வலை

வலை

கொற்றவை

சூரியன் உச்சிக்கு வந்துவிட்டது. தகிக்கும் வெயில். சோளகம் பெயரப்போகிறது என்று சொல்கிறார்களே ஒழிய பெயர்ந்தபாடில்லை. துளி காற்றும் அடிக்காமல் அப்படியே சிலையாய் நின்றன மரங்கள். தாகம் தொண்டையை வரட்டியது. வெயிலும் பசியும் ஒன்றாகச் சேர்ந்து கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

‘எனக்கே இப்பிடியென்றால் பாவம் அவளும் பிள்ளையும் ஒழுங்கான சாப்பாடு தண்ணிவென்னி இல்லாமல் என்ன செய்வினம்?

இன்றைக்கெண்டாலும் எல்லாருமா ஒண்டா இருந்து நல்ல கறியோட சோறு ஆக்கி சாப்பிடவேணும்.’ மனதின் அங்கலாய்ப்பிற்கு தடை போட்டது ஐயாவின் குரல்.

“இண்டைக்கு இவ்வளவுந்தான்… அந்தக் கயிற்றையும் இறுக்கிக் கட்டிப்போட்டு இறங்கும்….பிறகு எதுக்கும் தேவைப்பட்டால்  சொல்லியனுப்புறன்..”

இன்றைக்கு,வளவுக்குள் இருந்த ஒரு கொட்டகைக்கு கூரை வேயும் வேலை கிடைத்தது. சின்னக் கொட்டில் என்றபடியால் அரை நேரத்துடன் வேலை முடிந்தது சற்று ஏமாற்றம்தான்.

‘சரி! இதுவாவது கிடைத்ததே…!’

கீழே இறங்கி பானையில் வைத்திருந்த தண்ணீரை பக்கத்தில் இருந்த பிளாஸ்ரிக் கப்பால் மொண்டு ஆசை தீரக் குடித்து முடிக்கவும் சுப்பிரமணியம் ஐயா சம்பளத்தை எண்ணிக் கொண்டு வரவும் சரியாக இருந்தது.

 “ சரி….!  போட்டுவாரும்…! “

கேற்றை இழுத்துப் பூட்டிவிட்டு திரும்பி சாத்தி வைத்திருந்த சைக்கிளை எடுத்தான் ஆனந்தன்.கட்டியிருந்த சாரத்தின் கீழ்ப்பகுதி சைக்கிள் பெடலில் சிக்கி ‘டர்ர்ர்….’ எனக் கிழிந்தது.

 ‘அட….! இது ஒண்டுதான் இருக்கிறதுக்குள்ளேயே நல்லது…. இதுவும் போச்சுதா….?’

சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு சைக்கிளை உருட்டத் தொடங்கினான் ஆனந்தன். ஏனோ ஏறி உழக்கத் தோன்றவில்லை. அவனுடைய எண்ணங்களுக்கு பின்னணி வாசிப்பதுபோல‘கிரீச்… கிரீச்…’  என்றபடி கூடவந்தது சைக்கிள்.

உச்சி வெயில். ஆள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தது வீதி. எங்கோ குயில் ஒன்று தனியாகப் பாடிக் கொண்டிருந்தது. இரண்டு அணிற் பிள்ளைகள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டு வீதிக்குக் குறுக்கே ஓடின. ஓரத்தில் இருந்த பூவரச மர நிழலில் சற்று இளைப்பாற நின்றான் ஆனந்தன். இலைகளிடையே ஏதோ சலசலத்தது. அண்ணாந்து பார்த்தான். செண்பகம் ஒன்று தன்னுடைய சிவப்புக் கண்களால் அவனை கோபமாக முறைத்துப் பார்த்தது.

செண்பகத்தைப் பார்த்ததும் பழைய, வண்ணமயமான ஞாபகங்கள் கிளர்ந்து எழுந்து ஆனந்தனின் மனதை அலைக்கழித்தன. நெஞ்சே வெடித்துவிடும் போல ஒரு ஏக்கம். செண்பகம் எங்கள் தேசியப் பறவை என்று அறிந்த காலத்திலிருந்து அவற்றின் மேல் ஒரு இனம்புரியாத பற்று ஆனந்தனுக்கு.சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்தான். ஒரு பொறுப்பாளனுக்குரிய மிடுக்கோடு, இதே தெருவில் எத்தனை முறை மோட்டார் சைக்கிளிலும் வாகனங்களிலுமாகப் போய் வந்திருக்கிறான் ஆனந்தன்?

அப்போது, தெரிந்தவர்களைப் பார்த்து ஒரு தலையசைப்பு. அவ்வளவுதான். ஆனால், பிறகு ஒரு தகவல் திரட்டுவதற்காக இந்தப் பிரதேசத்தில் கொஞ்ச நாள் நிற்க வேண்டி வந்தது. எல்லோருடனும் இறங்கிப் பழக வேண்டி வந்தது. ஆனந்தனின் நிதானமும்,மற்றவர்களை மதித்துப் பழகும் பாங்கும், பிரச்சனைகளை அணுகும் முறையும், முக்கியமாக எல்லோருக்கும் பிடித்தமான அந்தப் பெரிய மனிதரிடம் ஆனந்தன் காட்டிய விசுவாசமும் எல்லோருக்கும் பிடித்துப் போயின. சாதிய முறைமையால் துண்டாடப்பட்டிருந்த எங்கள் சமூகம் இந்தச் சமயத்தில்தான்எங்கள் எல்லோரையும் ஒரே விதமாகப் பார்த்தது. இவர்கள் வீட்டிற்குள் வரக்கூடாது என்பதையும், பிறிதான கப்பில் தேத்தண்ணி கொடுக்கும் வழமையையும் மறந்து ஒன்றாகச் சேர்ந்து இருந்த மகிழ்ச்சியான காலங்கள் அவை.

அப்போதுதான் சுப்பிரமணி ஐயாவையும் பழக்கம். எல்லோரையும் போல ஆனந்தனும் சுப்பிரமணியத்தாரை ‘அப்பா’ என்றுதான் சொல்லுவான். அவரும் அதை ஒருபோதும் மறுதலித்ததில்லை… அன்பாக இருப்பார்.. இப்போதுதான் நிலைமை எல்லாமே தலைகீழாக மாறிவிட்டதே.. இரண்டு வருடங்களுக்கு முன்பு,வேலை தேடி அலைந்தபோது இதே சுப்பிரமணியம் ஐயா வீட்டில் ஒரு தோட்ட வேலை கிடைத்தது. பழகியவர் வீட்டு வேலை என்பது ஒரு மாதிரியாக இருந்தாலும் வேலை என்று வரும்போது விட்டுவிட முடியுமா? மூன்று வயிறுகள் காத்துக் கிடக்கின்றனவே?

 “வசந்தன்…!! முன்னையைப் போல் அப்பா எண்டு கூப்பிடாமல் ஐயா எண்டு கூப்பிடுமன்… இந்தாளுக்கும் மற்றவைக்கு முன்ன கொஞ்சம் சங்கடமில்லாமல் இருக்கும்…’

நாசூக்காக நாட்டு நிலையைச் சொல்லி ‘நீங்கள் இருக்க வேண்டிய இடம் இதுதான்’ என்று உணர்த்தினா இராசமணி அம்மா – சுப்பிரமணியத்தாரின் மனைவி. இதையிட்டு ஆனந்தனுக்கு மனவருத்தம் எதுவுமில்லை. இவற்றையெல்லாம் எதிர்பாராமலா நாட்டைச் சீர்திருத்த இவ்வளவு கஷ்டப்பட்டோம்?

