காலபோகக் கனவு

காலபோகக் கனவு

காலபோகக் கனவுகளின்
வெகுமதியை – மழை
பறித்துச் சென்று
நீண்ட நேரமாகியிருந்தது.
கனவுகளை தின்ற
ஏமாப்பில்-
கோழி விழுங்கிய
கருநாகம் போல்
அசைவற்று கிடந்தது
வானம்….!

ஊர்ப் பெண்டுகளின்
மாராப்பை போல்
விசிறியடித்தது
காற்று…!

தலைப்பிரசவத்திற்காய்
காத்திருந்த
நாளொன்றில்..
தாய்மடி தொடாது
இறந்து போன
குழநதையின் தாய்போல
அலங்கோலமாய்
கிடந்தது
வயல்…!
ஆறுதல் தரமுடியா
துணைவனாய்
தேம்பியயே அழுதது…..
நிலம்!!

வீட்டின் கூரையில்…
எங்கோ ஓர் மூலையில்
தொங்கும் ஒட்டறைபோல்
காத்து கிடக்கின்றன
ஏழை விவசாயின்
காலபோகக்
கனவுகள்!!

மிதயா கானவி

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )