
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்; சிறையில் உள்ளோர் குறித்து ஆராய்வு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள கைதிகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையில் வெள்ளிக்கிழமை நீதி அமைச்சில் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ட்ரான் அலஸும் கலந்து கொண்டார்.
இந்தச் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள கைதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், அவர்கள் சிறையில் கழித்த காலம் மற்றும் அவர்களின் விடுதலை தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ,சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் விடுவிக்கப்பட்ட கைதிகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பான உண்மைகளை கலந்துரையாடலுக்கு வந்திருந்த சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் விளக்கமளித்தனர். .
சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, சிறைச்சாலைத் திணைக்களம் ஆகியன இணைந்து இந்தச் சட்டத்தின் கீழ் உள்ள கைதிகளின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் நீதி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், நீதியமைச்சு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

