சிங்கள மக்களிடையே தமிழர் தொடர்பில் புரிதல் ஏற்பட்டு வருகிறது

சிங்கள மக்களிடையே தமிழர் தொடர்பில் புரிதல் ஏற்பட்டு வருகிறது

மாவீரர் நாள் நிகழ்வுகளை பெரியளவிலான இடையூறுகள் இன்றி நடத்திச் செல்ல இடமளித்தமை சிங்கள மக்களிடையே தமிழ் மக்கள் தொடர்பில் புரிதல் ஏற்பட்டு வருகின்றது என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது என்றும், இந்தப் புரிதல் இன்னும் வளர வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து, வெளிவிவாகரம் மற்றும் ஊடகத்துறை ஆகிய அமைச்சுக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறீதரன் எம்.பி மேலும் கூறுகையில்,

வடக்கு, கிழக்கில் மாவீரர்களை நினைவு கூரும் நாளுக்கு சிறு சிறு இடையூறுகளை படையினர் மேற்கொண்டாலும் பெரியளவில் இடையூறுகள் இன்றி அந்த நிகழ்வுகளுக்கு அனுமதித்த ஜனாதிபதிக்கும் மற்றும் சிங்கள சகோதரர்களுக்கும் நன்றிகளை கூறிக்கொள்கின்றேன். நாட்டில் இப்போதாவது புரிதல் ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. இந்த புரிதல் இன்னும் வளர வேண்டும் என்ற தேவை இருப்பதாகவே உணர்கின்றேன்.

இப்படியான நிலைமையிலும் மட்டக்களப்பு தாண்டியடி, யாழ்ப்பாணம் கோப்பாய், முல்லைத்தீவு முள்ளியவளை உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் இப்போது இராணுவ முகாம்களாக இருக்கின்றன. இவற்றை மனிதாபிமான அடிப்படையில் மக்களின் மனங்களை புரிந்துகொண்டு அவர்களின் பெற்றோர் அங்கு விளக்கேற்றும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

நாட்டில் நடக்கும் விடயங்களின் தொடர்ச்சியே நாட்டின் சமாதானம் தொடர்பில் சிந்திக்க வைக்கின்றது. சர்வதேச சமூகத்தின் செயற்பாடு, ஒத்துழைப்பு இன்றி நாட்டில் நிரந்தர சமதானத்தை ஏற்படுத்த முடியாது. இதன்படி அவர்களின் ஒத்துழைப்புகளை பெற்று சமதானத்தை ஏற்படுத்த வேண்டும். நாட்டை சீரான பாதைக்கு கொண்டு செல்ல தமிழர்கள் தயாராக இருக்கின்றனர் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )