
14ஆம் திகதிக்கு பின்னரே மோசமான நெருக்கடிகள்
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நாட்டு மக்களுக்கு பொருளாதார ரீதியில் மிக மோசமான நெருக்கடிகளை எதிர் கொள்ள வேண்டியேற்படுமென முன்னாள் அமைச்சரும் சுயாதீன எதிர்க்கட்சி எம்.பி.யுமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் எச்சரித்துள்ளார்.
வரி அதிகரிப்பு நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை அரசு கவனத்திற் கொள்ளாமல் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு நடுத்தர மக்களை பலியாக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே இவ்வாறு குற்றம்சாட்டிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் கூறுகையில்,
தேசிய வருமானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் இவ்வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.அத்துடன் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.இதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பொருளாதார ரீதியில் மிக மோசமான நெருக்கடிகளை எதிர் கொள்ள வேண்டியேற்படும்.
மாற்று திட்டம் இல்லாத காரணத்தினால் வரி அதிகரிப்பை அதிகரிக்க நேரிட்டுள்ளது என அரசு கூறுகின்றது. நடைமுறைக்கு சாத்தியமான பல திட்டங்கள் உள்ளன ஆனால் அரசு வரி அதிகரிப்பை மாத்திரம் பிரதான பொருளாதார கொள்கையாக வைத்திருக்கின்றது.
அரச நிர்வாகத்தில் ஊழல் மோசடி மிதமிஞ்சியுள்ளதால் சர்வதேச நிறுவனங்கள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதை புறக்கணித்துள்ளன.மோசடி செய்யப்பட்டுள்ள அரச நிதியை மீண்டும் அரசுடமையாக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

