
புதிய காணி விடுவிப்பு அறிவிப்புகள் இல்லை; ஏமாற்றிய ஜனாதிபதி ரணில்
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கும் புதிய அறிவிப்புக்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் ஏமாற்றமே மிஞ்சியது.
ஜனாதிபதி தனது வருகையின்போது கீரிமலை, காங்கேசன்துறை , மயிலிட்டி , பலாலி வடக்கு ஆகிய பகுதிகளில் முப்படையினரின் வசம் இருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக படைத்தரப்பு ஜனாதிபதியின் முன் உறுதி அளித்தது.
ஆனால் இக்காணிகள் 2019ம் ஆண்டு விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டவையாகும்.
அக்காலப் பகுதியில் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் , ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காணி விடுவிப்பு கைவிடப்பட்டது.
அதன் பின்னர் ஜனாதிபதியாக கோட்டாபய பதவியேற்றதை தொடர்ந்து காணி விடுவிப்புக்கள் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றாக கைவிடப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி தலைமையில், பாதுகாப்பு அமைச்சின் செயலர், முப்படைகளின்தளபதிகள், படைகளின் பிரதானி பங்குபற்றுதலுடன் யாழ் மாவட்ட செயலகத்தில் காணிவிடுவிப்பு தொடர்பில் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்த நிலையில், கீரிமலை, காங்கேசன் துறை , மயிலிட்டி , பலாலி வடக்கு ஆகிய பகுதிகளில் முப்படையினரின் வசம் இருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக படைத்தரப்பு ஜனாதிபதியின் முன் உறுதி அளித்தது.
இந்த காணிகளில் 30 ஏக்கர் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலும் மிகுதி ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

