
வட- கிழக்கில் உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு கட்சிகள் தனித்தனியாக போட்டி?
அடுத்து வரவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக சந்திப்பது தொடர்பில் நேற்று இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாக தமிழசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா குடியிருப்பு பிரதேச கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சுமந்திரன், அடுத்து வரவுள்ள உள்ளூராட்சி தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக சந்திப்பது தொடர்பில் ஆராயப்பட்டதாகக் கூறினார்.
தொழில்நுட்ப ரீதியில் இவ்விடயம் குறித்து ஆராய்ந்தோம். வட்டார ரீதியாக ஒரு வீதமும் அதற்கு மேலதிகமாக விகிதாசார முறையிலேயும் சேர்த்துக்கொள்ளப்படுவது தொடர்பில் சென்ற முறை எமக்கு இருக்கும் அனுபவங்களின் அடிப்படையில் தனித்தனியாக போட்டியிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கூடுதலான உறுப்பினர்களை சேர்க்க முடியுமா? இல்லையா? என்கின்ற ஆராய்சியில் ஈடுபட்டுள்ளோம். அது தொடர்பில் நாம் சிந்திப்போம் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
இதேவேளை, தமிழரசுக் கட்சியின் இந்த அறிவிப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது, தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. உத்தியோகபூர்வ முடிவுகளை அறிந்துகொண்ட பின்னரே இது குறித்து எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் எனக் குறிப்பிட்டனர்.

