
வடக்கில் தினமும் பறிபோகும் தமிழ் மக்களின் காணிகள்; மாந்தை கிழக்கில் 2,000 ஹெக்டேர் காணிகள் பறிபோகிறது
முல்லைதீவு – மாந்தை கிழக்கு பிரதேசத்தில்,பொதுமக்களின் விவசாயக் காணிகள் மற்றும் கைவிடப்பட்ட குளங்கள் உள்ளடங்கலாக,சுமார் இரண்டாயிரம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு வனவளத் திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்ட வனமாக எல்லையிடப்பட்டது.
மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலைப்பாணி,மூன்று முறிப்பு மற்றும் சிராட்டிகுளம்,பறங்கியாறு ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக பொதுமக்களால் பயிர்செய்கைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 2009ஆம் ஆண்டு யுத்தத்தினால் கைவிடப்பட்ட காணிகள் உள்ளடங்களாக சுமார் இரண்டாயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பகுதிகள் வனவளத் திணைக்களத்தினால் ஒதுக்காடுகளாக எல்லையிடப்பட்டன.
குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள மூன்றிற்கும் மேற்பட்ட குளங்கள், மீள்குடியமர்வின் பின்னர் பெருந்தொகை நிதிகளில் புனரமைக்கப்பட்டு,ஏழு வருடங்களுக்கு மேலாகியும், அவற்றின் கீழான வயல் காணிகளை விடுவிக்கப்படவில்லையென, உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.இந்த நிலையில் இவ்வயல் காணிகள் உட்பட பெருமளவு விவசாய நிலப்பரப்பு வனவளத் திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பிரதேசமாக எல்லையிடப்பட்டுள்ளது.

