
உள்ளூராட்சி சபைகளை கலைக்கப்போவது யார் ?
அனைத்து உள்ளூராட்சி சபைகளினதும் ஆட்சிக்காலம் தற்போதுள்ள வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் மார்ச் மாதம் 18ஆம் திகதியுடன் முடிவடைவதால் தேர்தல் ஆணைக்குழுவே உள்ளூராட்சி சபைகளை கலைப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டும் என பிரதமரும் பொதுநிர்வாகம்,உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பிய முஜிபுர் ரஹ்மான் எம்.பி. ,
உள்ளூராட்சி சபைகளின் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் திகதி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சிக் காலம் முடிவடையும் காலம் மார்ச் மாதம் 18ஆம் திகதியாகும். அவ்வாறாயின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சிலர் சபை உறுப்பினர்களாகவே தேர்தலில் போட்டியிடும் நிலை ஏற்படுகின்றது. இது அநீதி.
அதுமட்டுமன்றி உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படாமல் அந்த மன்றங்களுக்கு தேர்தலை நடத்த வேட்புமனு கோஇது முதல்தடவை. அதனால் இதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சருக்கு அதிகாரம் இருக்கின்றது. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் நிலைப்பாடு என்னவெனக் கேட்டார்.
பொதுநிர்வாகம்,உள்ளூராட்சி சபைகள் மற்றும்மாகாணசபைகள் அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவரத்தன இதற்கு பதிலளிக்கையில்,
தேர்தல் ஆணைக்குழு தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கு அமைய, உள்ளூராட்சி சபைகளின் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு திகதி குறிப்பிட்டு வர்த்தமானி வெளியிட்டிருக்கின்றது. அதன் பிரகாரம் இன்று முதல் (நேற்று ) அதற்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வேட்புமனு தாக்கல் செய்யப்படுகின்றது. இதன் நடைமுறைக்கு அமைய உள்ளூராட்சி சபைகளின் ஆட்சிக் காலம் தொடர்பில் ஆணைக்குழுவே தீர்மானிக்கின்றது.
ஆனால் தற்போதுள்ள வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் அனைத்து உள்ளூராட்சி சபைகளினதும் ஆட்சிக்காலம் மார்ச் மாதம் 18ஆம் திகதியே முடிவடைகின்றது. அதனால் தேர்தல் ஆணைக்குழுவே அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே இதுதொடர்பில் யாரும் சந்தேகங்களை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை. ஏனெனில் களுத்துறை தொகுதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று (நேற்று) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது .எனவே நீங்களும் தயக்கமின்றி கட்டுப்பணம் செலுத்தலாம் என்றார்.

