சுயேச்சைக்குழு வேட்பாளரை காரில் கடத்திச் சென்று அச்சுறுத்தி கையொப்பம் பெற்ற குழு; பிள்ளையானின் கட்சி மீது குற்றச்சாட்டு

சுயேச்சைக்குழு வேட்பாளரை காரில் கடத்திச் சென்று அச்சுறுத்தி கையொப்பம் பெற்ற குழு; பிள்ளையானின் கட்சி மீது குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாநகரசபைக்கு சுயேச்சைக் குழுவில் போட்டியிட இருந்த முன்னாள் கிராமசேவை உத்தியோகத்தர் எஸ். சிவலிங்கம் திங்கட்கிழமை நள்ளிரவு வெள்ளை காரில் ரி.எம்.வி.பி கட்சியினரால் கடத்திச் செல்லப்பட்டு, அச்சுறுத்தி வேட்புமனுப் பத்திரத்தில் கையொப்பம் இடச் செய்துள்ளதாக, ஜக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி முன்னாள் அமைப்பாளரும் பிரபல வர்தகருமான ஆறுமுகன் ஜெகன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கடந்த காலத்தில் ஜக்கிய தேசிய கட்சியால் மக்களுக்கு அபிவிருத்தி எதுவும் செய்ய முடியாத நிலையில் அதில் இருந்து வெளியேறி மக்களின் ஆணைப்படி மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் சுயேச்சைக் குழுக்களை அமைத்து போட்டியிடுவதற்கான செயற்பாட்டில் முன்னெடுத்து வருகின்றேன்.

இந்த நிலையில் மட்டு மாநகர சபைக்காக கல்லடி திருச்செந்தூர் 12 வது வட்டாரத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் கிராமசேவை உத்தியோகத்தர் எஸ். சிவலிங்கம் என்பவரை தெரிவு செய்து அவரின் சுயவிருப்பத்துடன் அந்த வட்டாரத்தில் போட்டியிடுவதற்கான எல்லா ஏற்பாடும் செய்திருந்தோம்.

இவ்வாறான நிலையில் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் என்றழைக்கப்படும் சி. சந்திரகாந்தன் கட்சியைச் சேர்ந்தவர்கள், நாங்கள் தெரிவு செய்த வேட்பாளரான சிவலிங்கத்தை 16ம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு அவரது வீட்டில் வைத்து வெள்ளை காரில் பலவந்தமாக கடத்திச் சென்று ரி.எம்.வி.பி கட்சி தலைமைக் காரியாலயத்தில் வைத்து அவர்களுடைய கட்சியில் போட்டியிமாறு தேர்தல் வேட்பு மனுப் பத்திரத்தில் கையொப்பம் இடச் செய்துள்ளனர்.

இவ்வாறான அடாவடித்தனமான செயல்பாடு கண்டிக்கப்பட வேண்டியதுடன் இதனால் ஏனைய வேட்பாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.இது தொடர்பாக மட்டு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையத்திலும் ஜனாதிபதியிடமும் முறைப்பாடு செய்யவுள்ளதுடன் இதற்குரிய சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.

இதற்கு ஆதாரமா கடத்தப்பட்ட வேட்பாளரான சிவலிங்கம் என்னுடன் கைதொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவரால் தெரிவிக்கப்பட்ட ஓடியோ பதிவு உள்ளது என்பதுடன் இதனை ஆதாரமாக அதிகாரிகளிடம் வழங்கி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )