
கேள்விக்குறியாகும் எதிர்காலம்; இலங்கையில் தமிழ் மாணவர்களை ஆக்கிரமிக்கும் போதை பொருள்; இளவயது கர்ப்பங்கள்
(மாலினி மோகன்)
இலங்கையில் இன்று எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு விடயம் கொரொனாவுக்குப் பிறகு இந்த கொடிய போதைப் பொருள் பழக்கமாகி உள்ளது.
கொரொனாவுக்குப் பயந்து வீட்டுக்குள்ளே அடைந்தவர்கள் இன்று இன்னுமொரு வைரசுக்கு அடிமையாகியுள்ளனர் என்றே கூற வேண்டும். அதிலும் சிறுவர்கள் ஒட்டுமொத்தமாக இந்த போதைப் பொருட்களிடம் தோற்று போயுள்ளனர். எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு போதைப் பொருள் பற்றிய செயதி எம் காதுகளுக்கு வந்த வண்ணமே உள்ளது. குழந்தை முதல் குமரி வரை எங்கும் அவர்களை தம் வசப்படுத்தி கட்டுக்குள் கொண்டுள்ளது இந்த போதை என்றால் அது மிகையல்ல. ஆச்சர்யம் கலந்த பயத்தில் கண்கள் அகல விரியுதே தவிர ஆகியது ஒன்றும் அல்ல . தொடர்ந்து போதை பரவல் தன் வேலையை பல்வேறு கோணங்களில் காட்டிக்கொண்டே பரந்து விரிந்து வியாபித்த வண்ண முள்ளது.
பொதுவாக இன்றைய கால கட்டத்தில் வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளில் போதைப் பொருள் பாவனை தற்போது அதிகரித்து வருவதை அறிய முடிகின்றது. யாழ்ப்பாணத்தின் வடக்கில் போதைக்கு அடிமையாகியதில் அண்ணன் தம்பியே கூட்டு வன்புனர்தலில் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகின்றது. பாடசாலை மாணவர்கள் மாவா, ஐஸ் என்கின்ற போதைப் பொருட்களுக்கு பழக்கப்பட்டு பல்வேறு பிரச்சினைளுக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் முகம் கொடுத்து வருவது யாவரும் அறிந்ததே. இன்று இதன் விஸ்வரூபம் பல்வேறு வண்ணங்களில் இனிப்பு பண்டமாக சந்தைகளுக்கு வந்துள்ளது. பாட சாலை மாணவர்களை இலக்கு வைத்தே கவர்ச்சிகரமான நிறங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டின் எதிர்கால தலைமுறையை அழிக்கும் ஒரு வேலைதிட்டமாக இன்று இப்போதைப் பொருளின் வருகை பதிவாகியுள்ளது. இது தொடர்பான படங்களும் விழிப்புணர்வு பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் இன்று பேசு பொருளாக காணக்கூடிய நிலையிலும் வடக்கு,கிழக்கு, மலையக பாட சாலை மாணவர்கள் இந்த இனிப்பு போதைப் பொருள் பாவனையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
இது இவ்வாறு இருக்க வடக்கு, கிழக்கு பகுதிகளில் பாடசாலைகளில் பெண் பிள்ளைகள் சிலர் சிகரெட் பிடிக்கும் கலாசாரத்தை தன்வசப்படுத்தி வருகின்றனர். சில செலவந்த குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளே இவ்வாறு போதைக்கு அடிமையாகி வருகின்றனர். மேலும் யாழில் ஊசிகள் மூலம் போதைப் பொருள் விற்கப்பட்டு வருகிறது. இதன் போது ஊசிகள் பயன்படுத்திய 10 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 320 பேர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் 18 23 வயதிக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது இடங்களில் போதை அருந்துதல் தடை ஆயினும் இன்று இதுவே இடைவிடாது இடம் பெறுகிறது. பாதுகாப்பு படையினர் சிலர் கண்டும் காணாமல் போவதும், அவ்வாறு அன்றி அவர்களையும் தன் வசப்படுத்தி அதில் பலர் குளிர் காய்கின்றனர்.
இப்படி பட்ட காவலாளிகள் கூட்டம் எப்படி உருப்படும். எவருக்குத்தான் பயப்படும். மேலும் பிரபல பாடசாலைகளின் மாணவர்கள் சிறுவயதில் கர்ப்பம் தரிப்பது எண்ணளவில் இன்று அதிகரிகின்றது. மலையகத்தின் பிரபல பாடசாலை ஒன்றில் இவ்வருடத்தில் மட்டும் சிறுவயது கர்ப்பம் தரித்த பெண்கள் சுமார் 5 என தெரிய வந்துள்ளது. பெண் பிள்ளைகள் போதைக்கு அடிமை ஆவதும் சிறுவயதில் கர்ப்பம் தரிப்பதும் அவர்களின் எதிர்கால வாழ்வையே அழித்து விடுமால்லவா. இது மிக பெரிய சிறுவர் துஸ்பிரயோகம் அல்லவா.
எங்கே தான் செல்கிறது எமது கலாசாரம்? இப்பாதிப்பு எம் தமிழ் இனத்துக்கே சாபக்கேடாகி உள்ளது. எனைய முஸ்லீம், சிங்கள இன மக்களின் சில கட்டு கோப்பான
சாம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், ஒற்றுமை என்பன அவர்கள் இனத்தை பாதுகாத்து உள்ளது என்றே கூற வேண்டும்.
“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே.. அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே ‘ இது பழைய கதை. இன்று நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் செல்போன் பாவனையிலே இது புதிய கதை. இன்று பிறக்கும் குழந்தைகள் செல்போன் உடனே பிறக்கின்றன. உணவுக்கு, உறவுக்கு, கல்விக்கு, தனிமைக்கு என அவர்களுக்கு செல்போன் தேவை படுகிறது. இப்படியே காலப்போக்கில் தனிமையில் செல்போனுடன் அடைந்து கொள்கின்றனர். மனிதரை மறந்து உயிரில்லா ஒன்றுக்காக உயிரையே விடுகின்றனர். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். இன்று செல்போன் மட்டுமே இளைய சமூகத்திற்கு கண்கண்ட தெய்வம் ஆயிற்று. மேற்
குறிப்பிட்ட மாவோ, ஐஸ், டொபி, சிகரெட், மதுபானம் என்பன ஒருவகை போதை என்றால் இவற்றை எல்லாம் சிறுவர்களுக்கு அறிமுகம் செய்யும் செல்போன் எனும் போதையை என்னவென்று சொல்வது.
முன்பெல்லாம் பாடசாலை மாணவர்களின் பைகள் சோதனைக்கு உட்படுத்த தேவை இருக்க வில்லை. ஆனால் தற்போது சில தரகர்கள் மற்றும் போதைப் பொருள் வியாபாரிகள் போதைப்பொருளை விநியோகிக்க மாணவர்கள் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்ததை அடுத்து நகர்ப்புற மற்றும் பிரதான பாடசாலைகளில் மாணவர்களின் பாட சாலை பைகளை பரிசோதிக்கும் முறைமையொன்று தயாரிக்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இம்முறைமை பாடசாலை மாணவர்களை வெகுவாக பாதிக்கவே கூடும்.
இவ்வாறு எம் சமூகம் ஒன்றை கடந்து இன்னொன்றை கடந்து அடுத்து அடுத்து புதிய புதிய போதைப் பொருளுக்கு அடிமையாகி கொண்டே செல்வதால் இளைய சமுதாயம் எப்படி எதிர்கால தலைமையை ஏற்க போகின்றது.
நாட்டுக்கு தேவையான வைத்தியர்கள், பொறியியலாளர், சட்டதரணி, ஆசிரியர்களை எங்கே தேடுவது? இப்படியே சென்று கொண்டிருந்தால் இப்போது நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கலை விட பன்மடங்கு பல்வேறு பிரச்சினைகளை நாடு எதிர்கொள்ள நேரிடும் என்பது கண்கூடு. படித்த சமுதாயம் ஒன்று உருவாக்கப்பட்டால் மட்டுமே எம் சமுதாயம் தலைநிமிரும். அன்றேல் இப்படி பல்வேறு போதைப் பொருள்களுக்கு அடிமையாகி நாட்டை, வீட்டை சீரழிக்கும் கூட்டம் தொடர்ந்து பெருகி சென்றால் சிறிது காலத்துக்குள் எம் தமிழ் இனம் தலை மறைவாகி போவது உறுதியே.

