உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்; சர்வதேச உதவியுடன் விசாரணை நடக்கும்

உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்; சர்வதேச உதவியுடன் விசாரணை நடக்கும்

உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக ஒவ்வொருவர் மனதில் உள்ளவர்களுக்கு எதிராக செயற்பட முடியாது.நீதிமன்ற நடவடிக்கையின் ஊடாகவே தண்டனை வழங்க முடியும்.எனவே இது தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்புகளைப் பெற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்களான சமிந்த விஜேயசிறி மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்தின் விசாரணை அறிக்கையினை மறைப்பதற்கும்,குற்றவாளிகளை பாதுகாப்பதற்கும் வேண்டிய தேவை அரசுக்கு கிடையாது. குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு 66 ஆயிரம் பக்கங்களை கொண்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.தேசிய பாதுகாப்பு காரணிகளின் நிமித்தம் ஆணைக் குழுவின் ஒரு சில விடயங்களை பகிரங்கப்படுத்த முடியாது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கத்தை செயற்படுத்துவதற்காக அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டது.உப குழுவின் பரிந்துரைக்கமைய அறிக்கையின் பல விடயங்கள் தற்போதும் நிறுவன மட்டத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளன. குண்டுத் தாக்குதலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடைய தரப்பினர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.ஆகவே விசாரணைகள் எக் காரணிகளுக்காகவும் தாமதப்படுத்தப்படவுமில்லை,மூடி மறைக்கப்படவுமில்லை.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடைபெறும்போது நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவே இருந்தார். அவரே பாதுகாப்பு அமைச்சராகவும் முப்படைகளின் தளபதியாகவும் இருந்தார். எனவே இத்தாக்குதலுக்கு அவரே பொறுப்புக்கூற வேண்டும் .பாதுகாப்பு அமைச்சராக அப்போது மைத்திரிபால சிறிசேன செயற்பட்ட விதம் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன.

விசாரணை அறிக்கையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டன. ஆகவே தாக்குதலுக்கு இவர் பொறுப்பு கூற வேண்டும் என ஒவ்வொருவர் மனதில் உள்ளவர்களை தண்டிக்க முடியாது.யார் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும்.

குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 737 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களிலும் இது தொடர்பில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகள் பெறப்பட்டுள்ளன. இதுபோல வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட பலர் இலங்கைக்கும் கொண்டுவரப்பட்டுள்ளனர் .

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஒத்துழைப்புகளை பெற்று முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசினக் கருதுவதனால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்

இதேவேளை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் தகவல் உத்தியோகப்பூர்வமற்றது.இவ்விடயம் குறித்து அவதானம் செலுத்தப்படும்.கர்தினாலின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )