இந்திய மீனவப் படகுகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுமா?; ரணில் கூறியது செயற்படுத்தப்படுமா?

இந்திய மீனவப் படகுகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுமா?; ரணில் கூறியது செயற்படுத்தப்படுமா?

அத்துமீறும் இந்திய மீனவப் படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்று பிரதமராக இருந்த போது ரணில் விக்கிரமசிங்க கூறியது இப்போது செயற்படுத்தப்படுமா? என்று ஜே.வி.பி எம்.பி. விஜித ஹேரத் கேள்வியெழுப்பிய போது, தனக்கு ஜனாதிபதி முழு அதிகாரத்தையும் வழங்கியுள்ளார் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழில் அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு மீதான விவாதத்தின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு பதிலளித்தார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய விஜித ஹேரத் எம்.பி.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது மன்னாருக்கு சென்று இந்திய படகுகள் வந்தால் சூடு நடத்துவதாக கூறியிருந்தார். இப்போது அவர் ஜனாதிபதி, இதன்படி உங்களுக்கு தீர்மானங்களை எடுக்க முடியும் தானே?ஜனாதிபதியாக ரணில் செய்வீர்களா எனக் கேட்டார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி எனக்கு முழு அதிகாரத்தையும் வழங்கியுள்ளார். நான் செயற்படுகின்றேன்.

சட்ட ரீதியில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளால் அரசுடைமையாக்கப்படுகின்ற இந்திய இழுவை மடி வலைப் படகுகளை தேர்ந்தெடுக்கப்படுகின்ற எமது கடற்றொழிலார்களுக்கு

அப்படகுகளின் தொழில் முறைமைகளை மாற்றி சட்டரீதியிலான தொழில் முறைமைக்கென வழங்கும் திட்டமும் இருக்கின்றது. இதன் பயனாக இராட்சத இந்திய இழுவை மடி வலைப்படகுகளுக்கு முகங்கொடுத்து எமதுகடற்றொழிலாளர்களாலும் பயமின்றி கடற்றொழிலில் ஈடுபடக்கூடியதொரு சூழலை உருவாக்குவதே

கடற்றொழில் அமைச்சின் நோக்கம். அதாவது முள்ளை முள்ளால் எடுப்பது என்பார்கள். அதைப்போன்ற ஒரு செயற்பாடுதான் இது இந்திய இழுவை மடி வலைப்படகுகளின் எல்லைத்தாண்டியதும் சட்டவிரோமானதுமான செயற்பாடுகள் காரணமாக எமது கடல் வளம் பாரியளவில் அழிக்கப்படுவதுடன் எமது கடற்றொழிலாளர்களின் கடற்றொழில் சொத்துக்களும் பாதிக்கப்பட்டு அழிக்கப்பட்டு எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களும் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றது.

அந்த வகையில் இவ்விடயம் குறித்து நாம் முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகள் காரணமாக நாளடைவில் இப் பிரச்சினையிலிருந்து போதியளவு எம்மால் மீள முடியுமென எதிர்பார்க்கின்றேன். இதைவிடுத்து இப்பிரச்சினை குறித்து அரசியல் இலாபம் கருதி வெறும் விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் கிட்டப் போவதில்லை.

ஏற்கனவே கைப்பற்றப்பட்ட பழுதடைந்த இந்திய இழுவை மடி வலைப் படகுகளை பல்வேறு அழுத்தங்கள் எதிர்ப்புகள் மத்தியிலும் நாம் ஏலம் விட்டிருந்தோம். அந்த நிதியை, மேற்படி இந்திய இழுவை மடி வலைப் படகுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்கும் நாம் தீர்மாளித்துள்ளோம். அத்துடன் அரசுடைமையாக்கப்படுகின்ற இந்திய இழுவை மடி வலைப் படகுகளைத் திருத்தியமைத்து பயன்பாட்டில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இப்பிரச்சினை தொடர்பில் இரு தரப்பு இராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தைகளை நாம் இன்னமும் கைவிடவில்லை. அதற்கான முயற்சிகள் தொடர்கின்றன என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )