
எழுமின்! விழிமின்!
அரசியற் கொள்ளைகளினாலும், கொள்கையற்ற அரசியலினாலும் இலங்கை வாழ் மக்கள் நடுத்தெருவிற்கு வந்து நீண்ட நாட்களாகி விட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பணவீக்கம் 70.2% ஐத் தாண்டி விட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உணவுப் பொருட்களின் விலை முன்பிருந்ததைக் காட்டிலும் 84.6 சதம்வரை உயர்ந்துள்ளதாகவும் அவை தெரிவிக்கின்றன.
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், உரத் தட்டுப்பட்டினால் விவசாயம் செய்ய முடியாதிருப்பதாகவும், இனி வரும் மாதங்களில் நிலைமை இன்னும் மோசமடையும் என்றும் ஐநா அச்சம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான உடனடி உதவியாக, ஆஸ்திரேலியாவிலிருந்து பதினைந்து மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரிசியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது ஐநா.
எவ்வளவு கடன் இருந்தாலென்ன? நாட்டுக்காக என்று எந்த ஒரு அரசியல்வாதியாவது தனது ஒரு நேர உணவையாவது தியாகம் செய்திருக்கிறானா? கடன்களைப் பெற்றுக்கொள்ள என்ற சாக்கில், அரச செலவில் பாரியார் சகிதம் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பிரயாணம் செய்கிறார் நாட்டின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
ஒரு புறத்தில், தாயகத்தில், தமிழ் மக்களின் இருப்பை மறைமுகமாக மறுதலிக்கும் சிங்கள அரசு, பொது வெளியில், புலம்பெயர் தமிழர்கள் இணைந்து நாட்டைத் தட்டித் தூக்கிவிட வேண்டும் என்ற அழைப்பை விடுக்கிறது. தமிழர்களுடன் நல்லிணக்கத்தில் இருப்பதான ஒரு மாயையை வெளியுலகிற்குக் காட்ட முயல்கிறது.
நாடு திவாலாகும் நிலையிலும், எந்தவொரு தமிழனும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடாது என்பதிலும், தமிழர்க்கென்று பூர்வீக நிலம் இருக்கக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறது சிங்களம். அதிகார துஷ்பிரயோகம் செய்த தனது அரசுக்கெதிராக கிளர்ந்த மக்களை, சட்டத்திற்கு புறம்பாக நடந்தார்கள் என்று கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தும் அதே சிங்கள அரசு, தமிழர் பிரதேசத்தில் நீதிமன்றின் ஆணையையும் தூக்கியெறிந்து தமிழர் பூர்வீகப் பிரதேசத்தையும் விளைநிலங்களையும் அபகரிக்கப் பார்க்கிறது.
முல்லைத்தீவு குமுழமுனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் இருக்கும் ஆதி சிவனின் ஐயனார் கோவிலை அழித்து, அந்த இடத்தில் இரவோடிரவாக விகாரை கட்டப்படும் வேலைகள் நடைபெற்றதும், அதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடையுத்தரவு போட்டிருந்ததும் தெரிந்ததே. தடையுத்தரவு மட்டுமல்லாமல், கட்டப்பட்ட விகாரையும் கொண்டுவரப்பட்ட சிலைகளும் உடனடியாக அப்புறப்படுத்தப்படவும் வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது நீதிமன்று. தடையுத்தரவையும் மீறி மீண்டும் விகாரை கட்டுமானம் நடைபெற்றது மட்டுமல்லாமல், அந்த இடம் உத்தியோகபூர்வமாக பிக்குகளிடம் கையளிக்கப் படுகிறது, விகாரைக்கென தண்ணீரூற்றுப் பிரதேசத்திலிருந்து 632 ஏக்கர் தமிழர்களின் விளைநிலங்கள் சுவீகரிக்கப்படவுள்ளன என்ற செய்திகளைக் கேட்டு கொந்தளித்துப் போயுள்ளனர் தண்ணீரூற்று, குமுழமுனை மக்கள். நியாயம் கேட்டு சனநாயக முறையில் பேரணியாகச் சென்றவர்கள் காவற்துறையால் விரட்டப்பட்டிருக்கிறார்கள்.
எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்களில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர், குமுழமுனை கிழக்கு கிராம அபிவிருத்தி மற்றும் காணி அபகரிப்பிற்கு எதிரான தலைவர், மற்றும் ஒரு சமுக ஆர்வலர் ஆகியோர் அடங்குவர். தொல்லியலாளர்களின் வேலைக்கு இடையூறாக பேரணி நடத்தியதாக, கைது செய்யப்பட்ட இவர்கள் மீது நீதிக்குப் புறம்பான முறையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் கைதுகள் தொடரும் என்றும் எச்சரித்துள்ளது அரச காவற்துறை.
விகாரை கட்டுமானம் நடைபெறவில்லை எனச் சாதிக்கும் தொல்லியல் திணைக்களம், பௌத்த தொல்லியல் பிரதேசத்தை மீள் புனரமைப்பு மட்டுமே செய்துள்ளதாகவும், நீதிமன்றின் உத்தரவின்படி மீள் கட்டுமானம் அகற்றப்பட்டால் தொல்லியல் தடயங்கள் அழிந்துவிடும் என்பதால் அவற்றை அகற்ற முடியாது என்றும் நீதிமன்றின் உத்தரவு மீறப்பட்டதை துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் கூறுகிறது. மற்றைய மதங்களின் தொல்லியல் பிரதேசங்களைப் பாதுகாக்கும் ஏதாவதொரு நடவடிக்கையையாவது இந்தத் தொல்லியல் திணைக்களம் எடுத்ததாக வரலாறுண்டா? இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் நடைபெறும் நில அபகரிப்புக்கு பக்கபலமாக இருந்து துணைபோகும் இந்த பௌத்த தொல்லியல் திணைக்களம் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
தவறு செய்பவர்கள் சுதந்திரமாக நடமாட, அதைத் தட்டிக் கேட்பவர்கள் சிறையினுள் தள்ளப்படும் அவலம் இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தொடரும்? தொடர்ச்சியான தமிழர் நிலப் பறிப்பிற்கும், பூர்வீகச் சின்னங்கள் சிதைத்தழிக்கப்பட்டு தமிழர் இருப்பு மறுக்கப்படுவதற்கும் எதிராக அந்தந்தப் பிரதேச மக்கள் மட்டும் எதிர்ப்புக் காட்டினால் முடியுமா? தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து எதிர்ப்பைக் காட்ட வேண்டாமா? பிரச்சனையை, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு எடுத்துச் சென்றதால் தண்ணீரூற்று நிலச் சுவீகரிப்பு தற்போதைக்கு நிறுத்தப்பட்டிருக்கிறது. எவ்வளவு காலத்திற்கு இது நிறுத்தப்படும்?
அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் தமிழர் நிலங்கள் அபகரிக்கப் படுகின்றன. இந்த நிலையில், சர்வ கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபையில் இருக்கும் எமது தமிழ்ப் பிரதிநிதிகள் ஆக்ரோஷமாகத் தலையிட வேண்டாமா? அரசியற் தலையீடு இல்லாமல் அந்தந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மட்டுமே எதிர்ப்பைக் காட்டுவதன் மூலம் நிலஅபகரிப்பை தடுத்து நிறுத்துவது என்பது சாத்தியமற்றது. தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் எமது மக்களும் அரசியல்வாதிகளும் இணைந்து செய்யும் கடுமையான முயற்சியினால் மட்டுமே தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் நில அபகரிப்பை தடுத்து நிறுத்த முடியும்.

