து விட்டனர், எல்லாத் துறையிலும் மிளிர்கிறார்கள். தாயகம், புலம்பெயர் தேசம் என்ற பிரிவினை இல்லாமல் பெண்கள் ஒன்றாகக் கரம் கோர்த்து வேலைகளில் இறங்கினால் சமூகத்தில் அவர்களைப் பிணைத்திருக்கும் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளில் இதற்கான அத்திவாரமிடுவோம்.

   -கொற்றவை
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )