
கோட்டா, மஹிந்தவுக்கு தடை விதித்தது கனடா
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கனடா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது.
அத்துடன், இலங்கை இராணுவப் படைப் பிரிவின் முன்னாள் அதிகாரி சுனில் ரத்நாயக்க மற்றும் கடற்படைப் புலனாய்வு அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்களின் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களில் இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடா வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இந்த நான்கு பேருக்கும் எதிராக கனடா அரசாங்கம் விதித்துள்ள தடைகள், இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான முக்கியமான அடுத்த படியாகும் என கனடா அரசாங்கம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பொருளாதார ஏற்பாடுகள் சட்டத்தின் விதிகள் தடை விதிக்கப்படுவோருடனான வணிக தொடர்புகளை தடை செய்வதால், கனடாவில இருக்கக்கூடிய அவர்களது சொத்துக்கள் உறைநிலையில் வைக்கப்படுவதுடன், குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டப்படி அவர்கள் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுவதும் தடுக்கப்படுகிறது.
இலங்கையில் 1983 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடையில் இடம்பெற்ற ஆயுதப் போரின்போது புரியப்பட்ட பாரதூரமானவையும், கட்டமைக்கப்பட்டவையுமான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு இலங்கையர்கள் மீதும் சிறப்புப் பொருளாதார ஏற்பாடுகள் சட்டத்திற்கு அமைவாகக் கனடா தடைகளை விதிக்கிறதென நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

