
தேர்தலை நிறுத்துவதற்கான பின்னணியில் ரணில்,வஜிர அரசை இயக்குவதும் அவர்களே; அனுரகுமார கூறுகிறார்
ரணில் விக்கிரமசிங்கவும் வஜிர அபேவர்தனவுமே இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும், அவர்களே அமைச்சரவை செயலாளரின் ஊடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்பதை நிறுத்துமாறு பொதுநிருவாக செயலாளர் அறிவிக்க காரணம் என்றும் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் மாவட்ட செயலாளர்களுக்கு விடுத்த அறிவித்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அனுரகுமார இவ்வாறு கூறினார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் மாவட்ட செயலாளர்களுக்கு விடுத்த கடிதம் தொடர்பான விடயத்தில் ஒருபக்கத்தில் குறித்த அமைச்சின் செயலாளரும், இன்னுமொரு பக்கத்தில் அமைச்சரவை செயலாளரும் மற்றைய பக்கத்தில் அமைச்சரவையும் இருக்கின்றது.
இந்த விடயத்தில் அமைச்சரவையின் செயலாளர் இவ்வாறு தனியாக தீர்மானம் எடுத்திருக்க முடியாது. நான் அறிந்த தகவல்களுக்கமைய ஜனாதிபதியும் வஜித அபேவர்தனவும் ஒன்றாக கதைத்து, இந்த உத்தரவை அறிவிக்குமாறு அமைச்சரவை செயலாளருக்கு கூறியுள்ளனர்.
அப்படியென்றால் அரசாங்கம் அமைச்சரவையில் தங்கியிருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரிடமே இருக்கின்றது. பிரதமர் அதனை அனுமதித்துள்ளார் என்றார்.

