
இனப்பிரச்சினை தீர்வுக்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்க முடிவு
-ஜன. 05 ஆம் திகதி அரசு – தமிழ் தரப்பு மீண்டும் பேசித் தீர்மானம்
-இராணுவம் இணங்கிய காணிகளை விடுவிக்க சம்மதம்
-ஏனைய காணி விடுவிப்பு குறித்து தேசிய பாதுகாப்பு பேரவையுடன் பேசி முடிவு
-அரசியல் கைதிகள் விடுதலை குறித்தும் சாதக சமிக்ஞை
ஜனவரி மாதம் 5 ஆம் திகதி மீண்டும் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களை சந்தித்து அரசியல் தீர்வுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளது.
அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் மக்களின் காணி விடுவிப்பில் உடனடி கவனம் செலுத்துவதற்கும் அரசாங்கம் உடன்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று மாலை நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே மேற்படி உறுதிமொழிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டன.
இந்த சந்திப்பில் அரசாங்க தரப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ,சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழர் தரப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அரசியல் கைதிகளுடைய விடுதலை மற்றும் காணிவிடுவிப்பு தொடர்பிலும் இந்தப் பேச்சின்போது கவனம் செலுத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டம் தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது. அதற்கமைய முதற்கட்டமாக வழக்கு தொடுக்கப்படாமல் சிறையில் உள்ள 14 அரசியல் கைதிகளில் ஐந்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் சிக்கல் இல்லை என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏனைய 9 பேரை விடுவிப்பது தொடர்பில் சில நடவடிக்கைகள் எடுக்கவேண்டியுள்ளதால் சட்டமா அதிபருடன் பேசி தீர்மானிப்பது என அரச தரப்பில் கூறப்பட்டது. இவர்களை பெப்ரவரி -04 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது என சுமந்திரன் நேற்றிரவு தினக்குரலுக்குத் தெரிவித்தார்.
அதேவேளை, வழக்கு விசாரணை உள்ள 16 கைதிகள் தொடர்பான விசாரணைகளை விரைவு படுத்துவது என தெரிவிக்கப்பட்டது.
சில காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் ஏற்கனவே இணங்கியுள்ளனர். விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் விவாதிக்கப்படும். அடுத்த கட்ட பேச்சின்போது காணி விடுவிப்பு குறித்த தகவல்களை வழங்க முடியும் எனவும் அரச தரப்பு கூறியது.மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி தமிழ் தேசிய கட்சிகளை மீண்டும் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தீர்வுக்கான பேச்சுவார்த்தை தொடர்பில் நிகழ்ச்சி நிரலை தயராரிப்பது குறித்துப் பேசப்படும். ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதிவரை இரு தரப்பு பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது என ஜனாதிபதி தலைமையிலான குழு தீர்மானித்திருக்கிறது என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அத்துடன், அரசியல் கைதிகள்,காணி விடுவிப்பு தொடர்பிலும் இந்தப் பேச்நின்போது கலந்துரையாடி முடிவுகளை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது எனவும் சுமந்திரன் கூறினார்.
இதேவேளை, நேற்றைய கூட்டத்துக்கு தமிழக் கட்சிகளின் தலைவர்களான சி.வி. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் குறுகிய அழைப்பு காரணமாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

