
அரசியலமைப்பில் இருக்கின்ற; “13′ ஐ எப்படியும் அமுல்படுத்துவேன்; ஜனாதிபதி ரணில் உறுதி
“13′ வேண்டாம் என்றால் “22′ இன் மூலம் நீக்குங்கள்
சர்வக்கட்சிக் கூட்டத்தில் “13′ க்கு சிலர் கடும் எதிர்ப்பு
13 ஆவது திருத்த சட்டம் ஏற்கனவே இலங்கையின் அரசியல் யாப்பில் இருக்கிறது.அதனை நடைமுறைப்படுத்தவேண்டியது ஜனாதிபதி என்ற அடிப்படையில் என்னுடைய கடமை என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,அதனை கட்டாயம் நிறைவேற்றியே ஆவேன் என்றும் தெரிவித்துள்ள அதேவேளை, 13 ஐ நான் நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் யாராவது 22 ஆவது மறுசீரமைப்பைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யுங்கள் என்றும் சவால் விடுத்தார்.
நேற்று வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி தலைவர்களுடனான சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோர் 13 தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையிலேயே,ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி தலைவர்களுடனான சந்திப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தினக்குரலுக்கு தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இந்த கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழும்பியிருந்தது.குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோர் 13 ஐ அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் காணி,பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு உங்களுக்கு (ஜனாதிபதி)எந்த அதிகாரத்தையும் மக்கள் வழங்கவில்லை என்றும் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.இதற்கு பதில் வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,”நான் மக்களால் தெரிவு செய்யப்படாவிட்டாலும் மக்கள் பிரதிநிதிகளால் தெரிவு செய்யப்பட்டவன் என்ற அடிப்படையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கிறேன்.அந்த அடிப்படையில்,இலங்கையின் அரசியல் யாப்பில் ஏற்கனவே இருக்கின்ற 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டியது என்னுடைய கடமை. அதனை நான் செய்தே ஆவேன். ஒருவேளை நீங்கள் எதிர்ப்பதுபோல் 13 ஐ நான் நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் யாராவது 22 ஆவது மறுசீரமைப்பைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் சவால் விடுத்ததுடன்,இங்கு என் மீது சத்தம் போடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
எனவே இரண்டில் ஒன்று நடைபெற வேண்டும். 13ஆவது அரசியல் மறுசீரமைப்பை நீக்குங்கள். அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள். ஒன்றில் அதனை ஒழிக்க வேண்டும் இல்லையேல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.தனிப்பட்ட பிரேரணையொன்றைக் கொண்டு வந்து யாருக்கு வேண்டுமானாலும் அதனை நீக்க முடியும். அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தை தெரிவிக்காவிட்டால் நான் 13 ஐ நடைமுறைப்படுத்த நேரிடும்.அது என்னுடைய கடமை .அதனை நான் செய்வேன்.
மேலும் எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் நான் உறுதியளித்தவாறு காணிகளை விடுவிப்பேன்.அதேபோல் சில அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வேன்.
மேலும்,நாம் செய்யக்கூடியவை பற்றிய யோசனைகளை தருகின்றேன்.அது பற்றிய உங்கள் கருத்துக்களை என்னிடம் முன்வையுங்கள். நான் இதனை எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைப்பேன். உங்களிடம் ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால், 4 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை வழங்கினால், அவற்றையும் உள்ளடக்கி நாங்கள் முன்னோக்கிச் செல்வோம் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, இந்த நாட்டை பிரிக்க நான் தயாராக இல்லை. இலங்கையில் உள்ள தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர் உட்பட ஏனைய குழுக்களுடன் இணைந்து வாழ வேண்டும். நமது தேசிய கீதத்தில் “ஒரு தாயின் மக்கள்” என்பதை நாம் பாதுகாத்தால், நம் நாடு ஒற்றுமையுடன் முன்னேற முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பொருளாதார, அரசியல் பிரச்சனைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் படிப்படியாக தீர்த்து வைப்போம்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார் என்றார்.
அத்துடன்,‘’யாழ்ப்பாணம் பலாலி இடம் விடுவிக்கப்படும் திகதி குறித்து நான் பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி மற்றும் முப்படை பிரதானிகளுடன் கலந்துரையாடினேன். அவர்களின் தீர்மானத்திற்கமையவே நாம் செயற்பட்டோம். காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் நாம் மறுக்கவில்லை.
யுத்தம் முடிவடைந்தபோது பெருமளவிலான காணிகள் அரசாங்கத்திடம் இருந்தன. பின்னர் அவை முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரினால் பகிர்ந்தளிக்க்ப்பட்டன. எனினும் காணிகள் பகிர்ந்தளிக்கும்போது பாதுகாப்பு தொடர்பான முடிவுகளை எடுக்க நாம் பாதுகாப்புத் தரப்பினரிடம் அதனை கையளிக்க வேண்டும். அது தொடர்பான ஆலோசனைகளை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
காணி ஆணைக்குழுவை நாம் விரைவில் நியமிக்க வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதமளவில் அதற்கான சட்டமூலத்தை நாம் பாராளுமன்றத்தில் முன்வைக்கலாம். இதில் 09 பேரை மாகாண மட்டத்திலும் ஏனைய 12 பேரை ஜனாதிபதி சார்பாக நியமிக்கவும் நான் நினைத்துள்ளேன்.
அடுத்ததாக தேசிய காணி கொள்கையொன்றும் அறிமுகம் செய்யப்படும். காணி ஆணைக்குழுவால் தேசிய காணிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.மாகாண பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதிலாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும். அதற்கான திருத்தமொன்றைக் கொண்டு வந்து வேண்டுமானால் அதனை தோற்கடித்து மாகாண பொலிஸ் ஆணைக்குழுவை நடைமுறைப்படுத்தலாம். இரண்டில் ஒன்றை செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

