அரசுடனான பேச்சில் தமிழ் தரப்பில் மதியுரைஞர்களை இணைக்க வேண்டும்

அரசுடனான பேச்சில் தமிழ் தரப்பில் மதியுரைஞர்களை இணைக்க வேண்டும்

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசுடன் இடம்பெறும் பேச்சுக்களில் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சிவில் சமூகப் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் இணைத்துக் கொள்ள வேண்டும் என வடக்கு சிவில் சமூகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் அரசியல் தலைவர்கள் மட்டும் தமிழர் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வது என்பது கனதியான தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் பேச்சுவார்த்தையில் சிறீ லங்காவின் இராஜதந்திர சூழ்ச்சிகளை எதிர்கொள்வதற்கும் போதுமானது அல்ல எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழர்கள் பேச்சுவார்ததைகளில் கலந்து கொள்பவர்களுக்கு ஆராசனைகள் வழங்குவதற்காக தமக்கென பல்துறைசார் மதியுரைஞர் குழுக்களை (அரசியல் யாப்பு நிபுணர்கள், காணி அபகரிப்புகள் மற்றும் காணிச்சட்டங்கள் தொடர்பான அறிவுடையோர், அரசியல் அறிஞர்கள், பொருளாதார அறிஞர்கள், பல்வேறு துறைகளில் நிர்வாக அனுபவமுடையவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பிராந்திய விடயங்களில் பரீட்சயமுடையவர்கள் என) உருவாக்க வேண்டும். அவர்களைத் தகுந்த சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகளில் பொருத்தமான வகையில் இணைத்துக்கொள்வதுடன் அவர்கள் தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூறுபவர்களாகவும் இருக்க வேண்டும் எனவும் சிவில் சமூகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார், மன்னார் ஆயர் கு. இம்மானுவல் பெர்னான்டோ ஆண்டகை, திருகோணமலை ஆயர் நோயல் இமானுவல் ஆண்டகை, சிவகுரு ஆதீனம் – தவத்திரு வேலன் சுவாமிகள், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணியாளர் ப. யோ. ஜெபரட்ணம் ஆண்டகை உள்ளிட்ட மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் என600 வரையானோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைத் தீவின் தேசங்களுக்கு இடையிலான தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன. சிறீலங்காவின் ஜனாதிபதி எதிர்வரும் பெப்ரவரி 04ம் திகதிக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கான தீர்வுகளைக் காணப்போவதாகக் கூறுகின்றார். தமிழர் தரப்போ எவ்வித முன்னாயத்தமோ ஏகோபித்த கொள்கை இணக்கமோ இன்றி பேச்சுவார்த்தைகளில் இணைந்துள்ளது.

சிறீலங்கா இன்று பாரிய பொருளாதாரப் பேரழிவில் சிக்கியுள்ளது. கடந்த எட்டு தசாப்தங்களாக ஏனைய தேசங்களை, குறிப்பாக தமிழ்த்தேசத்தை சிங்களை பௌத்த மேலாதிக்கத்தின் எதிரியாகக் கருதி சிறீலங்கா செயற்;பட்டதன் விளைவு இது. இந்த உண்மையை இன்றுவரை சிங்கள தேசத்தின் பெரும்பாலான அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ. புத்திஜீவிகளோ, அல்லது மக்களோ வெளிப்படையாக ஏற்றுக்கொண்டதில்லை.

உண்மையை ஏற்க மறுத்தாலும் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதன் மூலமே தற்போதைய பொருளாதாரக் கையறு நிலையிலிருந்து மீளலாம் என்ற யதார்த்தம் உறைத்ததனாலேயே பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அரசுத்தரப்பால் விடப்படுகின்றன. இதுவே இன்று தமிழர் தரப்புக்கான பலமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில் தமிழர் தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை தொடர்பான எமது கரிசனைகளை நாம் வெளிப்படுத்த விரும்புகின்றோம் எனக் குறிப்பிட்டு நீண்ட பரிந்துரைகளையும் சிவில் சமூகத்தினர் முன்வைத்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )