போய் வருகிறேன் எந்தன் நாடே…!!

போய் வருகிறேன் எந்தன் நாடே…!!

ஒரு ஒளிவட்டம்
என்னைச் சுற்றி..
இனம்புரியா அமைதி
என்மனதில்.
தேகத்தை வாட்டிய
வேதனை எங்கோ
மாயமாய் மறைந்து போனது…
நேற்றைய கடமை
இனிதே முடிந்தது..
நாளை…?
சிந்திக்க முடியாமல்
ஏதோ தடுத்தது..

ஆதரவாக…
தோளில் தொட்டது
ஒரு கரம்.
எழு பத்து ஆண்டுகளையும்
கடந்த என் காதல்..
என் தோழன்… என்னில் பாதி..
என் ‘பிலிப்’
பரிவுடன் என்னைப் பார்த்தார்.

புரிகிறது…!!
ஒரு வழிப் பயணத்திற்கு
நான் தயார்…!
திரும்பிப் பார்க்கிறேன்…

கூட்டமாய் எனது
குடும்பம்…
இருண்டுபோன முகங்களுடன்!
தலைமைக்குரிய மிடுக்கும்
தனயனுக்குரிய
பரிவும் பதட்டமுமாக
என் தலைமகனும்…
என்னைச் சூழ நின்ற
பலரின் கண்களில்
நீர்த் தாரையுமாக…!

நடுவில்
அமைதியாக
துயிலும் நான்..!!

சுற்றுமுற்றும்
பார்க்கிறேன்..!
முடிந்த வரை
கண்களால் பருகுகின்றேன்…

எனதருமை தாய் நிலமே!!
நெடிய
எழுபது ஆண்டுகள்
சேவகம் செய்ய
அனுமதி தந்தாய்…!
இன்று..
பிரியாவிடை தா..!!

அண்டை அயலிலும்
அகிலம் எங்கிலும்
அரசமைக்கவும்
கோலோச்சவும்
வழி செய்த தேவனே…!!
நன்றி…! நன்றி…!
காலனித்துவம் என்ற பெயரில்
என் மூதாதையரும் நானுமாய்
செய்த அக்கிரமங்கள்
அத்தனையையும்
நானே பொறுப்பேற்கிறேன்..!
தேவனே!! இவற்றை
என்
பாவக் கணக்கில்
எழுதிக் கொள்ளும்…
என்னை மன்னித்தருளும்..!!

ஒளி வெள்ளப் பாதையில்
பிலிப்புடன்
கரம்கோர்த்து நடக்கிறேன்..!!
அளவிலா நிம்மதி
என்னைச் சுற்றி.
போய் வருகிறேன்
என் நிலமே!!
சேவகம் செய்ய
அனுமதித்த எனதருமை
மக்களே!!
எனது நன்றிகள்!!
போய் வருகிறேன்..விடை கொடுங்கள்…!!

   கார்த்திகை
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )