
அரசாங்கத்தில் இல்லை அரசியலில் இருக்கிறேன்; ரணிலின் நியமனத்திற்கும் பசில் பாராட்டு
ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சரியானது எனவும் அவரின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடக நிலையம் திறந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் நெலும் மாவத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.
நான் அரசாங்கத்தில் இல்லை. இப்போது 21 ஆவது திருத்தத்தின் மூலம் அரச நிர்வாகத்தில் பங்குபற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. நான் அரசாங்கத்தில் இல்லாவிட்டாலும் அரசியலில் இருக்கின்றேன்.
69 இலட்சம் மக்கள் வாக்களித்து கோட்டாபயவை ஜனாதிபதியாக்கினார்கள். அவர் பதவி விலகினார். அதன்பின்னர் பாராளுமன்றமே ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த நேரத்தில் அதற்கு பொருத்தமான நபரை தேர்வு செய்ய முடிவு செய்தோம். அந்தத் தேர்வு சரியானது என்று நினைக்கிறேன்.
ஏனெனில் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் சுதந்திரமாக அரசியல் செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த அரசாங்கத்தினால் பொருளாதாரம் மற்றும் பிற பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அண்மைய தேர்தல்களில் வெற்றியைப் பெற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பசில் ராஜபக்ச, மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாமல் போனதற்கு மன்னிப்புக் கோரினார். எவ்வாறாயினும், பின்னடைவுகளை நிவர்த்தி செய்து, தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

