கோட்டா, மகிந்த, பசிலுக்கே புனர்வாழ்வு அளிக்வேண்டும்

கோட்டா, மகிந்த, பசிலுக்கே புனர்வாழ்வு அளிக்வேண்டும்

பயங்கரவாத தடைச் சட்டத்தை விடமோசமானது புனர்வாழ்வு சட்டம் எனவே இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்தை அழித்த கோட்பாய ராஜபக்ஷ, தேசிய பொருளாதாரத்தை முழுமையாக அழித்த மகிந்த ராஜபக்ஷ, அவரின் சகோதரர் நிதி அமைச்சராக இருந்து பசில் ராஜபக்ஷ மற்றும் அவர்களுடன் சோர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை அழித்த அஜித் கப்ரால் ஆகியோர் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே மற்றும் தமிந்த தேரர் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பில், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சனிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது சாணக்கியன் எம்.பி.இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் பேசுகையில்,

இந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் தமிழ் பேசும் மக்களை கடந்த 40 வருடமாக அடக்கிய சட்டம். 2019 ம் ஆண்டிற்கு பின்னர் தமிழ் பேசும் மக்களான இஸ்லாமிய சகோதரர்களை இந்த தடைச் சட்டத்தில் கைது செய்தனர்.

2022 ம் ஆண்டு விசேடமாக நீண்ட காலத்திற்கு பின்னர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்கள சகோதரர்களை இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இது ஒரு மோசமான சட்டம் இதனை நீக்கவேண்டும் இந்த சட்டத்தின் ஊடாக எங்கள் மக்களுக்கு மிகப் பெரும் அநீதி நடக்கின்றது என மிக நீண்ட காலமாக தெரிவித்தபோது ஒரு சிலர் பார்வையாளர்களாக இருந்தாலும் கூட இன்று இந்தச் சட்டம் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக பயன்படுத்தும் போது அவர்களுடன் இணைந்து இந்த சட்டத்தை முழுமையாக நீக்கவேண்டும் என போராடுகின்றோம்.

இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே, தேரர் போன்றோரை உடன் விடுதலை செய்யவேண்டும் எனக் கோருகின்றோம். ஆனால் அதனுடன் சேர்த்து இதே சட்டத்தில் கைது செய்து நீண்ட காலமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும்.

இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் அதன் ஏற்பாட்டாளரான தேரர் போன்றவர்கள் 50நாட்களுக்கு மேலாக தடுத்துவைத்துள்ளவர்கள் உடனடியாக விடுதலைசெய்யப்படவேண்டும் என்பதுடன் இதே சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலைசெய்யப்படவேண்டும்.

50நாட்களாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலைசெய்யுமாறு போராட்டம் நடாத்தும் இதேமேடையில் எங்களது தமிழ் உறவுகள் கைதுசெய்யப்பட்டு இதே சட்டத்தின் கீழ் 5000 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் தெரிவிக்கின்றோம்.

இந்தச் சட்டத்தை நீக்க கோரியுள்ள நிலையில் அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றி இந்த சட்டத்தை விட மோசமான சட்டத்தை கொண்டுவந்து மக்களை அடக்குவதற்கு முடக்குவதற்கும் சில முயற்சிகளை செய்துவருகின்றனர்.

அவ்வாறு ஒரு சட்டம்தான் புனர்வாழ்வு சட்டம். பயங்கரவாத தடுப்புச் சட்டத்திலாவது சிறையில் வைத்திருக்க சில உத்தரவுகள் எடுக்கவேண்டும். ஆனால் புனர்வாழ்வு சட்டம் கொண்டுவந்தால் எவரையும் விரும்பியகாலப்பகுதியில் தாங்கள் நினைக்கும் வரைக்கும் வைத்திருந்து சித்திரவதை செய்யலாம் அவர்களை புன்வாழ்வு என்று வதைக்க கூடியது.

இந்த நாட்டிலே புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்கள் யார் என பார்த்தால் நாட்டு மக்களின் எதிர்காலத்தை அழித்த கோட்பாய ராஜபக்ஷ, தேசிய பொருளாதாரத்தை முழுமையாக அழித்த மகிந்த ராஜபக்ஷ, அவரின் சகோதரர் நிதி அமைச்சராக இருந்து பசில் ராஜபக்ஷ மற்றும் அவர்களுடன் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை அளித்த அஜித் கப்ரால் ஆகியோர் புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டியவர்கள்.

எனவே இந்த சட்டம் முழுமையாக நீக்கும் வரைக்கும் எமது போராட்டங்களின் வடிவம் மாறினாலும் போராட்டம் தொடரும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )