
பௌத்தம் தொடர்பில் ரணில்- சஜித் சர்ச்சை
பௌத்த தம்மபதம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கடந்த 3 நாட்களாக பாராளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது.
திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது சஜித் பிரேமதாச, தம்மபதமொன்றுடன் பௌத்த போதனையொன்றை நினைவூட்டி கருத்து தெரிவித்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உரையாற்றிய ஜனாதிபதி தானும் சில தம்மபத போதனைகளை கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து மீண்டும் நேற்று புதன்கிழமை அது தொடர்பில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதியின் தம்மபத போதனையின் போது கூறிய கருத்தில் தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன்போது குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகையில்,
அரசியலமைப்பில் பௌத்த மதம் தொடர்பில் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் சில விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டியுள்ளது. அதில் பாராபர சூத்திரம், வசர சூத்திரம் ஆகியவற்றில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த சூத்திரங்கள் தொடர்பில் நான் சில விடயங்களை குறிப்பிட்டிருந்தேன். அதில் தேரர்களுக்கு எதிராக பேசுவது தவறு என்பதனை சுட்டிக்காட்டியிருந்தேன்.
ஜனாதிபதி நன்றாக புத்தகங்களை வாசிப்பவர். ஆனால் அவர் அங்குலிமால என்பவர் காவி உடையில் கௌதம புத்தருக்கு எதிராக செயற்பட்டவர் என்று கூறினார். அது தவறானது. அதனை நான் சரியாக கூறுகின்றேன். அவர் தேவதத்வ என்பரே புத்தருக்கு எதிராக செயற்பட்டார். ஏதேனும் தவறு நடப்பது மனித இயல்பே. இதனால் நானே அந்த தவறை சரி செய்கின்றேன் என்றார்.
இதனை தொடர்ந்து சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுகையில்,
இந்த சபையில் தினமும் தம்மபதவுடன் ஆரம்பிப்பது நல்லதே. அடுத்த வருடத்தில் ஏப்ரல் மாதத்தில் இருந்து மனதை அமைதிப்படுத்துவதற்கான 10 நிமிட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளேன். அனைத்து மதத்தவர்களையும் அதனை சேர்க்கவுள்ளேன் என்றார்.

