வங்குரோத்து நிலையில் இலங்கை

வங்குரோத்து நிலையில் இலங்கை

கனலி

பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களின் பின் அதிகாரத்தில் இருந்தவர்கள் மாற்றப்பட்ட பின்னரும்இலங்கை வாழ் மக்களின் வாழ்வில் மாற்றம் ஏதும் நிகழவில்லை. இன்னமும்,கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி, நாளாந்த வாழ்வை வாழ முடியாமல் தத்தளிக்கிறார்கள் இலங்கை மக்கள். இந்த நெருக்கடிக்கு பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்புபடுவேகமாகச் சரிந்து செல்வது போன்றனதான் காரணங்கள் என்றுமக்களால் அடிக்கடி பேசப்பட்டாலும், அந்நிய செலாவணி, பணவீக்கம் என்றால் என்ன?, அவை எப்படி உருவாக்கப்பட்டன? என்பன பற்றி அறிந்து கொள்ளும் போதுதான் இலங்கையின் நெருக்கடி நிலையைச் சரிவரப் புரிந்துகொள்ள முடியும்.

அந்நிய செலாவணி :
அயல் நாடுகளிடையே வணிகப் பரிமாற்றத்தின்போது ஏற்படும் நாணய மதிப்பீடே அந்நியச் செலாவணி எனப்படுகிறது. இந்த நாணய மதிப்பீடு ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கும். இது நிலையாக இருப்பதில்லை. உலகத்தின் போக்குக்கும் அன்றாடம் நடைபெறும் மாற்றங்களுக்கும் ஏற்ப நாணயத்தின் பெறுமதி கூடலாம் அல்லது குறையலாம்.ரூபாவின் மதிப்புக் குறைவதானதுஒரு தனி நபரைப் பாதிப்பதை விட ஒரு நாட்டின் வணிகப் பரிவர்த்தனையில் மிகவும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

பணத்தின் மதிப்பீட்டில் அதிக ஏற்ற இறக்கம் ஏற்படும்போது, வெளிநாட்டு பணச்சந்தையில் தலையீடு செய்யவும்,வெளிநாட்டுக் கடன்களைச் சமாளிக்கவும், எதிர்பாராத வகையில் ஒரு நாட்டின் முதலீட்டாளர்கள் வெளியேறிவிட்டால் அதைச் சமாளிக்கவும் ஒரு நாட்டிற்கு அந்நிய செலாவணி கையிருப்பு அவசியம். இதனால்தான் உலகநாடுகள் தங்கள் கையிருப்பை அதிகரிக்க எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். அந்நிய செலாவணி கையிருப்பை வைத்துத்தான் ஒரு நாட்டின் பொருளாதார வலிமை எடைபோடப் படுகிறது. உங்களுக்குத் தெரியுமா…? உலகிலேயே அந்நிய செலாவணி கையிருப்பு அதிகமுள்ள நாடு சீனா. இதனால்தான் வறிய நாடுகளைத் தனது கடன் பொறிக்குள் சிக்கவைத்து அந்த நாடுகளில் கால் பதிக்க சீனாவால் முடிகிறது.

அந்நிய செலாவணி சந்தை என்பது மிகப்பெரிய உலகளாவிய சந்தையாகும். இங்கு ஒவ்வொரு நாளும் சுமார் ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானம் மிக்க நாணயம் பரிமாற்றம் செய்யப் படுகிறது. இது ஒரு மையப்படுத்தப்பட்ட சந்தையாக இல்லாமல் ‘டிஜிற்றல்’ சந்தையாக இருப்பதே இதன் சிறப்பு. நியூயோர்க், லண்டன், டோக்கியோ, சிங்கப்பூர், சிட்னி, ஹங்காங் மற்றும் பிராங்பேட் போன்ற உலகளாவிய நிதி மையங்களில் பாரிய அந்நியச் செலாவணி சந்தைகள் இயங்குகின்றன. இங்கு பல தேசிய நாணயங்கள் வர்த்தகம் செய்யப் படுகின்றன. இந்தச் சந்தை தரகர்கள், தனிப்பட்ட வர்த்தகர்கள்,நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் மின்னணு வலையமைப்பாக இருக்கிறது. அந்நியச் செலாவணி வர்த்தகமானது பெரும்பாலும் அமெரிக்க டாலர்களில் (க்குஈ ) தான் நடைபெறும். ஒரு நாடு தான் வைத்திருக்கும் அந்நியச் செலாவணி கையிருப்பை வேறு எதிலும் முதலீடு செய்ய முடியாது. அதனை அயல்நாட்டு வர்த்தகப் பரிவர்த்தனை தவிர வேறு எந்த வழியிலும் உபயோகப்படுத்தாமல் வைத்திருக்க வேண்டியதுதான். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மத்திய வங்கி தனது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்புகளை டாலர்களாகவும் தங்கம், வைரம், வைடூரியம் போன்றனவாகவும் பாதுகாப்பது வழமை. ஒரு நாட்டின் கையிருப்பு குறைவடையும்போது, பொருட்களை வாங்கவியலாத நிலை ஏற்பட்டு நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும்.