தூரத்தில் வரும் வாகனம் ஒன்றின் இரைச்சல் ஆனந்தனை சுயநினைவுக்குக் கொண்டு வந்தது. கெதியில காசைக் கொண்டுபோனால்தான் அடுத்த நேரச் சாப்பாடு. சுற்றிப் போக நேரம் பிடிக்கும். குறுக்கால விழுந்து குவாரியடியால போனால் கெதியில போயிடலாம். மேடும் பள்ளமுமாகக் கிடந்த தெருவில் சைக்கிள் ஓடமாட்டேன் என்று அடம் பிடித்தது.

வீட்டில் மனுசி மட்டும்தான் இருந்தாள்.

“சாந்தி…! பிள்ளை எங்க? வாற வழியில அரிசியும் மீனும் வேண்டி வந்தனான்… சாய்… என்ன வெயில்….?”

   “பிள்ளைக்கு ஒன்லைன் வகுப்பாம்…. அவள் காலமையே கலா வீட்டை போட்டாள்… இப்ப வந்திடுவள்…”

கலாவும் வெண்ணிலாவும் ஒன்றாகப் படிப்பவர்கள். கலா கடைக்கார டானியலின் மகள். நல்ல மனுசர். இங்கு வீட்டில் இன்ரநெற் இல்லையெண்டு வெண்ணிலாவும் தன்ரை வீட்டில வந்து படிக்க உதவுறார். உண்மையில, கொரோனா காலத்தில படிப்பை இனி என்னண்டு தொடருறது எண்டு ஏங்கி நிற்கேக்க, தன்னட்டை ஒரு பழைய ஃபோன் சும்மா கிடக்கெண்டு தந்துதவினது அவர்தான்.

இளம் பிள்ளையாக இருக்கும்போதே, அவங்கள் வைச்ச கண்ணிவெடியில காலைக் குடுத்தவள் சாந்தி. வயதுபோன தாய் தகப்பனுக்கு ஒரே பிள்ளை. காலில்லாத பிள்ளையைக் கரையேத்துமளவுக்கு பொருளாதார வசதியும் இல்லை. தவித்துப் போய் நின்ற பெற்றோரிடம் தானாக முன்வந்து, ‘நான் கட்டுறன். கவனமா வைச்சுப் பாப்பன்.’ என்ற வசந்தனில் அவர்களுக்கு அப்படியொரு பிடிப்பு. வெண்ணிலா பிறந்து கொஞ்சக் காலத்தில் ஒருவர் பின் ஒருவராக அவர்கள் போய்ச் சேர்ந்து விட்டனர். பிறகு,…. நிலைமை வேறுவிதமாக மாறி விட்டது. கடுமையான சண்டை… ஆனந்தன் வீட்டுக்கே போகேல்ல. உக்கிரமான செல்லடிக்குள்ளயும் எப்படியோ வெண்ணிலாவும் சாந்தியும் பாதுகாப்பாக இருப்பினம் என்ற நம்பிக்கையை வரவழைத்துக்கொண்டு முன்னரங்கில் நின்றான்.

எல்லாம் ஓய்ந்தது….. விசாரணை என்று கண்ணைக்கட்டி மற்றவர்களிடமிருந்து பிரித்துக் கூட்டிக்கொண்டு போனார்கள். அடி, உதை, கடுமையான சித்திரவதைகள் என்று வருடங்கள் இருட்டறைக்குள்ளே கழிந்தன.

‘கடைசியா அவரை உயிரோட கண்டனாங்கள்…’

யாரோ சொன்னதை வைத்துக்கொண்டு, கையில குழந்தையோட சாந்தி எல்லா முகாமுகளுக்கும் வருசக்கணக்கா ஏறி இறங்கியிருக்கிறாள். ஒருத்தரும் சரியான பதில் கொடுக்கேல்லை. காலுமில்லை. கையில குழந்தை. ஆதரவுக்கெண்டும் ஒருத்தருமில்லை. அந்த நேரம் சாந்தி பட்ட பாட்டை இப்ப நினைச்சாலும் ஆனந்தனுக்கு இரத்தக் கண்ணீர் வரும். இனித் திரும்பி வருவினம் என்றது சாத்தியமில்லை என்று எல்லோரும் நம்பியிருந்த நேரத்தில்தான், இரண்டு வருசங்களுக்கு முன் ஆனந்தனைத் திறந்து விட்டாங்கள்… கம்பீரமான ஒரு வீரனாகப் போனவன் வெறும் கோதாகத்தான் திரும்பி வந்திருக்கிறான். மனிசி, பிள்ளையைக் கண்டு பிடிச்சு வந்த பிறகும் தனக்கு நடந்த எதையும் அவன் வீட்டில சொல்லேல்ல. தாங்க மாட்டினம்….. மகளுடனும் மனைவியுடனும் சேர்ந்திராமல் தொலைந்துபோன வருடங்களை ஈடு கட்டுமாப்போல் நல்ல அன்பாக இருக்கிறார்கள் அவர்கள்.

 “இந்தா….. பிள்ளை வந்திட்டாள்….”

வெண்ணிலா வந்தாள். முகத்தில் மலர்ச்சியில்லை.

 “வகுப்பு எப்பிடிப் போச்சு? என்ன பாடம்…? விளங்காததைக் கேட்டனியே..?”

கேள்விக் கணைகள்.

 “ம்.. ஆனா, எனக்கு வகுப்பில்லை எண்டு சேர் சொல்லீட்டார்…”

 “அப்ப பேந்து ஏன் நிண்டனீ?…. வந்திருக்கலாமே…”

ஒரு சிறிய தயக்கம். “இல்லை… கலாக்குத்தான் தனிய வகுப்பு… நான் விறாந்தையில இருந்து கணக்குச் செய்தனான்.”

 “கலா….?”

மீண்டும் ஒரு கணநேரத் தயக்கம்… “அவ ரூமுக்குள்ள போட்டா…”

ஆனந்தனுக்கு உடனேயே என்னவோ தப்பாகப் பட்டது.

 “தனியவும் வகுப்பு எடுப்பினமோ…?”

சந்தேகத்துடன் ஆனந்தன் கேட்ட கேள்விக்கு சாந்தியிடமிருந்து பதில் வந்தது.

 “படிப்பில கொஞ்சம் குறைஞ்சிட்டா தனிய எடுப்பினமாக்கும்….அதிலயும் கலா வீட்டில செல்லம்… தாய் தேப்பனும் ஸ்பெசலா கவனிக்கச் சொல்லி சேரட்டை சொல்லிச்சினமோ என்னவோ…..”

சாந்திக்கு சூதுவாது விளங்காது. வெண்ணிலா தகப்பனை நேராகப் பார்க்காததும் உறுத்தியது. இது என்ன புதுச் சோதனை…? மனதில் எழுந்த ஏதோவொரு இனம் புரியாத குழப்பம் ஆனந்தனின் கொஞ்சநஞ்ச நிம்மதியையும் தொலைத்தது.

கடந்த காலம் தந்த பட்டறிவு உடனடியாக இதை ஆராய்ந்து பார்க்கச் சொல்லியது. தகப்பனிடமோ தாயிடமோ கேட்கலாமோ…?  எப்படி விசாரிப்பது? பெம்பிளைப் பிள்ளை விவகாரம்…. தப்பாக எடுத்துவிட்டால்…? தவிரவும் அவன் இப்போது வசந்தனில்லையே…. ஆசிரியர் யார் என்பதை மகளிடம் கேட்டு அவரைப்பற்றி கட்டாயம் ஒருக்கா விசாரிச்சு அறிய வேணும் என்று முடிவெடுத்தான் ஆனந்தன்.

 “பிள்ளையையும் கொஞ்சம் அவதானமாப் பாக்கோணும்….”

இன்று இனி வேலையேதும் கிடைக்காது. குடும்பத்துடன் பொழுதைக் கழிக்க வேண்டியதுதான்….பொழுது சாயும் நேரம். யாரோ அவர்களின் வீட்டுப்பக்கமாக அவசர அவசரமாக நடந்து வருவது தெரிந்தது.

தொடரும்…..

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )