
குருந்தூர்மலையில் 612 ஏக்கர் காணியை அபகரிக்க அளவீடு; தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை
குருந்தூர்மலையில் தமிழர்களுக்கு சொந்தமான 612 ஏக்கர் காணிகளை இன்று புதன்கிழமை அளவீடு செய்ய தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எடுத்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேசிய சபை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இதனைத்தெரிவித்த ஸ்ரீதரன் எம்.பி. மேலும் பேசுகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலையிலே தமிழர்களுக்கு சொந்தமான, குருந்தூர் மலை ஆதி சிவன் கோவிலுக்கு சொந்தமான .முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கு சொந்தமான 612 ஏக்கர் காணிகளை நாளை (இன்று புதன்கிழமை) அடாத்தாக அளவீடு செய்து பௌத்த பிக்குவிற்கும் புத்த விகாரைக்கும் கொடுக்க தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முயற்சிக்கின்றார்.இது என்ன நியாயம்? இதற்கு தேசிய பேரவை என்ன செய்யபோகின்றது? எல்லாக்கட்சிகளையும் கொண்ட இந்த பேரவை எப்படி இதற்கு தீர்வு காணப்போகின்றது?
இன்று காலையில் (நேற்று செவ்வாய்க்கிழமை)நானும் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.யும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவை சந்தித்தோம்.குருந்தூர்மலை பற்றிய விடயத்தைப் பற்றிப் பேசியபோது இவ்வாறு அளவீடு செய்வது தனக்குத் தெரியாது என அவர் கூறினார். அத்துடன் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.யின் தொலைபேசி ஊடாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை தொடர்பு கொண்டு அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உடனடியாக அளவீட்டு பணியை நிறுத்துங்கள் எனக்கூறினார்.
அமைச்சரின் பணிப்பை ஏற்று 612 ஏக்கர் காணிகளை அளவீடு செய்வதனை தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிறுத்துகின்றாரா?இந்த நாட்டில் ஒரு அமைச்சருக்குரிய அதிகாரத்தை ,அவர் பிறப்பிக்கின்ற உத்தரவை பணிப்பாளர் நாயகம் நிறைவேற்றுவாரா என்பதனை நாங்கள் நாளைவரை (இன்று) பொறுத்திருந்த பார்க்க வேண்டியுள்ளது என்றார்.