இந்தக் கையிருப்புத்தான் இலங்கையில் இப்போது பூச்சியத்தை நோக்கிப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதனால் வெளியில் இருந்து எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்ய இயலாத நிலையில் பிற நாடுகளிடம் கடன் கேட்டு கையேந்தி நிற்கிறது இலங்கை.

பணவீக்கம் ( ஐணஞூடூச்tடிணிண ) :
பணவீக்கம் என்றால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளின் பொதுவான நிலை அதிகரிப்பது. இதனால் அந்த நாட்டு நாணயத்தின் திறன் குறைவடையும். விலையுயர்வுக்கு ஏற்ப வருமானம் அதிகரிக்கவில்லை என்றால் விலைவாசிக்கு எதிராக பொருட்களை வாங்கும் திறன் குறையும். இதனால் பொருளாதார மந்தநிலை உருவாகும். பணவீக்கம் இரண்டு வழிகளில் ஏற்படலாம்.

  1. தேவைக்குக் குறைவாக ஒரு பொருள் உற்பத்தியாகும்போது அதை வாங்குவதில் போட்டி ஏற்படும். இதனால் அதன் விலை அதிகரிக்கும். அதாவது, முன்பு ஒரு பொருளை என்ன விலை கொடுத்து வாங்கினோமோ அதே விலைக்கு இப்போது அந்தப் பொருளை விலை கொடுத்து வாங்க முடியாது. அதை வாங்க மேலதிக பணம் தேவைப்படும். அதாவது பணத்தின் மதிப்பு அங்கு குறைந்து போகும்.
  2. பிரச்சனைகளைச் சமாளிக்க மத்திய வங்கி மேலதிகமாக பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விடுவது. எந்த ஒரு பொருளும் தேவைக்கதிகமாக உற்பத்தியாகும்போது அதன் விலை வீழ்ச்சியடையும். இவ்வாறுதான் தேவைக்கதிகமான பணம் புழக்கத்தில் வரும்போது அதன் பெறுமதி குறைந்து பணவீக்கம் ஏற்படும். வெனிசுவெலா நாடு அதிகமாக அச்சிடப்பட்ட பணத்தால் வங்குரோத்து நிலையை அடைந்தது ஞாபகமிருக்கலாம்.

நுகர்வோர் விலைக்குறியீட்டின் வீக்கத்தை அளவிடுவதன் மூலம் ஒரு நாட்டின் பணவீக்கம் அளவிடப்படுகிறது. பணவீக்கம் மூன்று வகைப்படும்.

  1. மிதமான பணவீக்கம் –இது பணத்தின் பெறுமதி சீராகக் குறைவடைவதைக் குறிக்கும். 9% இற்கும் குறைவாகவே இது இருக்கும்.
  2. வேகமான பணவீக்கம் – இரண்டிலிருந்து மூன்று இலக்கங்கள் வரை சடுதியாக பணத்தின் பெறுமதி குறையும்.
  3. உயர் பணவீக்கம் –பணத்தின் பெறுமதி பல இலக்கங்களுக்கு கட்டுக்கடங்காமல் குறைவடைவது.

