சமஷ்டி என்றால் நாடு 9 துண்டாகிவிடும்;  வட, கிழக்கு பகுதியில் பௌத்தத்துக்கு அச்சுறுத்தல்

சமஷ்டி என்றால் நாடு 9 துண்டாகிவிடும்; வட, கிழக்கு பகுதியில் பௌத்தத்துக்கு அச்சுறுத்தல்

65 வருடங்கள் சிங்களவர்களுடன் இருந்துவிட்டு வடக்கிற்கு சென்று சிங்களவர்களுக்கு அங்கு வசிக்க முடியாது என்று விக்னேஸ்வரன் கூறுவது எந்தவகையில் நியாயமானது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் சுகாதார அமைச்சு, புத்தசாசன மத விவகார அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் 72 வீத பௌத்தர்களும், 12 வீத இந்துக்களும், 9.7 வீத முஸ்லிம்களும், 6.3 கிறிஸ்தவர்களும் வசிக்கின்றனர். ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்து எமது நாட்டில் தேராவாத பௌத்தம் இருந்ததுடன், எமது அரசியலமைப்பில் பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்களவர்களுக்கு ஒரே நாடே இலங்கை. இதனாலேயே இலங்கையை ‘சிங்களே’ என்று முன்னைய காலத்தில் அழைத்துள்ளனர். இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் பொறுப்பு சிங்களவர்களுடையது. நாட்டை எதிரிகள் கைபற்ற முயன்ற போது அவர்களை சிங்களவர்களே தோற்கடித்தனர். நாட்டை பாதுகாத்தாலே சிங்கள இனத்தை பாதுகாக்க முடியும். சிங்கள இனத்தை பாதுகாத்தாலே சாசனத்தை பாதுகாக்க முடியும். இதனால் சாசனத்தை பாதுகாக்க நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும். நாடு சமஷ்டியாகி 9 துண்டுகளாகினால் வடக்கு, கிழக்கில் சாசனத்தை பாதுகாக்க முடியாது.

வடக்கு, கிழக்கில் பௌத்த தொல்லியல் இடங்கள் அழிவடையும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வடக்கில் சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் விரட்டி இன சுத்திகரிப்பை மேற்கொண்டது பிரபாகரன் மட்டுமன்றி பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகளுமே ஆகும்.

பாராளுமன்றத்தில் விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் நிலம் என்று கூறுவதற்கான பொய்யான வரலாறுகளை காட்டுகின்றார். அவர் வடக்கு முதலமைச்சராக இருக்கும் போது சிங்களவர்களுக்கு வடக்கில் வசிக்க உரிமையில்லை என்று கூறியுள்ளார். அவர் கொழும்பு ரோயல் கல்லூரியில் சிங்களவர்களுடன் படித்து, சட்டக்கல்லூரியிலும் சிங்களவர்களுடன் கற்று 65 வருடங்கள் சிங்களவர்களுடன் இருந்துவிட்டு வடக்கிற்கு சென்று சிங்களவர்களுக்கு வடக்கில் வசிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

புத்தர் சிலைக்கு எதிராக பேரணிகளை நடத்தினார். தமிழ் இளைஞர், யுவதிகளிடம் சிங்களவரை திருமணம் முடிக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். 1940 முதல் சிங்கள அரசியல்வாதிகள் திட்டமிட்டு தமிழ் பெண்களை கருத்தடைக்கு உட்படுத்தியதாக கூறி தீர்மானத்தையும் நிறைவேற்றியிருந்தார். இவ்வாறானவர்களுடன் நல்லிணக்கம் தொடர்பில் கதைக்க முடியுமா?

குருந்தூர் மலையில் புனித சின்னத்தை பிரதிஸ்டை செய்ய சென்றபோது, தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் சண்டியர்களுடன் வந்து அதனை நிறுத்தினர். அவர்களின் செயற்பாடு அனைத்து தமிழ் மக்களுக்கும் அவமதிப்பாகும்.

இதேவேளை வடக்கில் மரணித்த பயங்கரவாதிகளை நினைவு கூர்ந்தனர். தமது பிள்ளை பயங்கரவாதி, கொலைகாரனாக இருந்தால் வீட்டுக்குள் தீபமேற்றி நினைவு கூருவதில் தவறில்லை. விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்து தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (2 )