
இம்ரான் கான் மீது படுகொலை முயற்சிl காலில் காயத்துடன் தப்பினார்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த பேரணியில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியிலிருந்து காலில் காயத்துடன் மயிரிழையில் உயிர் தப்பினார்
ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு எதிராக தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி,பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-எ-இன்சாஃப் கட்சி (பிடிஐ) தலைவருமான இம்ரான் கான் பேரணி மேற்கொண்டு வருகிறார். அவருடன் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் பேரணியில் பங்கேற்று வருகிறார்கள்.
இந்தப் பேரணி நேற்று வியாழக்கிழமை வாஸிராபாத் நகரின் ஸாபர் அலி கான் சவுக் பகுதியில் வந்தபோது, இம்ரான் கான் தனது பிரசார வாகனத்தின் உச்சியில் இருந்தார். அப் போது, அவர் இருந்த வாகனம் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்
இதில், இம்ரான் கானின் வலது காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் உடனடியாக அவர் அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இம்ரான் கானுடன் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களான ஃபைசல் ஜாவெத், அகமது சத்தா உள்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இம்ரான் கான் மீதான இந்தக்கொலை முயற்சி பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இம்ரான் கானின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது
பேரணி, இஸ்லாமாபாத்தில் இருந்து 200 கிலோ மீற்றர் தொலைவில் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இம்ரான் கானை கொல்ல வேண்டும் எனும் நோக்கில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் இது என பி.டி.ஐ கட்சி கண்டித்துள்ளது
இம்ரான் கான் மீதான இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தனது பயணம் தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்க இருந்தார். இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக அவர் தனது செய்தியாளர் சந்திப்பை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