நாட்டில் பற்றாக்குறை நிலவும்போது அதை சமாளிக்கும் நோக்கில் திட்டமிட்டு அளவுக்கதிகமாக பணத்தை அச்சிடுவது, தொழிலாளர்களின் திறமை அதிகரிப்பால் அவர்களின் ஊதியம் அதிகரித்து அதனால் எழும் பணவீக்கம், தொழில் முனைவோர் தமது இலாபத்தை அதிகரிக்க ஏற்படுத்தும் பணவீக்கம், போர்க்கால செலவுகளால் ஏற்படும் பணவீக்கம், போருக்குப் பிந்திய காலத்தில் நாட்டைப் புனரமைக்கும் செலவினத்தால் விளையும் பணவீக்கம், கள்ளச்சந்தை, அதனால் வரும் கருப்புப் பணம், ஊழல், முறையற்ற சொத்துக்குவிப்பு இவற்றை மறைத்து ஈடுசெய்ய அரசியல்வாதிகளும் அவர்களின் கைப்பாவைகளான சில அதிகாரிகளும் மக்கள் மேல் வலிந்து திணிக்கும் பணவீக்கம் என்று பல காரணிகளால் பணவீக்கம் ஏற்படுத்தப்பட்டு அதன் அழுத்தம் மக்களைச் சென்றடைகிறது.

பணவீக்கத்தின் விளைவுகள்:

  1. வறுமையான நிலைக்கு மக்கள் தள்ளப்படுதல்.
  2. பொருட்களுக்கு ஏற்படும் தட்டுப்பாடு.
  3. தொழில் வாய்ப்புகள் அருகிப் போதல்.
  4. பொருட்களின் சடுதியான விலையேற்றம்.
  5. நாட்டின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி.
  6. சேவைகள் படிப்படியாக குறைக்கப்படுதல்.
  7. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையும் பிரச்சனைகளைத் தீர்க்கவியலாத நிலையும் எழுதல்.
    என்று அத்தனை சுமைகளும் மக்களின்தலைமீது இறக்கி வைக்கப்படுகின்றன. மக்கள் பட்டினியால் இறக்க நேரிடுகிறது. எந்தவொரு அரசியல்வாதி குடும்பமோ அல்லது இவ்வாறு முறையற்று சொத்துச்சேர்த்த பெரிய மனிதர்கள் குடும்பத்தினரோ பட்டினியால் வாடியதாகவோ அல்லது பற்றாக்குறையால் தவித்ததாகவோ நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

பல்லாயிரம் மக்கள் வீதியில் இறங்கிப் போராடி ராஜபக்ச குடும்பத்தினரை பதவிக்கட்டில் இருந்து இறக்கியிருக்கிறார்கள். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அசையும், அசையாச் சொத்துக்களாக தங்களுடைய பெயரிலும் பினாமிகளின் பெயரிலுமாக ராஜபக்ச குடும்பத்தினர் பதுக்கியிருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் பற்றிபத்திரிகையினூடு அண்மையில் வெளிப்பட்ட விபரம்அனைவரும் அறிந்ததே. இப்படி இன்னும் எத்தனை வெளிவராத விபரங்கள் இருக்கும்? இது ராஜபக்ச குடும்பத்தினரினது மட்டும்தான். அப்படியானால் மற்றைய அரசியல்வாதிகள், பெரும்புள்ளிகளிடம் பதுக்கப்பட்டிருக்கும் சொத்து? இவை எல்லாமே மக்களுடையவை. இன்று மக்கள் ஒருநேரம்கூட வயிறாரச் சாப்பிட முடியாததற்குக் காரணமானவர்கள் இத்தகைய அரசியல்வாதிகளும் பெரிய மனிதர்களும்தான். இவர்கள் சுருட்டிய சொத்துக்களை அரச மயப்படுத்தினாலே நாட்டின் பிரச்சனை கணிசமானளவு தீர்ந்துவிடும்.

இன்னமும் நாட்டின் பொருளாதாரச் சிக்கலைச் சீர்திருத்துவதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் அரசு எடுத்ததாகத் தெரியவில்லை. தமிழ் மக்களின் நியாயமான பிரச்சனையைத் தீர்ப்பதை அவர்கள் கருத்திலேயே எடுக்கவில்லை.உலக நாடுகளிடம் கையேந்துவதில் மட்டும் கவனமாக இருக்கிறார்கள். புலம்பெயர் தமிழர்களையும் அழைத்து, எல்லோரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப வாருங்கள் என்றுவேண்டுகோள் விடுப்பது, பேச்சுவார்த்தை நடத்துவது எல்லாம் வேறெதற்காகவும் இல்லை. தமிழ் மக்களின் போராட்டங்கள் உலக நாடுகளின் கடன் வழங்கலுக்கு இடையூறாக வந்துவிடக்கூடாது என்பதற்காகவே.

இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை அரசுக்கட்டில் வைத்திருக்கும் வரை மக்கள் நிம்மதியாக வாழ்வது என்பது கேள்விக்குறிதான்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )