
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தாமதமாகையில் ரணில் முன்வந்தால் ஜனாதிபதித் தேர்தல்
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தாமதமானால், அடுத்த தேர்தலாக ஜனாதிபதித் தேர்தலை இந்த வருட இறுதிக்குள் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டால், ஒரு வருடத்திற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பு விசேட சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதால் , அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தலை இந்த வருடம் நடத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை முதலில் நடத்தி அதில் அரசாங்க கட்சிகள் தோற்கடிக்கப்பட்டால் அது அடுத்த ஜனாதிபதித் தேர்தல் முடிவைப் பாதிக்கும் என்பதால் உள்ளூராட்சித் தேர்தலை எப்படியாவது ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 17, 2024 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவாரானால், நவம்பர் 17, 2023 க்குப் பிறகு ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்புமனுக்கள் கோரப்பட்டதன் பின்னர் தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

